சென்னை, ஜூன் 2 – ஜெயலலிதா சொத்து குவிப்பு வழக்கில் கர்நாடக அரசு மேல்முறையீடு செய்வது மகிழ்ச்சியான செய்தி என திமுக தலைவர் கருணாநிதி கூறியுள்ளார். இது தொடர்பாக பத்திரிகையாளர்கள் எழுப்பிய கேள்விக்கு கருணாநிதி கூறியதாவது;
“ஜெயலலிதா மீதான சொத்துக்குவிப்பு வழக்கில், கர்நாடக அரசு மேல்முறையீடு செய்யப் போவதாக வந்துள்ள செய்தி மகிழ்ச்சியான செய்தியாகும்”.
“நீதியை நிலைநாட்ட யார் முன்வந்தாலும் அவர்களை வரவேற்கத் தயாராக இருப்பவன் நான் என்பதால், கர்நாடக அரசின் முடிவை வரவேற்கிறேன்”.
“தமிழ்நாட்டில் தற்போது தேர்தல்கள் எப்படி நடைபெறுகிறது என்பதை ஏற்கனவே நேரில் உணர்ந்த கட்சிகள், இனியும் தாங்கள் இந்த ஜனநாயக முரண்பாடுகளுக்குப் பலியாகத் தயாராக இல்லை என்பதால்தான், ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலை பெரும்பாலான எதிர்க்கட்சிகள் புறக்கணித்துள்ளன. இது வரவேற்கத்தக்க செய்தியாகும்”.
மேலும், “டிராபிக் ராமசாமி பல கட்சிகளின் தலைவர்களைச் சந்தித்து ஆதரவு கேட்டிருக்கிறார். அதுபோலத்தான் எங்களையும் கேட்டிருக்கிறார். நாங்கள் அதைப் பரிசீலிப்பதாகச் சொல்லியிருக்கிறோம்” என்று கருணாநிதி கூறியுள்ளார்.