Home அவசியம் படிக்க வேண்டியவை வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினரை கைகழுவுகிறது சிங்கப்பூர்!

வேலைவாய்ப்புகளில் வெளிநாட்டினரை கைகழுவுகிறது சிங்கப்பூர்!

515
0
SHARE
Ad

Singaporeசிங்கப்பூர், ஜூன் 3 – வேலைவாய்ப்பு, பாதுகாப்பு, நியாயமான சம்பளம் என வௌிநாட்டு தொழிலாளர்களின் சொர்க்கபுரியாக இருந்து வரும் சிங்கப்பூர், இனி அந்த வாய்ப்புகளுக்கான வாயிற்கதவுகள் அனைத்தையும் இறுக்கமாக மூடிக்கொள்ள முடிவெடுத்துள்ளது.

அந்நிய நாட்டவர்களுக்கு  அதிக வேலைவாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்தால், அடுத்த சில வருடங்களில் சொந்தநாட்டு குடிமக்கள்  வேலைவாய்ப்புகளில் தங்களை சிறுபான்மையினராக கருதும் சூழல் உருவாகும் என அந்நாட்டின் மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் லிம் ஸ்வி சே சமீபத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையின் மூலம் சிங்கப்பூரின் இந்த முடிவு தெளிவாகத் தெரிய வருகிறது.

ஆசிய நாடுகளில் உள்ள மக்கள் தங்கள் நாட்டை விடுத்து வேலை வாய்ப்புகளுக்காக வெளிநாடுகளுக்கு செல்ல முடிவெடுத்தால் அவர்களின் விருப்பத் தேர்வாக சிங்கப்பூர் முன்னிலையில் இருக்கும்.

#TamilSchoolmychoice

தனது சட்டதிட்டங்கள் மூலம் அந்த அளவிற்கு வெளிநாட்டினரை ஈர்த்துள்ள சிங்கப்பூர், கடந்த ஆண்டு வௌிநாட்டவருக்கான வேலை வாய்ப்புகள் குறித்து புதிய கொள்கைகளை வெளியிட்டது. அந்த கொள்கைகளின் படி, வௌிநாட்டவர்களுக்கான வேலை வாய்ப்புகளை குறைத்துக் கொள்ள முடிவெடுக்கப்பட்டுள்ளது.

இதற்கு அங்குள்ள நிறுவனங்கள் மறுப்பு தெரிவித்து வந்தாலும், சிங்கப்பூர் அரசு உள்நாட்டினரின் வேலை வாய்ப்பினை பெருக்குவதில் முனைப்பு காட்டி வருகிறது. சிங்கப்பூர் நிறுவனங்கள், உற்பத்தி மற்றும் விற்பனை துறைகளிலாவது வெளிநாட்டினரை பணி அமர்த்தினால், அந்த துறைகளின் வளர்ச்சி அதிகரிக்கும் என அரசை வலியுறுத்தின. ஆனால் சிங்கப்பூர் அரசு அதற்கு, உள்நாட்டு தொழிற்சங்கங்கள் மூலம் உள்ளூர் பணியாளர்களுக்கு அதிக வேலைவாய்ப்பு கொடுக்கும் படி அறிவுறுத்தி உள்ளது.

இது தொடர்பாக அந்நாட்டு மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சர் லிம் ஸ்வி சே வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-“வெளிநாட்டினர் வேலைக்காக தொடர்ந்து சிங்கப்பூருக்கு வருகின்றனர். இந்த எண்ணிக்கை வருடாவருடம் அதிகமாவதால், அவர்களை கட்டுப்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. இதன் மூலம் சிங்கப்பூர் மக்களின் வேலைவாய்ப்பினை பெருக்க முடியும்” என்று தெரிவித்துள்ளார்.

இதன் மூலம் ஆசியர்களின் கவனம் வளைகுடா நாடுகள் பக்கம் திரும்பி உள்ளது.