புது டெல்லி, ஜூன் 3 – இந்தியாவில் விஸ்வரூபம் எடுத்துள்ள மேகி நூடுல்ஸ் விவகாரத்தில் அதன் விளம்பரங்களில் நடித்த நடிகர் அமிதாப்பச்சன் மற்றும் நடிகைகள் மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகியோர் கைதாவதற்கான வாய்ப்புகள் அதிகரித்துள்ளன.
இந்தியாவில் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை மேகி நூடுல்ஸ் விருப்ப உணவாக மாறிப்போனதற்கு மிக முக்கிய காரணங்கள் இரண்டு. ஒன்று வித்தியாசமான அந்த நூடுல்ஸின் சுவை மற்றொன்று தொலைக்காட்சிகளில் நொடிக்கு நொடி வெளியாகும் அந்த உணவுப் பொருளின் விளம்பரம். தற்போது அவை இரண்டும் தான் அந்த நிறுவனத்திற்கும், மேகியின் விளம்பரத்தில் நடித்த நடிகர், நடிகைகளுக்கும் பெரும் சிக்கலை ஏற்படுத்தி உள்ளது.
மேகி நூடுல்ஸில் சுவைக்காக, உடல் உபாதையை ஏற்படுத்தும் அலுமினியம் அதிக அளவில் கலக்கப்படுவதாக டில்லி உணவு தரக்கட்டுப்பாட்டு ஆய்வகம் இன்று அறிவித்துள்ளது. இதே போன்று, மேகி நூடுல்ஸ் பாதுகாப்பற்ற உணவாகப் பீகார் உட்பட பிற மாநிலங்களும் அறிவித்துள்ளன. தமிழக அரசு மேகி நூடுல்ஸின் தரத்தினை அறிந்து கொள்ள மாதிரிகளை எடுத்துள்ளது.
இந்நிலையில் பீகார் மாநிலத்தின் முஸாஃபர்பூர் மாவட்ட நீதிமன்றம், வழக்கறிஞர் சுதிர் குமார் ஓஜா என்பர் தாக்கல் செய்த மனுவில் நேற்று தீர்ப்பளித்துள்ளது.
அந்தத் தீர்ப்பின் படி, வழக்கு விசாரணைக்குத் தேவைப்பட்டால் மேகி விளம்பரத்தில் நடித்த அமிதாப் பச்சன், மாதுரி தீட்சித், பிரீத்தி ஜிந்தா ஆகிய மூவரையும், இவர்களை நடிக்க வைத்த நெஸ்லே நிறுவன அதிகாரிகளையும் கைது செய்யலாம் எனத் தெரிவித்துள்ளது.