ராமேஸ்வரம், ஜூன் 4 – 1964 ஆம் ஆண்டு உருவான பெரும் புயலாலும் கடல் கோளாலும் முற்றிலும் அழிந்து போனது ராமேஸ்வரம் அருகிலுள்ள தனுஷ்கோடி தீவு.
தற்போது சிதிலமாகிப் போன சில கட்டிடங்களின் பகுதிகள் மட்டுமே எஞ்சியுள்ளன.அந்தப் பேரழிவுக்குப் பின், ஒரு சிலர் வீடமைத்து இன்னமும் அங்கே வாழ்ந்து வருகின்றனர்.
தனுஷ்கோடி வாழ் மக்களும் சுற்றுலாப் பயணிகளும் 1964 முதல் இன்று வரை கடந்த 51 ஆண்டுகளாகத் தனுஷ்கோடிக்குச் செல்ல சாலை வசதியின்றி அவதிப்பட்டு வருகின்றனர்.
பிரதமராக மோடி பதவியேற்றதும் தனுஷ்கோடிக்கு முதல் கட்டமாக 5 கிலோ மீட்டர் தூரத்திற்குத் தேசிய சாலை அமைக்க 27 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு, கடந்த அக்டோபரில் அதற்கான பணி துவங்கியது.
முகுந்தராயர் சத்திரம் கடற்கரையில் இருந்து தனுஷ்கோடி செல்லும் பாதைக்குக் கற்கள் நிரப்பப்பட்டு, கடல் அரிப்பிலிருந்து சாலையைப் பாதுகாக்க இருபுறமும் பாறாங்கற்களால் தடுப்புவேலி அமைக்கப்பட்டது.
இன்னும் ஓரிரு வாரத்தில் தார்ச் சாலை அமைக்கும் பணியைத் தொடங்கி, விரைவில் பணியை நிறைவு செய்ய அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.