சென்னை, ஜூன் 4- ரஜினி நடித்த லிங்கா படத்தின் பிரச்சனை இன்னமும் ஓய்ந்த பாடில்லை.லிங்கா படத்தில் நட்டம் ஏற்பட்டதால் விநியோகஸ்தர்கள் மற்றும் திரையரங்க உரிமையாளர்கள் ஆரம்பத்தில் பிரச்சனை செய்தனர்.
பின்னர் பணம் கொடுக்க ரஜினி தரப்பு முன் வரவே, ஒரு குறிப்பிட்ட தொகையும் கொடுக்கப்பட்டுப் பிரச்னையும் சுமூகமாகத் தீர்க்கப்பட்டது.
ஆனால், தற்போது பணம் முழுமையாகத் தரவில்லை என்று மீண்டும் பிரச்சனை வெடித்துள்ளது. இது தொடர்பாக இரண்டு நாட்களாகப் பத்திரிக்கையாளர் சந்திப்பும் நடந்து வருகிறது.
இன்று நடந்த பத்திரிக்கையாளர் சந்திப்பில் விநியோகஸ்தர் சிங்கார வேலன், தயாரிப்பாளர் தாணு மீது மான நஷ்ட வழக்கு போடவிருப்பதாக அறிவித்துள்ளார்.
“லிங்கா படத்திற்கும் தாணுவிற்கும் என்ன சம்பந்தம்? லிங்காவில் இழப்பு ஏற்பட்டதற்காக நாங்கள் மீடியாவின் துணையை நாடுவதில் தாணுவிற்கு ஏன் வருத்தம் வருகிறது?
தலைவலியும் நோவும் தனக்கு வந்தால் தான் தெரியும் என்பார்கள். ஆளவந்தான் படத்தில் இழப்பு ஏற்பட்டபோது ‘ ஆளவந்தான் என்னை அழிக்க வந்தான்’ என்று இவர் பேட்டி கொடுத்ததை மறந்து விட்டாரா?
லிங்கா பிரச்சனையில் திருப்பூர் சுப்ரமணி ஈடுபட்டிருக்கும் நிலையில், அவருக்கும் எங்களுக்கும் நடந்து வரும் பிரச்சனையில், தாணு தலையிட வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம்” எனத் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார் சிங்காரவேலன்.
அதோடு மட்டுமில்லாமல், இதுவரை கொடுப்பதாக ஒப்புக்கொண்ட பன்னிரெண்டரைக் கோடி போக, மேலும் பதினைந்து கோடி நட்ட ஈடாகக் கொடுக்க வேண்டுமென்றும், அவ்வாறு தராவிட்டால் ரஜினி வீட்டு முன்பு போராடப் போவதாகவும் அவர் அறிவித்துள்ளார்.