ஆந்திரா, ஜூன் 5 – கொல்கத்தாவில் சம்பந்தப்பட்ட காட்சிகளை ஆந்திராவில் படமாக்க படக்குழு திட்டமிட்ட போது, அங்கு எல்லாம் வேண்டாம் என மறுப்புத் தெரிவித்திருக்கிறார் தல அஜீத்.
‘என்னை அறிந்தால்’ படத்தைத் தொடர்ந்து ‘வீரம்’ இயக்குநர் சிவா இயக்கத்தில் நடித்து வருகிறார் அஜித். இப்படத்தை ஏ.எம்.ரத்னம் தயாரித்து வருகிறார். ஸ்ருதிஹாசன் நாயகியாகவும், அஜீத்தின் தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வருகின்றனர்.
படத்திற்கு அனிருத் இசை, நகைச்சுவைக்குச் சூரி என ஒப்பந்தம் செய்யப்பட்டுப் பணியாற்றி வருகிறார்கள். இப்படத்தின் முதற்கட்டப் படப்பிடிப்பு சென்னை பின்னி மில்லில் துவங்கி நடைபெற்றது.
படத்தின் முக்கியக் கதையம்சம் கொல்கத்தாவில் நடைபெறுவதால் அங்கு சென்று படமாக்கத் திட்டமிட்டது படக்குழு. ஆனால், மொத்தப் படக்குழுவையும் அங்கு அழைத்துச் சென்று படப்பிடிப்பு நடத்தினால் காசு விரயம் ஏற்படும் என ஆந்திராவில் படமாக்கலாம் என்று ஆலோசித்திருக்கிறார்கள்.
20 தமிழர்கள் சுட்டுக் கொலை செய்யப்பட்ட விவகாரத்தால் ‘இப்போதைக்கு ஆந்திராவில் படப்பிடிப்பு வேண்டாமே’ என்று மறுப்புத் தெரிவித்திருக்கிறார் அஜீத்.
அதனைத் தொடர்ந்து சென்னையில் கொல்கத்தா மாதிரியான அரங்குகள் அமைக்கப்பட்டு படப்பிடிப்பு நடைபெற்றது. கொல்கத்தா சம்பந்தப்பட்ட பல காட்சிகளை அரங்கிற்குள்ளேயே படமாக்கிவிட்டு, மிக முக்கியமான காட்சிகளை மட்டும் கொல்கத்தாவில் படமாக்க இருக்கிறார்களாம்.
சூரி, மயில்சாமி, ‘லொள்ளு சபா’ சாமிநாதன், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன் என ஒரு நகைச்சுவை கூட்டணியையே இப்படத்தில் களம் இறக்கி இருக்கிறார்கள்.
மேலும் அஜீத் – சூரி சம்பந்தப்பட்ட ஒரு நகைச்சுவைக் காட்சியை இரண்டு நாட்களுக்குச் சென்னையில் படமாக்கி இருப்பது குறிப்பிடத்தக்கது.