கோலாலம்பூர், ஜூன் 12 – முன்னாள் அமைச்சரும் முன்னாள் அம்னோ மகளிர் தலைவியுமான டான்ஸ்ரீ ரபிடா அசிஸ் (படம்) “அரசாங்க இலாகாக்கள் தங்களை நாடி வரும் மக்களுக்குச் சேவையை எவ்வாறு சிறப்பாக வழங்குவது என்பது குறித்துக் கவனம் செலுத்த வேண்டுமே தவிர, அவர்கள் என்ன ஆடையில் வருகின்றார் என்பது குறித்துக் கவனம் செலுத்த வேண்டாம். இது காலத்துக்கு ஒவ்வாத ஒன்று” எனக் கண்டனம் தெரிவித்துள்ளார்.
“ஆடை அணிவது போன்ற விவகாரங்களைக் குறுகிய கண்ணோட்டத்தோடும், சுயநலத்தோடும் பார்க்கும் போக்கு இருக்கக் கூடாது. மக்களின் பிரச்சனைகளையும், அதற்கான தீர்வுகளையும் மட்டும் பார்க்க வேண்டும்” என்றும் அவர் வலியுறுத்தினார்.
அமைச்சராக இருந்த காலத்திலும், அம்னோ மகளிர் தலைவியாக வலம் வந்த காலங்களிலும், மலாய்ப் பெண் தலைவர்களிடையே ஒரு முன்னோடியாகத் திகழ்ந்தவர் ரபிடா அசிஸ். அவர் மலாய்-முஸ்லீம் பெண்களுக்குரிய ‘துடோங்’ என்ற பாதி முகத்தை மறைக்கும் ஆடை அணியாமல் அரசியல் கூட்டங்களிலும், பொது நிகழ்வுகளிலும் கலந்து கொள்வார். அனைத்துலக வாணிப அமைச்சராக, அனைத்துலக மாநாடுகள் பலவற்றில் மலேசியாவைப் பிரதிநிதித்து, சரளமான ஆங்கிலத்தில் அனைத்துலகப் பொருளாதார விவகாரங்கள் குறித்து வெளுத்து வாங்குவார் ரபிடா.
“பல இன, பல சமய, பன்முகக் கலாச்சாரப் பின்னணியைக் கொண்ட மலேசியர்கள் அதிகார மையங்களுக்கு வருகை தரும்போது, எது சரி, எது தவறு என்பது போன்ற கேள்விகளுக்கு இடமளிப்பதும், உங்களின் மத நம்பிக்கைகளைத் திணிப்பதும் நியாயமல்ல” என்றும் ரபிடா அசிஸ் தனது பேஸ்புக் எனப்படும் முகநூல் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.
தனிமனிதர்களின் ஆடை அலங்காரங்கள் குறித்துத் தனக்குத் தெரிந்தவரையில் எந்தவிதக் கட்டுப்பாடும் இல்லை என்றும் கூறியுள்ள ரபிடா, அரசாங்க இலாகாக்களில் வாடிக்கையாளர் முகப்புகளில் பணிபுரிபவர்கள் தங்களின் அதிகார எல்லைக்கு மீறிச் செயல்படக் கூடாது என்றும் அறிவுறுத்தியுள்ளார்.
படம்: EPA