Home அவசியம் படிக்க வேண்டியவை “இனிமே இப்படித்தான்” – தன்னை மட்டுமே நம்பும் சந்தானத்தின் தன்னம்பிக்கை வெற்றி!

“இனிமே இப்படித்தான்” – தன்னை மட்டுமே நம்பும் சந்தானத்தின் தன்னம்பிக்கை வெற்றி!

1076
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 12 – இன்றைக்கு தமிழ்ப் படங்களில் எந்த ஒரு கதாநாயகனை எடுத்துக் கொண்டாலும், “சந்தானத்தை எனது நண்பனாக படத்தில் நுழையுங்கள், அப்போதுதான் படத்தின் வெற்றிக்கு உத்தரவாதம்” என அலைந்து கொண்டிருக்க,

சந்தானமோ, யாரையும் நம்பாமல்,  யாரையும் துணைக்குக் கூடச் சேர்த்துக் கொள்ளாமல், தன்மேல் மட்டும்-வலுவான திரைக்கதை-இயக்கத்தின் மீதும் நம்பிக்கை வைத்து வெற்றிக் கொடி நாட்டியிருக்கும் படம் ‘இனிமே இப்படித்தான்’.

Inimey Ippadithan-Ashna-Santhanam

#TamilSchoolmychoice

அந்த முயற்சியில் வெற்றியும் பெற்றிருக்கின்றார்.  அதிலும் இரண்டு கதாநாயகிகளுடன் ‘வூடு’ கட்டி அடித்திருக்கும் சந்தானத்திற்கு லொள்ளு அதிகம்தான் என மற்ற கதாநாயகர்கள் காதுகளில் நிச்சயம் புகை மூட்டம் கிளம்பியிருக்கும்.

கதை – திரைக்கதை

பலப்பரிட்சை எதுவும் பார்க்காமல், அதிகமாக ‘ரிஸ்க்’ எடுக்காமல், தெளிவானத் திரைக்கதையோடு களம் இறங்கியிருக்கின்றார் சந்தானம். முதல் காட்சியிலேயே பேய்முகத்தோடு ஒரு பெண்ணைக் காட்ட, நாமும் பயந்து விடுகின்றோம், இதுவும் பேய்ப் படம்தானோ என்று!

நல்லவேளையாக அப்படி ஏதும் இல்லை!

Inimey Ippadithan Poster 1

வழக்கமாக வயது வந்த ஒரே பிள்ளைக்கு எல்லாப் பெற்றோர்களும் பெண்பார்க்க கஷ்டப்படுவதைப் போல சந்தானத்தின் பெற்றோரும் கஷ்டப்படுகின்றார்கள்.

பெற்றோர் பார்த்து வைக்கும் திருமணத்தை நண்பர்கள் குழாமினர் குறைகூற காதலித்துத் திருமணம் செய்ய முடிவெடுத்து கதாநாயகி அஷ்னா ஜாவேரியை விரட்டி விரட்டிக் காதலிக்கின்றார் சந்தானம். அவர் முதலில் மறுப்புக் கூற,  வேண்டா வெறுப்பாக பெற்றோர் பார்க்கும் மற்றொரு கதாநாயகி அகிலா கிஷோரைத் திருமணம் செய்ய சம்மதிக்கின்றார்.

ஆனால், இடையில் அஷ்னாவின் தோழி மூலம் அஷ்னா  சந்தானத்தைத்தான் காதலிக்கின்றார் எனத் தெரிந்து கொண்டு தனது காதலைத் தொடரும் சந்தானம்,  இடைவேளைக்குப் பின், (வழக்கம்போல்) மாமாவாக வரும் தம்பி ராமையாவின் துணையோடு அகிலாவுடனான திருமணத்தை நிறுத்தி வைக்கத் திட்டங்கள் போடுகின்றார்.

அந்தத் திட்டங்களில் சந்தானம் வெற்றி பெற்றாரா? இறுதியில் இரண்டு கதாநாயகிகளில் யாரைத் தேர்ந்தெடுத்தார்?  என்பதை கலகலக்க வைக்கும் திருப்பங்களுடன் சொல்லியிருக்கின்றார்கள்.

பலம்: தெளிவான திரைக்கதை – இயக்கம்

எங்கேயும் தொய்வில்லாத, தெளிவான திரைக்கதை. சுவையான, சுவாரசியமான சின்னச் சின்னத் திருப்பங்களோடு போரடிக்காமல் கதையைக்  கொண்டு சென்றிருக்கும் விதத்தில் இயக்குநர் முருகானந்த் பாராட்டைப் பெறுகின்றார்.

முருகானந்த் என்ற பெயரில் ஒருவர் என்று நினைத்தால் ஏமாந்து போவீர்கள். இவர்கள் முருகன், ஆனந்த் என இரட்டையர் இயக்குநர்களாம். சந்தானத்தோடு, விஜய் தொலைக்காட்சியில் ‘லொள்ளு சபா’ காலத்தில் இருந்தே வசனங்கள்-இயக்கத்தில் உதவி புரிந்தவர்களுக்கு சந்தானம் வழங்கியிருக்கும் வாய்ப்புதான் ‘இனிமே இப்படித்தான்’. அவர்களும் சந்தானத்தையும், இரசிகர்களையும் ஏமாற்றவில்லை.

நீண்ட நாட்களுக்குப் பின்னர் தமிழ்த் திரையுலகிற்கு கிடைத்திருக்கும் இரட்டை இயக்குநர்கள் முருகானந்த்.

எங்கேயும் அனாவசியக் காட்சிகள் இல்லை. திருப்பங்கள் கதையோடு இயல்பாக இழைத்துப் பின்னியிருப்பதோடு,  சில இடங்களில் நம்மை நிமிர்ந்து உட்காரவும் வைக்கின்றன. உதாரணமாக, இறுதிக் காட்சி – யாரும் எதிர்பாராத – ஆனால் ஏற்றுக் கொள்ளக் கூடிய திருப்பம்.

படத்தின் பலம் சந்தானம்! சந்தானம்! சந்தானம்!

படத்தை தூக்கி நிறுத்துவதும், பெரும் பலமும் சந்தானத்தின் தோள்களில்! மனிதர் யாரையும் நம்பவில்லை. கூட இருக்கும் நண்பர்கள் குழாமில் கூட தெரிந்த முகங்கள் யாரையும் சேர்த்துக்கொள்ளவில்லை, விடிவி கணேஷைத் தவிர!

inimey-ippadithaan- poster

அந்த வகையில் சந்தானத்தின் தைரியத்தையும், தன்னம்பிக்கையையும் நிச்சயம் பாராட்டத்தான் வேண்டும். நடை, உடை பாவனைகளிலும், தோற்றத்திலும், இன்றைக்கிருக்கும் பல கதாநாயகர்களை விட அழகாகக் காட்சி தருகின்றார் சந்தானம்.

“சந்தானம், காமெடி நடிகராக இருந்தாலும், அழகாக சட்டையணிந்து, அதை காற்சட்டையில் உள்ளே செருகிக் கொண்டு (‘இன்’ செய்து) வரும்போது ஒரு கதாநாயகனைப் பார்ப்பது போல் இருக்கும்” – இது இயக்குநர் சேரன் ஒருமுறை சந்தானம் குறித்து வழங்கிய பாராட்டுப் பத்திரம்.  இந்தப் படத்தைப் பார்க்கும்போது சந்தானத்திற்கு அந்தப் பாராட்டு பொருத்தமான பாராட்டுதான் எனக்கூறத் தோன்றுகின்றது.

படம் முழுக்க அவ்வளவு அழகாக வருகின்றார் சந்தானம். ஒரு பாடல் காட்சியில் வெற்றுடம்போடு, அந்தக் கால ராஜ உடையில் பவனி வரும் போதுகூட சந்தானம் அழகாகத் தெரிகின்றார். சில கதாநாயகர்கள்கூட அப்படி வர இணங்குவார்களா என்பது சந்தேகம்தான்!

படத்தின் மற்ற பலம் – அகிலா கிஷோர், விடிவி கணேஷ், தம்பி ராமையா

பார்த்திபனின் ‘திரைக்கதை வசனத்தில்’ – முத்தக் காட்சி வரை கிளுகிளுக்க வைத்து நம்மைக் கவர்ந்த அகிலா கிஷோர் இதில் இரண்டாவது கதாநாயகியாக பாதிக்குப் பின்னரே வந்தாலும், தனது அழகாலும்,  சிரிப்பாலும், தோற்றத்தாலும், மற்றொரு கதாநாயகி அஷ்னாவைப் பின்னுக்குத் தள்ளிவிடுகின்றார்.

Inimey -ippadithaan-Santhanam-Akhila-Ashna

சந்தானத்தின் 2 கதாநாயகிகள் – அஷ்னா ஜாவேரி (இடம்) அகிலா கிஷோர் (வலம்)

வழக்கம்போல், காதலுக்கு ஆலோசனை கூறும் பாகத்தில் கரகரக் குரலில் விடிவி கணேஷ் வெளுத்து வாங்க,  இன்னொரு பக்கத்தில் திருமணத்தை நிறுத்த ஆலோசனை கூறும் பாத்திரத்தில் தம்பி ராமையா பலவிதமான குரல்களில், ஆயிரம் வகையான முக பாவங்களோடு சிரிப்பூட்டுகின்றார்.

இசை எடுபடவில்லை

படத்தின் இசையமைப்பாளர் சந்தோஷ் தயாநிதி. ஏ.ஆர்.ரஹ்மானின் உதவியாளராம். ஆனால், குருவின் பெயரைக் காப்பாற்றவில்லை. எந்தப் பாடலும் மனதில் நிற்கவில்லை. பின்னணி இசையும் சுமார்தான்.

ஏ.ஆர்.ரஹ்மானின் சிஷ்யர் என்னும்போது குறைந்த பட்சம் தனக்கு கிடைத்த வாய்ப்பை வைத்து அதிரடி இசைப் படைப்பை வழங்கியிருக்க வேண்டாமா?

ஒளிப்பதிவு

கதைக்குத் தேவையான தெளிவான ஒளிப்பதிவை கண்களுக்கு உறுத்தல் இல்லாமல் வழங்கியிருக்கின்றார் ஒளிப்பதிவாளர் கோபி ஜெகதீஸ்வரன். அதிகம் வேலை வைக்காத, ஆர்ப்பாட்டங்கள் இல்லாத ஒளிப்பதிவு.

ரசிக்க வைக்கும் நகைச்சுவை வசனங்கள்

படம் முழுக்க வரும் சந்தானத்தின் நகைச்சுவைத் தோரணங்கள், வெடிகள் வாய்விட்டு சிரிக்க வைக்கின்றன. சந்தானம் காதலியைப் பார்த்து பயந்து கழிவறையில் ஒளிந்து கொள்ள அங்கே, நகைச்சுவை நடிகர் லொள்ளு சபா மனோகருடன் அடிக்கும் ஐந்து நிமிட லூட்டியில் திரையரங்கமே அதிர்கின்றது.

சந்தானத்தின் உழைப்புக்கும்,  தன்னம்பிக்கைக்கும் கிடைத்திருக்கும்  மற்றொரு வெற்றிதான் ‘இனிமே இப்படித்தான்’.

-இரா. முத்தரசன்