Home நாடு ம இ கா வழக்கு தள்ளுபடியா? அதிரடித் தீர்ப்பால் ம இ கா வில் அணி...

ம இ கா வழக்கு தள்ளுபடியா? அதிரடித் தீர்ப்பால் ம இ கா வில் அணி மாற்றமும் நிகழலாம்!

854
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 13 – (எதிர்வரும் ஜூன் 15ஆம் தேதி மஇகாவுக்கும், சங்கப் பதிவிலாகாவுக்கும் இடையிலான வழக்கில் தீர்ப்பு வழங்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது. அது குறித்த தனது கண்ணோட்டத்தை வழங்குகின்றார் மூத்த பத்திரிக்கையாளரும், மலேசியத் தமிழர் தன்மான இயக்கத்தின் தேசியத் தலைவருமான ‘எழுத்தாண்மை ஏந்தல்’ பெரு.அ.தமிழ்மணி)

Tamil Maniம இ காவின் ஐந்து பேர், சங்கங்களின் பதிவு இலாகா மீது தொடுத்த வழக்கின் இறுதித் தீர்ப்பு திங்கட்கிழமை அதாவது எதிர்வரும் ஜூன் 15 ஆம் தேதி அதிரடியாக அமையும். இந்தத் தீர்ப்பு வழக்கைத் தொடுத்த ம இ கா வின் தலைவரான டத்தோஸ்ரீ பழனிவேலுவிற்கு மிகவும் பாதகமாக அமையும் என்று சட்டத்துறை வட்டாரம் திட்டவட்டப்படுத்துகிறது.

இவருடன் இணைந்து நீதிமன்றத்திற்கு வழக்கைக் கொண்டுச் சென்ற ஜொகூர் டான்ஸ்ரீ பாலகிருஷ்ணன், நெகிரி டத்தோ சோதிநாதன், சிலாங்கூர் பிரகாஷ்ராவ், கோலாலம்பூர் இராமலிங்கம் ஆகியோருக்கும் இத்தீர்ப்பு அதிர்ச்சியாகவே அமையும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

#TamilSchoolmychoice

மேற்கண்ட ஐவரும் இணைந்து தொடுத்த இவ்வழக்கு செலவுத் தொகையுடன் தள்ளுபடியாக பெருமளவு சாத்தியம் இருக்கிறது. இவ்வழக்கு குறித்து கடந்த மாதம் நான் கணித்திருந்த கணிப்புப் படியே வழக்கின் போக்கு அமையும் என்பதில் துளியளவும் மாற்றமில்லை என்பதில் நான் உறுதியாக இருக்கின்றேன்.

இதன் அடிப்படையில் எதிர்வரும் 15ஆம் தேதி தீர்ப்பு பழனி தரப்புக்கு பெரும் சோதனையாக அமையும் என்பதில் ஏதும் மாற்றமில்லை!

டாக்டர் சுப்ராவை நீக்க சதி!

SUBRAஆனால், இந்த தீர்ப்பு தனக்கு சாதகமாக அமைந்தால், ம இ கா துணைத் தலைவரான டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தையும், உதவித் தலைவருமான டத்தோ சரவணனையும் கட்சியிலிருந்து நீக்குவதற்கான ஒரு திட்டம், பழனி வீட்டு “சமையல் அறை அரசியல் கூட்டத்தில்” (சிச்சன் டேபல்) ஆறுமாதத்திற்கு முன்பு எடுக்கப்பட்டு விட்ட முடிவை அமல்படுத்த சாதகமாக இருக்கும் என்று எண்ணிய அந்த எண்ணம் நிச்சயமாக தவிடுப்பொடியாகி விடும்.

ஏற்கனவே, அந்த கிச்சன் டேபல் கூட்ட முடிவுப்படிதான் டத்தோ டி.மோகன், டத்தோஸ்ரீ வேள்பாரி, தித்திவங்சா ராஜா சைமன், பூச்சோங் டத்தோ சக்திவேல், கோலாலம்பூர் டத்தோ ரமணன் ஆகியோர் கட்சியிலிருந்து நீக்கப்பட்டனர்.

அதேபோன்ற ஓர் அதிரடியை 15ஆம் தேதி தனக்கு சாதகமாக தீர்ப்பு அமைந்தால் அந்தத் தீர்ப்பை முன்வைத்து டரக்டர் சுப்ரா, டத்தோ சரவணனை அரசியல் ரீதியாக முடித்துவிட பழனியின் வீட்டு சிச்சன் டேபல் கூட்டம் முடிவு எடுத்திருந்தது. ஆனால் இத்தீர்ப்பு பழனி தரப்புக்கு, பெரும் பாதகத்தை ஏற்படுத்தப் போகிறது. அதாவது இவ்வழக்கு செலவுத் தொகையுடன் தள்ளுப்படியாவதற்கு சாத்தியம் இருப்பதால், சங்கங்களின் பதிவு இலாகா இவ்வழக்கில் வெற்றி பெற்றதாக அமையும். அதேவேளை பழனி தரப்பு தோல்வி கண்டதாக கருத இடமளிக்கும் என்று இதுவரைக்குமான இவ்வழக்கின் போக்கை கவனித்து வந்துள்ள சட்டவல்லுனர்கள் உறுதிப்படுத்துகின்றனர்.

மலாக்கா ம இ கா மாநாடு!

G-Palanivel1மலாக்காவில் நடைபெற்ற ம இகா பேராளர் மாநாட்டில் கட்சித் தேர்தலில் போட்டியிட்ட ஒரு சிலருக்கு பாதகமாகவும் ஒரு சிலருக்கு சாதகமாகவும் நடந்து கொண்டு தேர்தலில் திட்டமிட்டே பழனி தில்லுமுல்லு செய்து, தனக்கு வேண்டியவர்களை வெற்றி பெற வைத்ததோடு, தனக்கு வேண்டாதவர்களைத் தோல்வியுற வைத்தார் என்று எழுந்த குற்றச்சாட்டின் அடிப்படையில் சங்கங்களின் பதிவு இலாகாவுக்கு பலர் கொடுத்த புகாரையொட்டி. மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பழனியின் தில்லுமுல்லு அம்பலத்திற்கு வந்தது.

அதனால் ம இ காவை, மறு தேர்தலுக்கு பதிவு இலாகா உத்தரவிட்டது. அதற்கு ஒப்புக்கொள்ள மறுத்த பழனி தரப்பு நீதிமன்றம் சென்றது…

நீதி மன்றத்தின் மூலம், தனது எல்லாவகையான தில்லுமுல்லுகளுக்கும் தீர்வு கண்டுவிட முடியும் என்று பழனிதரப்பு முழுமையாக நம்பி, தொடர்ந்து பல்வேறு சதித்திட்டங்களில் ஈடுபட்டு வந்துள்ளனர்

பிரதமர் தலையிட்டும் தீர்வில்லை

najib3இதனாலேயே பிரதமர் தலையிட்டு மூன்றுமுறை பேசியும் பழனி இணங்கிப் போக மறுத்தார். பிரதமர் தலைமையில் நடைபெற்ற கூட்டங்களில் இணங்கிப் போவது போல் நாடகமாடிவிட்டு, பின்னர் தனது வீட்டு சிச்சன் டேபல் கூட்டத்தில் மாறுபட்ட முடிவை எடுப்பதையே வழக்கமாக கொண்டிருந்தார்.

இன்னொரு சட்டச்சிக்கல்?

அந்த மாறுபட்ட முடிவின் எதிர்விளைவுதான் இன்றைய நீதிமன்ற வழக்காகும். இவ்வழக்கைக் கூட பழனி தரப்பு மத்திய செயலவையின் அனுமதியைப் பெறாமலேயே தொடர்ந்திருப்பதால் இவ்வழக்கை தொடுத்த அனைவரும் இயல்பாகவே ம இ கா வில் தங்களின் உறுப்பியத் தகுதியை இழந்துவிட்டனர்.

இதை ம இ கா வின் துணைச் சட்டவிதி தெளிவாகக் குறிப்பிடுவதால் இத்தீர்ப்புக்குப் பிறகு பழனி தரப்பு இன்னொரு சட்டமோதலை சந்திக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்கு இயல்பாகவே சிக்கிக்கொண்டுள்ளது.

subra-and-palaniஎனவே இத்தீர்ப்பு பழனி தரப்புக்கு பாதகமாக அமையுமானால் அதன்பின் சங்கங்களின் பதிவு இலாகா மேற்கொள்ளப்போகிற பல்வேறு சட்ட முன்வரைவுகளுக்கெல்லாம் பழனி தரப்பு பதில் சொல்லும் தகுதியை இயல்பாகவே இழந்து விட சாத்தியம் உண்டு.

காரணம் நீதிமன்ற நடவடிக்கையில் பதிவு இலாகாவை இழுத்துக்கொண்டு போய் விட்டிருப்பதால், இனி ஒவ்வொரு நடவடிக்கையிலும் பதிவு இலாகா கவனமாகவே ம இ கா விவகாரத்தில் காயை நகர்த்த வேண்டி வரலாம்.

அந்நடவடிக்கை பழனி தரப்புக்கு பெரும் தர்ம சங்கடமாகவும் அமையலாம்.

எனவே எப்படிப் பார்த்தாலும் இவ்வழக்கு மூலம் டாக்டர் சுப்ரா தரப்புக்கு மோசமான குடைச்சலை தரமுடியும் என்று எதிர் பார்த்த பழனி தரப்புக்கு, பெரும்பாதகமாகவே அமையும். இத்தீர்ப்புக்குப் பிறகு பழனியின் ஆதரவு அணியில் பெரும் விரிசல் ஏற்பட்டு டாக்டர் சுப்ரா கரம் வலுப்பெறவே பெருமளவு சாத்தியம் உண்டு என்பதே பெரும்பாலான அரசியல் பார்வையாளர்களின் கருத்தாக பதிவு செய்யப்படுகிறது.

-பெரு.அ.தமிழ்மணி

(இந்தக் கட்டுரையில் இடம் பெற்றுள்ள கருத்துகள் கட்டுரையாளர் பெரு.அ.தமிழ்மணியின் சொந்த, தனிப்பட்ட கருத்துகளாகும். அந்தக் கருத்துகள் செல்லியலின் கருத்துகளோ, செல்லியலைப் பிரதிபலிக்கும் கருத்துகளோ அல்ல. கட்டுரையாளரின் கருத்துகளுக்கு செல்லியல் எந்தவிதத்திலும் பொறுப்பேற்காது.

இந்த கட்டுரையையோ, அல்லது அதன் பகுதிகளையோ மறுபிரசுரம் செய்ய வேண்டுமென்றால், கட்டுரையாளரை நேரடியாகத் தொடர்பு கொண்டு அனுமதி பெறவேண்டும்.

 தமிழ்மணியின் மற்ற எழுத்துப் படிவங்களை maravan madal tamil mani என்ற முகநூல் (பேஸ்புக்)  அகப்பக்கத்தில் காணலாம். அவரைப் பின்வரும் இணைய முகவரியில் தொடர்பு கொள்ளலாம்:

 wrrcentre@gmail.com