மும்பை, ஜூன் 13 – கிரிக்கெட் உலகின் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர் பிஎம்டபிள்யூ நிறுவனத்துடன் நெருங்கிய தொடர்பு வைத்திருப்பது அனைவரும் அறிந்த ஒன்று. கடந்த 2012-ம் ஆண்டு முதல் இந்தியாவில் பிஎம்டபிள்யூ தயாரிப்புகளுக்கான தூதராக அவர் பணியாற்றி வருகிறார். இந்நிலையில் அவரை கௌரவிக்கும் விதமாக அந்நிறுவனம் அவரது பெயரில் புதிய கார் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
‘சச்சின் டெண்டுல்கர் எடிசன்’ (Sachin Tendulkar Edition) என்ற பெயரில் தயாராகி உள்ள இந்த கார், 3 சீரிஸ், 5 சீரிஸ் ஆகிய இரு ரகங்களில் வெளியிடப்பட்டுள்ளது. இந்திய விளையாட்டு வீரர் ஒருவரின் பெயரில் முதல் முறையாக வெளியாகும் பிஎம்டபிள்யூ கார் இது என்பது பெருமை அளிக்கும் ஒன்றாக இருந்தாலும், இதில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் வர்த்தக நோக்கமும் இல்லாமல் இல்லை. இந்தியாவில் ஆடி, மெர்சிடிஸ் ஆகிய ஆடம்பரக் கார்களை ஒப்பிடுகையில் பிஎம்டபிள்யூ-வின் வர்த்தகம் சற்றே மந்தமாக உள்ளது.
இந்தியாவில் தற்போது ஆடம்பரக் கார்களின் வர்த்தகம் போதுமான வளர்ச்சியை பெற்றுள்ளது. இத்தகைய சூழலில் தனது வியாபாரத்தை பெருக்கிக் கொள்ளும் நோக்குடன், இந்தியர்களைக் கவர சச்சின் பெயரில் இத்தகைய விளம்பர உத்தியை பிஎம்டபிள்யூ கையில் எடுத்துள்ளது.
இதற்கு தகுந்தார் போல் சச்சினும் நீண்ட காலமாக பிஎம்டபிள்யூ பிரியராக இருந்து வருகிறார். உலக அளவில் லிமிடெட் எடிசனாக வெளியான 7 சீரிஸ் செடான் காரை வைத்திருக்கும் ஒரு சிலரில் சச்சினும் ஒருவர். இதனை சரியாகப் பயன்படுத்திக் கொண்ட பிஎம்டபிள்யூ, ஒரே கல்லில் இரு மாங்காய்களை அடித்துள்ளது. எவ்வாறாயினும் சச்சின் பெயரில் காரும், அந்த காரில் அவரின் கையொப்பமும் இடம் பெற்று இருப்பது இந்திய கிரிக்கெட் ரசிகர்களுக்கும், இந்தியர்களுக்கும் பெரும் மகிழ்ச்சி அளித்துள்ளது.