சான் பிரான்சிஸ்கோ, ஜூன் 13 – டுவிட்டர் நிறுவனம் பிரபலமாவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்களுள் ஒருவரான டிக் காஸ்டோலோ, அந்நிறுவனத்தின் தலைமை பொறுப்பில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.
கடந்த 5-வருட காலமாக அப்பதவியில் இருந்த அவர், சமீப காலமாக டுவிட்டரின் பொருளாதார வளர்ச்சி இறங்கு முகமாக இருப்பதாலும், அவரின் செயல்பாடுகள் குறித்து கடுமையான விமர்சனங்களை சந்தித்து வருவதாலும் இந்த அதிரடி முடிவை எடுத்துள்ளார்.
கடந்த வருடமே தனது பதவி விலகல் குறித்து காஸ்டோலோ, டுவிட்டர் நிர்வாகத்திடம் பேச்சு வார்த்தை நடத்தி வந்தாலும், தற்போது தான் அதனை டுவிட்டர் நிர்வாகம் ஏற்றுக் கொண்டுள்ளது. 5 வருடங்களாக இப்பொறுப்பில் காஸ்டோலோ மிகச் சிறப்பாக பணியாற்றி உள்ளார். அவரது தலைமையில் கடந்த 2013-ம் ஆண்டு வரை டுவிட்டர் பொருளாதார ரீதியாக ஏறுமுகத்தில் இருந்தது. அதன் பின்னர் டுவிட்டரின் வர்த்தகம் சரியத் துவங்கியது.
இணைய விளம்பரங்களையும், குறுஞ்செய்தியை பிரபலப்படுத்தியதிலும் காஸ்டோலோ பெரும் பங்கு வகித்தார். எனினும், அதன் பிறகு வாட்ஸ்அப் போன்ற செயலிகளின் வளர்ச்சி டுவிட்டரை பெரிய அளவில் பாதிக்கத் தொடங்கியது. பேஸ்புக் நிறுவனம், வாட்ஸ்அப் போன்ற செயலிகளுக்கு ஈடுகொடுக்கும் வகையில் தங்களை மேம்படுத்தி வந்தாலும், டுவிட்டர் அத்தகைய மேம்பாடுகளை ஏற்காமல் இருந்தது தான் அதன் சரிவிற்கு காரணமாக உள்ளது.
இதற்கிடையே, தற்காலிகமாக இந்த பொறுப்பிற்கு ஜேக் டோர்சே பரிந்துரை செய்யப்பட்டுள்ளார். ஜேக் டோர்சே கடந்த சில வருடங்களுக்கு முன்பு டுவிட்டரின் தலைமை நிர்வாகியாக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது.