கோலாலம்பூர், ஜூன் 13 – மலேசியக் கலைத்துறையில் நாட்டிய ஜாம்பவான்களாகத் திகழ்ந்து வரும் குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமியும், குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸும் முதல் முறையாக இணைந்து, தங்களது நாட்டிய மாணவர்களின் நிதிக்காக ‘வர்ணாஞ்சலி’ என்ற மாபெரும் நாட்டிய நிகழ்ச்சியை அண்மையில் அரங்கேற்றினர்.
இந்நிகழ்ச்சி கடந்த மே 30-ம் தேதி, சனிக்கிழமை, இரவு 8 மணியளவில் பெட்டாலிங் ஜெயா, சிவிக் செண்டர் அரங்கத்தில் சிறப்பான முறையில் நடைபெற்றது.
மஇகா தேசியத் தலைவர் மற்றும் இயற்கை வளம், சுற்றுச்சூழல் அமைச்சர் டத்தோஸ்ரீ பழனிவேலும், அவரது மனைவி டத்தின்ஸ்ரீ கனகமும் இந்நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
மேலும், மலேசியா, சிங்கப்பூர், இந்தியா ஆகிய நாடுகளில் இருந்து நடன மேதைகளும், குருமார்களும், மாணவர்களும் இந்நிகழ்வில் பெருந்திரளாகக் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
மனதை லயிக்கச் செய்த அற்புதமான நடனம்
இறைவனையும், குருவையும் வணங்கி நிகழ்ச்சியைத் தொடங்கும் விதமாக, புஷ்பாஞ்சலியில் விநாயகப் பெருமான், முருகப்பெருமான், ஆஞ்சனேயர், விஷ்ணு, உமாபதி என அத்தனை கடவுள்களையும் போற்றும் பாடலும், அதற்கேற்ற நடன அசைவுகளும் இடம்பெற்றிருந்தன.
ஆதி முதல் பாதம் வரை உடலின் எல்லா உறுப்புகளும் அழகுற இயக்கி, விநாயகப் பெருமானின் திருவுருவை குருஸ்ரீ சந்திரமோகன் அப்படியே தனது நடனத்தில் கொண்டு வந்தார். கணபதியின் அத்தனை பிரம்மாண்ட தோற்றத்தை அவரது அசைவுகள் கண்முன்மே கொண்டு வந்து நிறுத்தின.
அதேவேளையில், வில்லில் இருந்து புறப்பட்ட அம்பென குருஸ்ரீ அஜித் பாஸ்கரும் நடனத்தில் தேவையான இடத்தில் வேகத்தையும், தேவையான இடத்தில் நளினத்தையும் கூட்டி பார்வையாளர்களை வியப்பில் ஆழ்த்தினார்.
அதன் தொடர்ச்சியாக, நாட்டிய மாணவர்களின் அற்புதமான நடனங்கள் இடம்பெற்றன. வயது வரம்பின்றி குழந்தை முதல் பெரியவர்கள் வரை அக்குழுவில் இடம்பெற்றிருந்தனர்.
இந்நிகழ்ச்சியில் மொத்தம் 9 நடனங்கள் படைக்கப்பட்டன. அதில் குருஸ்ரீசந்திரமோகன் குச்சிப்புடி நடனங்களையும், குருஸ்ரீ அஜித் பாஸ்கர் பரதநாட்டியமும் ஆடி பார்வையாளர்களை மெய் சிலிர்க்க வைத்தனர்.
தாளம் போட வைத்த தமிழ்ப் பாடல்கள்
“எங்கும் சிதம்பரம் எல்லா சிவமயம்”, “நவரசநிலையே நாட்டியக் கலையே”, “பச்சை மாலை” என நிகழ்ச்சியில் இடம் பெற்றிருந்த தமிழ்ப் பாடல்கள் அரங்கில் இருந்த பார்வையாளர்கள் மெய்மறந்து தாளம் போட வைத்தன.
இது தவிர, இராமாயணம், ஆனந்தத் தாண்டவம், மகிஷாசுர மர்த்தினி, தில்லானா ஆகியவையும் நிகழ்ச்சியில் இடம்பெற்றிருந்தன.
இடையில் 10 நிமிட உணவு இடைவெளியைத் தவிர நிகழ்ச்சி தங்கு தடையின்றி இறுதி வரை வெற்றிகரமாக நடைபெற்றது.
2 மணி நேரங்களுக்கும் கூடுதலாக தொடர்ச்சியாக ஆடினாலும், நடனமாடியவர்கள் முகத்திலோ, அங்க அசைவுகளிலோ சிறிதளவிலும் தொய்வைக் காண இயலவில்லை.
தாளசுத்தம், அங்கசுத்தம், நேர்த்தியான அசைவுகள், உரிய அபிநயங்கள் என நடனங்களும், பாடல்களும், தாளங்களும், மனதை லயிக்கச் செய்தன. பக்கவாத்தியமும், நட்டுவாங்கமும் நேரடியாக மேடையில் பாடுவது போலவே தெரியவில்லை. ஏற்கனவே பதிவு செய்திருந்ததை ஒலிபரப்புவதைப் போல் அவ்வளவு நேர்த்தியாக படைக்கப்பட்டன.
முக்கியப் பிரமுகர்களுக்கு சிறப்பு
நிகழ்ச்சிக்கு சிறப்பு வருகை புரிந்திருந்த டத்தோஸ்ரீ பழனிவேல் மற்றும் டத்தின்ஸ்ரீ கனகம், திரு.தேவேந்திர குருக்கள், திரு.பாண்டித்துறை, திருமதி மல்லிகா, திருமதி இன்பா சுப்ரமணியன் ஆகியோருக்கு நிகழ்ச்சியின் இடையே மேடையில் மாலை மரியாதையுடன் சிறப்பு செய்யப்பட்டது.
நிகழ்சியில் கலந்து கொண்ட நுண்கலை கலாலயத்தின் நாட்டிய குருக்களும் மேடைக்கு அழைக்கப்பட்டு, சிறப்பு செய்யப்பட்டதோடு, குருவையும், ஆடலரசன் நடராஜனையும் பணிந்து பூக்களை சொரிந்து வணங்கினர்.
நிகழ்ச்சியின் இறுதியாக “எல்லாப் பிழைகளையும் பொறுத்தருள்க” என்ற பாடலுடன் ஒட்டுமொத்த நாட்டியமணிகளும் மேடையில் வணங்கிப் பணிந்து சிரம் தாழ்த்த, நிகழ்ச்சியைப் பார்த்துக்கொண்டிருந்த நமக்கோ, நம்மையும் அறியாமல், ஆனந்தக் கண்ணீர் பெருக்கெடுத்து ஓடுவதைத் தடுக்க இயலவில்லை.
இவ்வளவு அற்புதமான நாட்டிய நிகழ்ச்சியை படைத்த குருஸ்ரீ சந்திரமோகன் ராமசாமி மற்றும் குருஸ்ரீ அஜித் பாஸ்கரன் தாஸுக்கு செல்லியல் சார்பில் எங்களது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக்கொள்கிறோம்.
இந்நிகழ்ச்சியைப் பார்க்கத் தவறியவர்களுக்கு மீண்டும் ஒரு அரிய வாய்ப்பு காத்திருக்கிறது. எதிர்வரும் டிசம்பர் 5-ம் தேதி, இரவு 8 முதல் 10 மணி வரை மீண்டும் அதே சிவிக் செண்டர் அரங்கில் நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
– ஃபீனிக்ஸ்தாசன்