பெய்ஜிங், ஜூன் 13 – ஊழல் குற்றச்சாட்டு மற்றும் அதிகாரத்தைத் துஷ்பிரயோகமாக பயன்படுத்திய குற்றச்சாட்டில் சீனாவின் மூத்த கம்யூனிஸ்ட் தலைவரும், முன்னாள் பாதுகாப்பு அதிகாரியுமான ஜூ யோங்காங்க்கு, சீன நீதிமன்றம் ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பு வழங்கியுள்ளது.
சீனாவின் முன்னாள் அதிபர் ஹூ ஜிந்தோவுக்கு மிகவும் நெருக்கமானவரான ஜூ யோங்காங், அவரின் ஆட்சியில், சீன பாதுகாப்பு அதிகாரியாக செயல்பட்டார். அப்போது அவர் வகித்திருந்த பதவியினைத் தவறாகப் பயன்படுத்தினார் என்ற குற்றச்சாட்டு எழுந்தது.
இதனைத் தொடர்ந்து அரசு ரகசியங்களை கசிய விடுதல், ஊழல், அதிகார துஷ்பிரயோகம் செய்தல், ஆகிய குற்றசாட்டுகளின் பேரில் அவர்மீது வழக்கு தொடுக்கப்பட்டது.
இந்த வழக்கு விசாரணையின்போது, தன் மீதான குற்றத்தை ஜூ யோங்காங் ஒப்புக்கொண்டதையடுத்து அவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
கம்யூனிஸ்ட் கட்சியில் மூத்த முக்கிய தலைவர்களில் ஒருவரான ஜூவுக்கு வழங்கப்பட்டுள்ள இந்த ஆயுள் தண்டனை, அக்கட்சியினரிடையே பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.