மும்பை, ஜூன் 13 – நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகி நூடுல்சுக்கும், மற்ற 9 ரகங்களுக்கும் மத்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரஆணையம், மகாராஷ்டிர அரசு விதித்திருந்த தடையை நீக்க நேற்று மறுத்துவிட்டது.
நெஸ்லே இந்தியா நிறுவனத்தின் மேகிநூடுல்சில் நிர்ணயிக்கப்பட்ட அளவுக்கும் அதிகமாகக் காரியம் மற்றும் மோனோசோடியம் குளோட்டோமேட் எனும் வேதிப்பொருட்கள் கலந்திருப்பதாகப் பல்வேறு மாநிலங்கள் நடத்திய ஆய்வில் கண்டுபிடிக்கப்பட்டது.
இதையடுத்து, மகாராஷ்டிரா அரசு உள்ளிட்ட 14-க்கும் மேற்பட்ட மாநில அரசுகள் மேகிநூடுல்சுக்கு தடைவிதித்து உத்தரவு பிறப்பித்தன. மேலும், அனுமதியில்லாமல் மேகிநூடுல்சில் 9 ரகங்கள் தயாரிக்கப்பட்டன.
இதையடுத்து, 9 ரகங்களின் விற்பனை, இறக்குமதி, உற்பத்தி, ஆகியவற்றுக்கு இந்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையமும் நாடுமுழுவதும் தடைவிதித்தது. சந்தையிலிருந்து திரும்பப்பெறவும் நெஸ்லே இந்தியா நிறுவனத்துக்கு உத்தரவிட்டது.
இந்நிலையில், மகாராஷ்டிர மாநில அரசு, மற்றும் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆணையத்தின் உத்தரவை எதிர்த்து மும்பை உயர்நீதிமன்றம் நெஸ்லே இந்தியா நிறுவனம் சார்பில் ஒரு மனு தாக்கல் செய்யப்பட்டது.
அந்த மனுவில், உணவுப்பாதுகாப்புத் தரக்கட்டுப்பாடு சட்டம் 34-வது பிரிவுக்கு முரணாக, மகாராஷ்டிர மாநில அரசு, மற்றும் மத்திய உணவுப்பாதுகாப்பு ஆணையம் மேகிநூடுல்ஸ் விற்பனைக்குத் தடைவிதித்துள்ளன.
எனவே இருதரப்பினர் விதித்த தடையைத் திரும்பப்பெற உத்தரவிட்டு, தடையை நீக்க வேண்டும் என அந்தமனுவில் கோரப்பட்டு இருந்தது.
இந்த மனு நீதிபதிகள் வி.எம்.கன்டே மற்றும் பி.பி.கோலபவல்லா ஆகிய 2 பேர் அமர்வு முன்பு நேற்று விசாரணைக்கு வந்தது. அந்த மனுவை ஆய்வு செய்த நீதிபதிகள், அளித்த உத்தரவில் கூறியிருப்பதாவது, மகாராஷ்டிர மாநில அரசு, மத்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் மேகிநூடுல்சுக்கு விதித்துள்ள தடைக்குத் தடை விதிக்க முடியாது.
இந்த மனு குறித்து மகாராஷ்டிர மாநில அரசு, மற்றும் மத்திய உணவுப்பாதுகாப்பு மற்றும் தரக்கட்டுப்பாடு ஆணையம் அடுத்த 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க வேண்டும் என்று ஆணையிட்ட நீதிபதிகள், ஜூன் 30-ஆம் தேதிக்கு விசாரணையைத் தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.