Home இந்தியா இந்திய ரயில்வே விரைவில் தனியார் மயம்- மோடியின் நிபுணர் குழு பரிந்துரை!

இந்திய ரயில்வே விரைவில் தனியார் மயம்- மோடியின் நிபுணர் குழு பரிந்துரை!

692
0
SHARE
Ad

indian-railwayபுதுடெல்லி, ஜூன்13- தொடர்வண்டிப் போக்குவரத்து நிர்வாகத்தைத் (railway) தனியார் வசம் ஒப்படைக்க வேண்டும் என்று மோடி அமைத்த உயர் மட்டக் குழு பரிந்துரை செய்துள்ளது.

மேலும் ரயில்வே துறையினர், பள்ளி மற்றும் மருத்துவமனை நடத்துவதைக் கைவிட வேண்டும் என்றும் அக்குழு பரிந்துரைத்துள்ளது.

தொடர் வண்டிப் போக்குவரத்து நிர்வாகத்தை நெறிப்படுத்தும் வழிமுறைகள் குறித்துப் பரிந்துரை செய்வதற்காகப் பிரதமர் நரேந்திர மோடி, கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஓர் உயர்மட்ட வல்லுநர் குழுவை அமைத்தார்.

#TamilSchoolmychoice

‘நிதி ஆயோக்’ உறுப்பினர் பிபெக் தெப்ராய் தலைமையில் இக்குழு அமைக்கப்பட்டது. இக்குழுவில் முன்னாள் மந்திரிசபைச் செயலாளர் கே.எம்.சந்திரசேகர் உட்பட 4 பேர் இடம்பெற்றுள்ளனர்.

ரயில்வே வாரியத்திடம் இந்தக் குழு தனது 300 பக்க இறுதி அறிக்கையை ஒப்படைத்துள்ளது. அதில், அதிரடியாகப் பல்வேறு சீர்திருத்த நடவடிக்கைகளைப் பரிந்துரை செய்துள்ளது.

அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:–

சாலை, சிவில் விமானப் போக்குவரத்து, தொலைத்தொடர்பு போன்ற பிற துறைகளுடன் ஒப்பிடுகையில், ரயில்வே துறையில் தனியார் பங்களிப்பு குறைவாகவே உள்ளது.

ரயில்களை இயக்குவது, கொள்கை முடிவு எடுப்பது, ஒழுங்குபடுத்துவது என எல்லா வேலைகளையும் ஒரே அமைப்பு மேற்கொள்வதுதான் இந்த நிலைமைக்கான காரணங்களில் ஒன்றாகும்.

ரயில்வே துறையின் பங்குகளை விற்பனை செய்து, ரயில்வே துறையைத் தனியார்மயம் ஆக்குங்கள் என்று நாங்கள் சிபாரிசு செய்யவில்லை. ரயில்கள் இயக்கத்தில் தனியாரையும் அனுமதிக்க வேண்டும் என்றுதான் கூறுகிறோம். தனியாருக்கும் சம வாய்ப்பு அளிக்க வேண்டும்.

இதற்காக, இந்திய ரயில்வே ஒழுங்குமுறை ஆணையம் என்ற சட்டப்பூர்வ, சுயேச்சையான அமைப்பை உருவாக்க வேண்டும். அதற்குத் தனி பட்ஜெட் போட வேண்டும். சரக்குக் கட்டணங்களை நிர்ணயித்தல், சர்ச்சைகளுக்குத் தீர்வு காணுதல், தொழில்நுட்பத் தரத்தை நிர்ணயித்தல் போன்ற பணிகளை அந்த அமைப்பு செய்ய வேண்டும்.

ரயில்களை இயக்குவதுதான் இந்திய ரெயில்வேயின் முக்கியப் பணியாக இருக்க வேண்டும். அதனால் ரயில்வே, பள்ளி மற்றும் மருத்துவமனைகள் நடத்துவதைக் கைவிட வேண்டும்.

வேண்டுமானால், ரெயில்வே ஊழியர்களின் குழந்தைகளை மத்திய அரசு நடத்தும் கேந்திரிய வித்யாலயா பள்ளிகளில் சேர்த்துக்கொள்ளலாம். அப்படிச் சேர்த்தால், அவர்களுக்கு மானியம் அளிக்கலாம். அதுபோல், ரெயில்வே தொழிலாளர்கள் தனியார் மருத்துவமனைகளில் சிகிச்சை பெறுவதற்கும் மானியம் தரலாம்.

ரயில்வே பாதுகாப்புப் படையையும், ரெயில்வேயின் பிரதான பணிகளில் தொடர்புபடுத்தக் கூடாது.

முடிவு எடுக்கும் அதிகாரத்தை ரயில்வே வாரியம் தன்னிடமே குவித்துக் கொள்ளக்கூடாது. கோட்ட மற்றும் மண்டல மேலாளர்களுக்கும் அந்த அதிகாரத்தை அளிக்க வேண்டும். அதன்மூலம், அவர்கள் விரைவாக முடிவு எடுக்க முடியும்.

மாநிலங்களில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டுள்ள ரெயில்வே காவலர்களின் ஒட்டுமொத்தச் செலவையும் அந்தந்த மாநில அரசே ஏற்குமாறு கூற வேண்டும்.

நாங்கள் பரிந்துரை செய்த செயல் திட்டத்தை அடுத்த 5 ஆண்டுகளில் அமல்படுத்தினால், ரெயில்வேக்கு எனத் தனி பட்ஜெட் தேவைப்படாது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.