கோலாலம்பூர், ஜூன் 13 – பிரதமர் நஜிப்புக்கு எதிராகச் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ள ஜோகூர் சுல்தானின் மகனும் பட்டத்து இளவரசருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமுக்குக் கலாச்சார, சுற்றுலாத் துறை அமைச்சர் நஸ்ரி அசிஸ் கடுமையாகப் பதில் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
“அவர் அரசியலை விட்டு ஒதுங்கியிருக்க வேண்டும். அப்படித் தலையிட்டால் நாங்களும் அவரை நோக்கிப் பதில் தாக்குதல் நடத்துவோம்” என நஸ்ரி கூறியுள்ளார்.
ஆட்சியாளர்களும், அரசப் பரம்பரையினரும் பாரம்பரியமாகச் சட்டத்திற்கு அப்பாற்பட்டவர்கள் என்பதால் அவர்கள் அரசியலில் தலையிடக் கூடாது என்றும் கூறிய நஸ்ரி அப்படி அவர்கள் அரசியல்வாதிகளாக மாற முற்பட்டால் அவர்களுக்கு நாங்களும் தகுந்த பதிலடி கொடுப்போம் என்றும் எச்சரித்துள்ளார்.
கடந்த ஜூன் 6ஆம் தேதி 1எம்டிபி நிறுவனம் குறித்துப் பகிரங்க பதில்களைக் கூறுவேன் எனச் சவால்விட்டு வராமல் ஒதுங்கிக்கொண்ட பிரதமர் நஜிப்புக்கு எதிராகச் சில கருத்துகளைத் துங்கு இஸ்மாயில் (படம்) தனது பேஸ்புக் தளத்தில் பதிவு செய்திருந்தார்.
“நீங்கள் அரச வாரிசு என்ற முறையில் மாநிலத்தில் ஒரு முக்கியமான பொறுப்பை வகிப்பவராக இருந்து கொண்டு ஏதாவது சொல்ல ஆரம்பித்தால், பின்னர் நாங்களும் பதிலுக்குத் திருப்பி அடித்தால் ஆத்திரப்படக்கூடாது” என்றும் நஸ்ரி நேரடியாகவே ஜோகூர் பட்டத்து இளவரசருக்கு எதிராகக் கூறியுள்ளது அண்மையக் காலங்களில் அம்னோ தலைவர் ஒருவருக்கும் அரச வாரிசு ஒருவருக்கும் இடையிலான நேரடியான மோதலாகப் பார்க்கப்படுகின்றது.
இன்று மலாயாப் பல்கலைக் கழகத்தில் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்ட பின்னர் பத்திரிக்கையாளர்களிடம் பேசியபோது நஸ்ரி இவ்வாறு கூறியுள்ளார்.
“இவ்வாறு கருத்து சொல்வதால் நீங்கள் உங்களின் மரியாதையை இழப்பீர்கள். நாங்கள்தான் அரச பரம்பரையினரைப் பாதுகாக்கும் கேடயமாகச் செயல்பட்டு வருகின்றோம். எனவே அரசியலில் இருந்து ஒதுங்கியிருங்கள்” என்றும் நஸ்ரி துங்கு இஸ்மாயிலுக்கு நினைவுபடுத்தியுள்ளார்.