பீஜிங், ஜூன் 15 – மணிக்கு 12 ஆயிரம் கி.மீ வேகத்தில் பாயும் டபில்யூ.யு-14 ரக ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்ததை, ‘உச்சகட்ட சூழ்ச்சி’ என அமெரிக்கா கண்டனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் ரஷ்யாவுக்கு அடுத்தபடியாக அணு ஆயுதத்தை தாங்கிச் செல்லும் ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்து வருகிறது.
டபில்யூ.யு-14 என்ற இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை விண்ணுக்கு சென்றபின், இலக்கை நோக்கி மணிக்கு 12 ஆயிரம் கி.மீ வேகத்தில் பாயும். ஒலியைவிட 8 மடங்கு வேகம் அதிகம் என்பதால் இந்த ஹைபர்சோனிக் ஏவுகணை, வானிலேயே தடுத்து அழிக்க முடியாது.
இந்த ரக ஏவுகணைகளை சீனா வெற்றிகரமாக சோதனை செய்து வருகிறது. இதன் 2-வது சோதனை தோல்வியடைந்தாலும், கடந்த 2014-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட 3-வது சோதனை வெற்றி பெற்றது. 4-வது முறையாக கடந்த செவ்வாய் கிழமை அன்று ஹைபர்சோனிக் ஏவுகணையை சீனா வெற்றிகரமாக சோதனை செய்தது.
இத்தகவலை முதலில் வெளியிட்ட ‘தி வாஷிங்டன் ப்ரீ பீகன்’ என்ற அமெரிக்க இணையத்தளம், சீனாவின் இந்த அதி நவீன ஆயுதம், அமெரிக்காவின் தடுப்பு ஏவுகணைகளை மீறி தாக்கும் திறன் படைத்தது’’ என குறிப்பிட்டுள்ளது.
தெற்கு சீன கடல் பகுதியில் பதட்டம் நிலவும் சூழ்நிலையில் சீனாவின் இந்த சோதனை ‘உச்சகட்ட சூழ்ச்சி’ என அமெரிக்கா கூறியுள்ளது. இது குறித்து கருத்து தெரிவித்துள்ள சீன ராணுவ அமைச்சகம், ‘‘சீன எல்லையில் நடத்தப்பட்ட ராணுவ ஆராய்ச்சி சோதனை, ஏற்கனவே திட்டமிடப்பட்ட இயல்பான சோதனை.
இது போன்ற சோதனைகள் எந்த நாட்டையும், எந்த இலக்கையும் குறிவைத்து நடத்தப்படுவதில்லை’’ என கூறியுள்ளது. தெற்கு சீன கடல் பகுதியில் உள்ள தீவு பகுதிகளை, சீனா தனது எல்லையாக சொந்தம் கொண்டாடி அண்டை நாடுகளை மிரட்டி வருகிறது.
இந்த விவகாரத்தில் அமெரிக்கா தொடர்ந்து தலையிடுகிறது. இது தொடர்பாக அமெரிக்க பாதுகாப்புத்துறை அமைச்சர் அஸ்தன் கார்டருடன் பேச்சுவார்த்தை நடத்துவதற்காக, சீனாவின் ராணுவ துணைத் தலைவர் பான் சங்லாங், ஒரு வார பயணமாக அமெரிக்கா சென்றிருந்தார்.
அவர் புறப்படுவதற்கு ஒரு நாள் முன்பாக சீனா இந்த சோதனையை நடத்தியது. தெற்கு சீனா கடல் எல்லை ஆலோசனை கூட்டத்தில் பான் சங்லாங், தனது கருத்தை வலுவாக வாதிடவும், அமெரிக்காவின் தலையீட்டை தைரியமாக நிராகரிப்பதற்காக இந்த சோதனையை சீனா மேற்கொண்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்.