சென்னை, ஜூன் 15- சென்னையில் தமிழக அரசு இடம் ஒதுக்கி 13 ஆண்டுகள் ஆகியும் அந்த இடத்தில் நடிகர் சங்கம் ,இதுநாள் வரை சிவாஜி கணேசனுக்கு மணிமண்டபம் கட்டவில்லை.
பொறுத்துப் பொறுத்துப் பார்த்த சிவாஜி சமூக நலப் பேரவை இப்போது பொங்கி எழுந்திருக்கிறது.
“நடிகர் சங்கம் சார்பில் மணிமண்டபம் கட்டப்படும் என்று எதிர்பார்த்து நாங்கள் ஏமாந்து போய்விட்டோம். நடிகர் சங்கம் மீதிருந்த நம்பிக்கை போய்விட்டது.
எனவே, அரசே பொறுப்பெடுத்துக் கட்டித் தர வேண்டும்” என்று சிவாஜி சமூக நலப்பேரவைத் தலைவர் கே.சந்திரசேகரன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
இதுகுறித்து அவர் தெரிவித்துள்ளதாவது:
“கடந்த 2002-ஆம் ஆண்டு சென்னை அடையாறு சத்யா படப்பிடிப்புத் தளம் (studio) எதிரே சிவாஜி மணிமண்டபம் கட்டுவதற்காகத் தென்னிந்திய நடிகர் சங்கத்திற்கு 65 செண்ட் இடத்தைத் தமிழக அரசு இலவசமாக ஒதுக்கித் தந்திருந்தது.
அங்கு சிவாஜிக்கு மணிமண்டபம் கட்டுவதற்கு இதுநாள் வரை எந்தவொரு நடவடிக்கையையும் நடிகர் சங்கம் எடுக்கவில்லை. அந்த இடத்தையும் அரசிடமிருந்து முறைப்படி பெறவில்லை. தற்போது வரை அந்த இடம் பொதுப்பணித்துறை வசமே உள்ளது.
கடந்த 2005- ஆம் ஆண்டு நடிகர் விஜயகாந்த் நடிகர் சங்கத் தலைவராக இருந்த போது மணிமண்டபம் கட்ட அடிக்கல் நாட்டுவிழா எடுத்துப் பூமி பூசை போடப்பட்டது. அதன்பிறகு எந்தப் பணியும் நடைபெறவில்லை.
சிவாஜி பிறந்த நாளை நடிகர் தினமாகக் கொண்டாடுவதாக அறிவித்து, ஒரே ஓர் ஆண்டு மட்டும் கொண்டாடினார்கள். அதன்பிறகு அதையும் கைவிட்டுவிட்டனர்.
கர்நாடகாவில் நடிகர் ராஜ்குமார் மறைந்த அடுத்த ஆண்டே கர்நாடக அரசால் அவருக்கு மணிமண்டபம் கட்டப்பட்டது. நடிகர் விஷ்ணுவர்த்தன் மறைந்த சில நாளில் அவருக்கு மணிமண்டபம் கட்ட கர்நாடக அரசு ரூபாய் 10 கோடி ஒதுக்கியது.
தன்னுடைய தன்னிகரில்லாத நடிப்பால் தமிழகத்திற்குப் பெருமை சேர்த்தவர் சிவாஜி. அப்படிப்பட்ட அவருக்குத் தமிழக அரசே முன்வந்து மணிமண்டபம் கட்டித் தர வேண்டும்.”என்றார் அவர்.
தமிழக அரசு இதைக் கவனிக்குமா? நடிகர் சங்கக் கட்டிடமே கட்டாமல் தங்களுக்குள் மோதிக் கொள்வதற்கே நேரம் போதாமல் முட்டிக் கொண்டிருக்கும் வேளையில், நடிகர் சங்கம் எங்கே சிவாஜிக்கு மணிமணடபம் கட்டித் தரப் போகிறது? காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.