ஃப்ளோரிடா, ஜூன் 15 – ஃப்ளோரிடா மாகாணத்தில் விலையுயர்ந்த ஐபோன் ஒன்றிற்காக ஐதராபாத் மாணவர் ஒருவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது.
சாய் கிரண் என்கின்ற அந்த மாணவர் சமீபத்தில்தான் அமெரிக்க ஃப்ளோரிடா மாகாணத்தில் தன்னுடைய எம்.எஸ் கல்வியில் சேர்ந்துள்ளார்.
அவருடைய ஐபோனை கேட்டு மிரட்டிய சிலர், அவர் கொடுக்காத காரணத்தினால் சுட்டுக் கொன்றுள்ளனர். நான்கு முறை சுட்டதால் சாய் கிரண் பரிதாபமாக இறந்துள்ளார்.
ஞாயிற்றுக்கிழமையன்று தன்னுடைய வீட்டில் இருந்த சாய் ஐபோனில் பேசிக் கொண்டிருந்தபோது இச்சம்பவம் நடைபெற்றதாக அவரது மாமா தெரிவித்துள்ளார். மேலும், ‘இந்த சம்பவம் குறித்த தகவல்கள் பெற்று வருகின்றோம்”.
“சில பேர் அவரிடம் ஐபோனைக் கேட்டு மிரட்டியதாகவும், அவர் கொடுக்காத காரணத்தினால் சுட்டுக் கொல்லப்பட்டதாகவும் ஐபோனில் பேசிக் கொண்டிருந்த நண்பர் தெரிவித்துள்ளார்’ என்று அவரது மாமா மேலும் கூறியுள்ளார்.
அவருடைய உடலை இந்தியா கொண்டுவர தெலுங்கானா அரசிற்கு கோரிக்கை விடுத்துள்ளனர். கேசராவில் உள்ள கீதாஞ்சலி கல்லூரியில் பட்டபடிப்பை முடித்த சாய் கிரண், மே 2 -ஆம் தேதியன்று அமெரிக்காவில் எம்.எஸ் கல்வியில் சேர்ந்தது குறிப்பிடத்தக்கது.