புதுடெல்லி, ஜூன்16- இந்தியா முழுவதும் உள்ள அரசு மருத்துவக் கல்லூரி, பல்மருத்துவ கல்லூரிகளில் எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். படிப்புகளில் சேர மருத்துவ நுழைவுத் தேர்வின் மூலம் 15 சதவீதம் மாணவர்கள் இட ஒதுக்கீடு பெறுகின்றனர். எனவே இந்த நுழைவுத் தேர்வு மிகவும் முக்கியத்துவம் வாய்ந்ததாகும்.
இந்த ஆண்டுக்கான மருத்துவ நுழைவுத் தேர்வு கடந்த மாதம் 3-ந் தேதி நடைபெற்றது. நாடு முழுவதும் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதினார்கள். கடந்த 5-ந் தேதி இதன் முடிவு வெளியாக இருந்தது.
ஆனால்,அரியானா மாநிலத்தில் 44 மாணவர்கள் கேள்வித் தாள்களை முறைகேடாகப் பெற்றுத் தேர்வை எழுதியதாகச் சில மாணவர்களும் பெற்றோரும் புகார் தெரிவித்தனர். இது தொடர்பாக அரியானா போலீசார் விசாரணை நடத்தி 12 பேரைக் கைது செய்தனர்.
அரியானா மாணவர்கள் தவிர, பீகார், உத்தரபிரதேசம், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் 700-க்கும் அதிகமான மாணவ-மாணவியர் முறைகேடாகத் தேர்வு எழுதியிருப்பது காவல்துறை விசாரணையில் தெரிய வந்தது.
மேலும், போலியான முகவரி மூலம் 72 கைபோன் இணைப்புகளைப் பெற்று, 102 கேள்விகளுக்கான பதில்கள் குறிப்பிட்ட மாணவ-மாணவியருக்குக் குறுஞ்செய்தியாக அனுப்பப்பட்டிருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டது.
எனவே, மருத்துவ நுழைவுத் தேர்வை நீக்கிவிட்டு மீண்டும் தேர்வு நடத்த உத்தரவிட வேண்டும் என்று கோரி மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் சார்பில் உச்சநீதி மன்றத்தில் வழக்குத் தொடரப்பட்டது.
கடந்த 3-ந் தேதி இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் பிரபுல்ல சி.பந்த், அமிதவ ராய் ஆகியோர், மருத்துவ நுழைவுத் தேர்வு முடிவுகளை வெளியிட 12-ந் தேதி வரை இடைக்காலத் தடை விதித்தனர்.
இந்த வழக்கு நீதிபதிகள் ஆர்.கே.அகர்வால், அமிதவ ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று மீண்டும் விசாரணைக்கு வந்தது.
அப்போது, கடந்த மே 3-ந் தேதி நடைபெற்ற மருத்துவ கல்லூரி நுழைவுத் தேர்வை நீக்கம் (ரத்து) செய்தும், மீண்டும் 4 வாரங்களுக்குள் மறு தேர்வை நடத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
தேர்வு நடைபெற்ற பிறகு விடைத்தாள்களைத் திருத்துவது, முடிவுகளை அறிவிப்பது போன்ற பணிகளை அவசரக்கால அடிப்படையில் மேற்கொள்ள வேண்டும் என்றும் நீதிபதிகள் தங்கள் உத்தரவில் கூறி உள்ளனர்.
உச்சநீதி மன்றத்தின் இந்த உத்தரவினால் 6 லட்சத்து 30 ஆயிரம் மாணவ-மாணவியர் மீண்டும் நுழைவுத் தேர்வை எழுத வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகியுள்ளனர்.