கோலாலம்பூர், ஜூன் 16 – மத்திய செயற்குழு உறுப்பினர்களின் அனுமதியின்றிச் சங்கப்பதிவகத்தை நீதிமன்றத்திற்குக் கொண்டு வந்த டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தனது உறுப்பினர் பதவியை இழந்துவிட்டார் என மஇகா தேசியத் துணைத்தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.
இன்று 2009 மத்தியச் செயலவைக் கூட்டத்திற்குப் பின் செய்தியாளர்களிடம் பேசிய டாக்டர் சுப்ரா, “கட்சியின் சட்டவிதிகளின் படி, மத்திய செயலவையிடம் கலந்தாலோசிக்காமல் கட்சி விவகாரங்களை நீதிமன்றத்திற்குக் கொண்டு செல்பவர்கள் தானாகவே உறுப்பினர் தகுதியை இழந்துவிடுவார்கள்” என்று தெரிவித்துள்ளார்.
“இது குறித்து அவர்களுக்கு அறிவிக்கக்கூட தேவையில்லை. இந்த விவகாரத்தைக் கடந்த மார்ச் மாதமே தேசிய முன்னணி தலைமைத்துவத்தின் கவனத்திற்குக் கொண்டு சென்றேன். ஆனால் நீதிமன்றத்தின் உத்தரவு இருந்ததால், அதைப் பொதுவில் அறிவிக்க இயலவில்லை” என்றும் சுப்ரா குறிப்பிட்டுள்ளார்.
பழனிவேலின் உறுப்பினர் பதவி தானாகத் தகுதி இழந்துவிட்டதால், கட்சியின் இடைக்காலத் தலைவராகத் தான் பொறுப்பேற்பதாகவும் சுப்ரா தெரிவித்துள்ளார்.
மஇகா – சங்கப்பதிவகம் இடையிலான வழக்கில், நேற்று வெளியிடப்பட்ட தீர்ப்பில், சங்கங்களின் சட்டம், பிரிவு 16 (1)-க்கு உட்பட்டு தான், சங்கப்பதிவிலாகா செயல்பட்டுள்ளதாகவும், அது தனது அதிகாரத்தை எவ்வகையிலும் துஷ்பிரயோகம் செய்யவில்லை என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.
மேலும், சங்கப்பதிவிலாகாவிற்கு எதிராக மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ பழனிவேல் தரப்பு தொடுத்திருந்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
இதனிடையே, நேற்று மஇகா தலைமையகத்தில், சட்டத்துக்குப் புறம்பாக 2009 மத்திய செயலவைக் கூட்டம் நடைபெற்றதாகக் கூறி, சுப்ரா உட்பட 15 பேரை, 1 ஆண்டு காலம் உறுப்பினர் பதவியிலிருந்து இடைநீக்கம் செய்வதாக இன்று பழனிவேல் அறிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
“