கோலாலம்பூர், ஜூன் 16- ஆள் கடத்தல் கும்பல்களால் மியான்மர் ரோஹிங்யா முஸ்லிம் அகதிகள் அனுபவிக்கும் கொடுமைகளை விட, அங்கிருக்கும் சிறுபான்மைத் தமிழர்கள் பெருங்கொடுமைகளை அனுபவித்து வருகிறார்கள்.
மியான்மரின் தமோ மற்றும் தத்தோன் மாவட்டங்களில் வாழும் இந்து மற்றும் கிறிஸ்தவ மதத்தைச் சேர்ந்த தமிழர்கள் விவசாயக் கூலி வேலை செய்து பிழைப்பு நடத்துகிறார்கள்.
அவர்களின் வறுமையைப் பயன்படுத்திச் சில இடைத்தரகர்கள் மலேசியாவில் அதிக சம்பளத்திற்கு வேலை வாங்கித் தருவதாக ஆசை காட்டி மோசம் செய்கிறார்கள்.
ஏமாறுபவர்களிடம் பணத்தை வாங்கிக் கொண்டு, அவர்களை ரோஹிங்யா மக்களுடனும் வங்காள தேசிகளுடனும் படகில் ஏற்றி, வியட்நாம் மற்றும் தாய்லாந்துக் காடுகளில் இறக்கி விடுகிறார்கள்.
பின்பு, அங்குள்ள இரகசிய முகாம்களில் அடைத்து வைக்கப்படுகின்றனர். கையில் உள்ள மீதிப் பணத்தையும் பிடுங்கிக் கொண்டு மலேசியாவிற்குக் கூலிகளாக அனுப்பி வைக்கின்றனர்.
அவர்கள் மலேசியாவில் பெனாங், கேதா, பெர்லிஸ் போன்ற பகுதிகளில் கடுமையான கட்டுமானப் பணிகளில் ஈடுபடுத்தப்பட்டுக் கிட்டத்தட்ட கொத்தடிமைகள் போல் நடத்தப்படுகின்றனர்.
ரோஹிங்யா மக்களுக்குத் தரப்படும் அகதிகள் என்ற அந்தஸ்து கூட அவர்களுக்குத் தரப்படுவதில்லை.
மியான்மரில் உள்ள சொற்பச் சொத்தையும் விற்று விட்டு, வேறு தேசம் வந்து, எந்த அடையாளமும் இன்றித் தமிழர்கள் தவிக்கும் அவலம் உருவாகியுள்ளது.
மியான்மர் அரசு இந்த விவகாரத்தில் உடனே தலையிட்டுத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்பதே பாதிக்கப்பட்டவர்களின் கோரிக்கை.