சென்னை, ஜுன்16- கோச்சடையான் படத்துக்காகக் கடன் வாங்கியது தொடர்பான பிரச்னையில் லதா ரஜினிகாந்த் போலி ஆவணங்களைச் சமர்ப்பித்ததாக அவர் மீது பெங்களூரு காவல்துறை வழக்குப் பதிவு செய்தது.
இந்த அவதூறான வழக்கை லதா ரஜினிகாந்த் சட்டப்படி சந்திக்க உள்ளதாகக் கூறியுள்ளார்.
இது தொடர்பாக லதா ரஜினிகாந்த் அலுவலகத்தில் இருந்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது:
ஆட் பீரோ நிறுவனத்தின் சார்பில் அளிக்கப்பட்டுள்ள புகார் அனைத்தும் பொய்யானவை. கோச்சடையான் கடனுக்காக லதா ரஜினிகாந்த் எந்தவோர் இடத்திலும் உத்தரவாதக் கையெழுத்துப் போடவில்லை.
அபிர்சந்த் நஹர் மற்றும் அவர் மனைவி சஞ்சல் நஹர் ஆகியோர் கிரிமினல் வழியில் லதா ரஜினிகாந்துக்குப் பல்வேறு நெருக்கடிகள் கொடுத்து ஆதாயமடைய கடந்த ஓராண்டாகவே முயற்சி செய்தார்கள்.
அவர்கள் நெருக்கடிக்கு லதா ரஜினிகாந்த் பணியாததால் மீடியா மூலமாக விஷமத்தனமான பிரசாரம் மேற்கொண்டு பணம் பறிக்க முயற்சி செய்தார்கள். இதனால் நற்பெயருக்குக் களங்கம் ஏற்பட்டுவிடும் என்பதால், அவரே முன்வந்து வாங்காத கடனை அடைப்பார் எனவும் எதிர்பார்த்தார்கள்.
லதா ரஜினிகாந்த் பெங்களூரு சிவில் நீதிமன்றத்தை அணுகி ஆட் பீரோ உள்ளிட்ட நிறுவனங்களுக்கு எதிராக இடைக்கால தடை உத்தரவைப் பெற்றார்.
இப்போது தனிநபர் ஒருவர் உள்நோக்கத்துடன் புகார் அளித்துள்ளதை, மாவட்ட நீதிமன்றம் ஏற்று வழக்குப் பதிவு செய்துள்ளது. அந்தப் புகாரில் உண்மை நிலை மூடி மறைக்கப்பட்டுள்ளது.
இவர்களின் அவதூறுகளைச் சட்டப்படிச் சந்திக்க உள்ளோம். தனது நற்பெயருக்குக் களங்கம் விளைவிக்கும் வகையில் அளிக்கப்பட்டிருக்கும் இந்தப் புகாருக்கு எதிராக லதா ரஜினிகாந்த் சிவில் மற்றும் குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து அவர்களுக்குத் தண்டனை பெற்றுத் தருவார் என்று கூறப்பட்டுள்ளது.