கோலாலம்பூர், ஜூன் 17 – திங்கட்கிழமை ஜூன் 15ஆம் நாள் வழங்கப்பட்ட கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பு முதற்கொண்டு, மஇகாவில் அடுத்தடுத்து அரங்கேறிய சில அரசியல் திடீர்த் திருப்பங்கள்,
நடப்புத் தேசியத் தலைவரான டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவுக்குத் தனது தேசியத் தலைவருக்கான பதவியை நிலைப்படுத்திக் கொள்ள, மறுஉறுதி செய்து கொள்ள பல வாய்ப்புகள் இருந்தும், அவற்றையெல்லாம் ஏனோ சில தவறுதலான ஆலோசனைகள் – வழிகாட்டல்களினால், இன்று இழந்து நிற்கின்றார் – இறுதியில் தனது உறுப்பியத்தை இழக்கும் அபாயத்திற்கு ஆளாகிவிட்டார் என்பது தெளிவாகத் தெரிகின்றது.
பழனிவேலுவுக்குக் கிடைத்த முதல் வாய்ப்பு
முதலாவதாக, சங்கப் பதிவிலாகா கடந்த ஆண்டு டிசம்பர் 5ஆம் தேதி வழங்கிய கடிதத்தில் மூன்று உதவித் தலைவர்களுக்கும், 23 மத்திய செயலவை உறுப்பினர்களுக்கும் மட்டுமே மறுதேர்தல் என்று அறிவித்தது.
ஆனால், விதி யாரை விட்டது?
அந்தச் சங்கப் பதிவிலாகா உத்தரவுக்கு ஒப்புக் கொள்ளாமல் எல்லாப் பதவிகளுக்கும் மறுதேர்தல் என்ற திட்டத்தை முன்மொழிந்தார் பழனிவேல். அதன்மூலம், அடுத்த ஆண்டு செப்டம்பர் வரை தனது தேசியத் தலைவர் பதவிக் காலத்திற்கான தவணை இருந்தும், அந்தத் தேசியத் தலைவர் பதவிக்கும் மறுதேர்தல் என்று அறிவித்தார்.
பழனிவேலுவுக்கு கிடைத்த இரண்டாவது வாய்ப்பு
இரண்டாவதாக அவரது அந்தத் திட்டத்திற்கும் ஒப்புக்கொண்ட சங்கப் பதிவிலாகாவுடன் ஒத்துழைத்துத் தேசியத் தலைவருக்கான தேர்தலை முறையாக நடத்தியிருந்தால் – அவரது செல்வாக்கு சரிந்து விழுந்து கொண்டிருந்த சூழ்நிலையிலும் – அதில் அவர் வெல்வதற்கான வாய்ப்புகள் 50:50 என்ற அளவில் சரிசமமாக இருந்தன என்பது ஒருசில அரசியல் பார்வையாளர்களின் கணிப்பு. காரணம், அவர்தான் நடப்பு தேசியத்தலைவர் என்பதால் அந்த அதிகாரப் பின்னணியில் அவருக்குச் சில அனுகூலங்கள் மஇகா தேசியத்தலைவருக்கான தேர்தலில் கிடைத்திருக்கும்.
இப்படியாகத் தன்முன்னே தனக்குக் கிடைத்த அத்தனை வாய்ப்புகளையும் முறையாகப் பயன்படுத்திக் கொள்ளாமல், அனைத்தையும் கோட்டைவிட்டு நிற்கின்றார் பழனிவேல்.
நந்தவனத்தில் ஓர் ஆண்டி – அவன்
நாலாறு மாதமாய்க் குயவனை வேண்டி
கொண்டு வந்தான் ஒரு தோண்டி – அதைக்
கூத்தாடிக் கூத்தாடிப் போட்டுடைத்தாண்டி
-என்பது புகழ்பெற்ற சித்தர் பாடல். அதற்கு இலக்கணமாக – உதாரணமாகத் திகழ்கின்றார் பழனிவேல்.
சாமிவேலு பதவி விலகலால் தன்மீது எதிர்பாராத விதமாகச் சூட்டப்பட்ட தேசியத் தலைவர் என்ற மகுடத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியாமல்,
கடந்த 5 ஆண்டுகளில் தனது தலைமைத்துவ ஆற்றலை வளர்த்துக் கொள்ளாமல், கட்சிக்காக, சமுதாயத்திற்காக தேவையானதை முறையாகச் செய்யாமல், இன்று தனது கட்சி உறுப்பியத்தையும் இழந்து நிற்கின்றார் பழனிவேல்.
எப்படி மஇகா உறுப்பியத்தை இழந்தார் பழனிவேல்?
மஇகா சட்ட அமைப்பு பிரிவு 91இன்படி மஇகா மத்தியசெயலவையின் முன் அனுமதியின்றி நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தால், அந்த உறுப்பினர் தனது உறுப்பியத்தை இயல்பாகவே இழக்கின்றார் எனத் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.
ஆனால், பழனிவேல் மஇகாவுக்கு எதிராக வழக்கு தொடுக்கவில்லையே மாறாக, சங்கப் பதிவிலாகாவுக்கு எதிராகத்தானே வழக்கு தொடுத்தார் என ஒரு சிலர் வாதிட்டு வருகின்றனர்.
ஆனால், மஇகா சட்டவிதி 91ஐ மீண்டும் மீண்டும் புரட்டிப் பார்த்தால், அதில் ‘நீதிமன்ற வழக்கு தொடுத்தால்’ உறுப்பியத்தை இழப்பார் என்றுதான் குறிப்பிடப்பட்டிருக்கின்றதே தவிர, ‘மஇகாவுக்கு எதிராக’ என்று அந்தப் பிரிவில் குறிப்பிடப்படவில்லை.
இது குறித்த முறையான சட்ட ஆலோசனை பெறாமல் – முன்னெச்சரிக்கை காட்டாமல்- துணிந்து மேலும் நான்கு தலைவர்களைத் துணைக்கு அழைத்துக் கொண்டு நீதிமன்றத்தில் மஇகா தொடர்பில் வழக்குத் தொடுத்து இன்று தனது உறுப்பியத்தையும் இழக்கும் நிலைக்கு வந்துவிட்டார் பழனிவேல்.
எனவே, மஇகா உறுப்பியத்தை இழந்து விட்ட அவர் – இனி தேசியத் தலைவர் அல்ல என்ற நிலையில், சுப்ரா, சரவணன் உள்ளிட்ட 15 பேரை கட்சியிலிருந்து நீக்கியதும் இயல்பாகவே சட்டப்படி செல்லாததாகி விடுகின்றது.
பழனிவேலுவுக்குக் கிடைத்த அற்புதமான இறுதி வாய்ப்பு
உடனே, 2009 மத்திய செயலவையைக் கூட்டி, தீர்ப்பின் முடிவுகளைத் தேசியத் தலைவர் என்ற முறையில் அமுல்படுத்துகின்றேன் என்று அவர் அன்றே அறிவித்திருந்தால் தேசியத் தலைவர் என்ற அதிகாரபீடத்தை அவர் மீண்டும் கைப்பற்றியிருப்பார். தானே தேசியத்தலைவர் என்பதை அவர் மறு-உறுதிப்படுத்தியிருக்கவும் முடியும்.
ஆனால், அந்த இறுதி வாய்ப்பையும் செய்யாமல் காலம் கடத்தினார். வழக்கின் முடிவுகள் அவருக்குப் பாதகமாக இருந்தும் –
மேல்முறையீட்டில் வெல்வதற்கான வலுவான சட்ட அடித்தளங்கள் இல்லை என்பது உள்ளங்கை நெல்லிக்கனியாகத் தெரிந்திருந்தும் –
மேல்முறையீட்டு நீதிமன்றத்தை நாடியிருக்கின்றார் பழனிவேல்.
பழனிவேலுவின் மாபெரும் தவறு – சங்கப் பதிவகம்-உள்துறை அமைச்சருக்கு எதிராக வழக்கு …
பழனிவேல் செய்த மாபெரும் அரசியல் தவறு சங்கப் பதிவிலாகாவுக்கும், உள்துறை அமைச்சருக்கும் எதிராக வழக்குத் தொடுத்ததுதான்.
காரணம், எந்தக் காலத்திலும் ஓர் அரசியல் கட்சி என்னும்போது, அது சங்கப் பதிவிலாகாவின் ஆளுமையின் கீழ் – அதிகாரத்தின் கீழ்தான் செயல்பட முடியும்.
பழனிவேல் எடுத்த அதைவிட மோசமான மற்றொரு அரசியல் முடிவு – சக உள்துறை அமைச்சருக்கு எதிராகவும் வழக்குத் தொடுத்தது.
ஆளும் தேசிய முன்னணியின் உறுப்பிய அரசியல் கட்சி ஒன்று அரசாங்க இலாகா ஒன்றின் மீது வழக்குத் தொடுத்ததும் –
மஇகா அமைச்சர் இன்னொரு அமைச்சர் மீது அரசாங்க விவகாரத்தில் வழக்குத் தொடுத்ததும் –
பழனிவேல் தலைமைத்துவத்தில் அரங்கேறிய சரித்திரச் சாதனைகள்தான்!
இதனால் இனி எப்போதுமே, புலி வாலைப் பிடித்த கதையாகப் பழனிவேல் நீதிமன்றங்களின் வாயிலாகத்தான் சங்கப் பதிவகத்தை அணுக முடியும் என்ற நிலைமைக்கு ஆளாகி விட்டார்.
இப்போதுகூட, கோலாலம்பூர் உயர்நீதிமன்றத்தில் இலட்சக்கணக்கில் வழக்குக்கான செலவுத் தொகையைச் செலுத்த வேண்டியிருப்பதோடு, இப்போது மேல்முறையீட்டு நீதிமன்றத்தின் வாசல்களில் தனது அடுத்த கட்ட வழக்குப் போராட்டத்தைத் தொடர்ந்திருக்கின்றார்.
இதனால் சங்கப் பதிவகத்துடன் சமரச நிலை எடுக்காத குணத்தால் இனி எப்போதுமே அவர்களுடன் இணைந்து பணி செய்ய முடியாத இக்கட்டான சூழலை, தனக்குத் தானே உருவாக்கிக் கொண்டிருக்கின்றார் பழனிவேல்.
டாக்டர் சுப்ராவின் சாமர்த்தியமான – நிதானமான அணுகுமுறை
மஇகா சட்டவிதிப் பிரிவு 91இன்படி பழனிவேலுவும் மற்ற தலைவர்களும் இயல்பாகவே தங்களின் உறுப்பியத்தை இழந்து விட்டனர் என அறிவித்திருப்பதன் மூலம் – தன்னை மஇகாவின் நடப்பு இடைக்காலத் தேசியத் தலைவராக நிலைநிறுத்திக் கொண்டிருக்கின்றார்.
பிரிவு 91இன்படி பழனிவேல் இனி மஇகா உறுப்பினர் அல்ல என்ற சர்ச்சையில் இறுதி முடிவையும் சங்கப் பதிவிலாகாதான் செய்ய வேண்டும். அப்படி அவர்கள் பழனிவேல் உறுப்பினர் அல்ல என்ற முடிவை எடுத்தால், அதனை எதிர்த்தும் பழனிவேல் நீதிமன்றம்தான் செல்லவேண்டியிருக்கும்.
அவர்தான் சங்கப் பதிவிலாகாவுடனான நல்லுறவுகளை வழக்குத் தொடுத்ததன் மூலம் கெடுத்துக்கொண்டாரே!
எனவே, 2009 மத்திய செயலவைத் தலைமை தாங்கி முன்னெடுத்துச் சென்றிருப்பதன் வழி – பழனிவேல் தனது உறுப்பியத்தை இழந்து விட்டார் என்ற உறுதியான – இறுதியான நிலைப்பாட்டை எடுத்திருப்பதன் வழி டாக்டர் சுப்ரா தற்போது இடைக்காலத் தேசியத் தலைவராகப் பதவியில் அமர்ந்திருக்கின்றார்.
அதே வேளையில், கட்சியில் ஒற்றுமையைக் கொண்டு வருவோம், சமுதாயத்துடனான தொடர்புகளை வலுப்படுத்திக் கொண்டு முன்னேறுவோம் என கண்ணியமான, நிதானமான, கட்சியை மீண்டும் ஒன்றுபடுத்தும் வகையிலான அரவணைப்பு அறிக்கையையும் விடுத்திருக்கின்றார் சுப்ரா.
இனி, சங்கப் பதிவிலாகா ஒத்துழைப்புடன் மஇகா தேர்தல்கள் முறையுடன் நடத்தப்பட்டு, அதில் தேசியத் தலைவராக டாக்டர் சுப்ரா போட்டியிட்டு வெல்வார் என எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனிவேலுவுக்கு இப்போது இருக்கும் ஒரே வாய்ப்பு! அவர் மேல் முறையீட்டு நீதிமன்றத்தில், கோலாலம்பூர் உயர்நீதிமன்றம் ஜூன் 15ஆம் தேதி வழங்கிய தீர்ப்பின்மீது இடைக்காலத் தடையுத்தரவு ஒன்றைப் பெறவேண்டும்.
இதற்கிடையில், அந்தத் தீர்ப்பிற்கு எதிரான மேல்முறையீட்டில் வெற்றிபெற வேண்டும்.
இந்த இரண்டு முயற்சிகளிலும் அவருக்கு வெற்றி கிட்டவில்லை என்றால், அவரது மஇகா உறுப்பியத்தை அவர் இயல்பாகவே இழந்தது மீண்டும் மறு உறுதி செய்யப்படும்.
அவரது அரசியல் பயணத்தின் இறுதித் தீர்ப்பு எழுதப்படும்!
டாக்டர் சுப்ரா தலைமையில் மஇகாவுக்குப் புதிய பயணம் – புதிய அத்தியாயம் தொடங்கும்!
-இரா.முத்தரசன்