ஜோகூர் பாரு, ஜூன் 17 – ஜோகூர் மக்களுக்காக நான் தொடர்ந்து குரல் கொடுத்துக் கொண்டு தான் இருப்பேன் என ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிம் தெரிவித்துள்ளார்.
ஜோகூர் மக்களிடம் அமைதியும், நல்லிணக்கமும் நிலைத்து, எங்கள் மாநிலம் என்றும் உயர்வு நிலையில் இருக்கச் செய்வேன் ஜோகூர் பட்டத்து இளவரசர் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த சில நாட்களாக ஜோகூர் இளவரசர் மற்றும் சுற்றுலாத் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ நஸ்ரி அசிஸ் ஆகிய இருவருக்கும் இடையில் கடுமையான கருத்து வேறுபாடுகள் நிலவி வருகின்றன.
அண்மையில், பிரதமர் நஜிப்புக்கு எதிராகச் சில கருத்துக்களைப் பதிவு செய்துள்ள ஜோகூர் சுல்தானின் மகனும் பட்டத்து இளவரசருமான துங்கு இஸ்மாயில் சுல்தான் இப்ராகிமை, நஸ்ரி அசிஸ் கடுமையாகச் சாடினார்.
அரசியலில் தலையிட வேண்டாம் என்றும் எச்சரிக்கை விடுத்தார். அதனைத் தொடர்ந்து ஜோகூர் இளவரசரும் நஸ்ரிக்கு எதிராகக் கருத்துக்களைத் தெரிவித்து வருகின்றார்.
இந்நிலையில் நேற்று, ஜோகூரில் புக்கிட் செரனே என்ற பகுதியில், நஸ்ரி பதவி விலக வேண்டும் என்று கூறி 100-க்கும் மேற்பட்ட ஜோகூர்வாசிகள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
அவர்களை சமாதானம் செய்த ஜோகூர் இளவரசர், “உங்களின் ஆதரவிற்கு நன்றி. புத்ராஜெயாவில் இருந்து கொண்டு எனக்குச் சவால் விடுபவர்களைப் போல் நான் அதிகம் பேச விரும்பவில்லை” என்று அங்கு கூடியிருந்த மக்கள் முன் இளவரசர் தெரிவித்துள்ளார்.
“என்னுடைய தந்தை எப்போதும் எனக்குக் கூறும் அறிவுரை என்னவென்றால், நான் ஜோகூருக்குப் பணிவான வேலையாள்” என்றும் இளவரசர் கூறியுள்ளார்.