பீஜிங், ஜூன் 17 – அண்மையில் பிரதமர் நரேந்திர மோடி மேற்கொண்ட சீனப் பயணத்தின் போது, இரு நாட்டு அரசுகளுக்கிடையே கையெழுத்தான ஒப்பந்தங்களின் விளைவாக அங்கு முதல் யோகா கல்லூரி தொடங்கப்படவுள்ளது.
சீனாவின் கன்மிங் சிட்டி பகுதியில் உள்ள தெற்கு யுனான் மின்சு பல்கலைக்கழகத்தில் யோகா கல்லூரி ஒன்றை இந்தியா துவங்கவுள்ளது. கடந்த மாதம் பிரதமர் மோடி பீஜிங்கிற்கு வந்திருந்தபோது சீன அதிபரிடம் யோகாவின் வளர்ச்சியைப் பற்றிப் பேசியிருந்தார்.
குறிப்பாக, சீனாவில் கடந்த சில ஆண்டுகளில் யோகா பிரபலமாகியிருந்ததைச் சுட்டிக்காட்டியிருந்தார். இதையடுத்து, இந்திய ஆசிரியர்களுடன் கூடிய யோகா கல்லூரியை அங்குள்ள யுனான் பல்கலைக்கழகத்தில் துவங்குவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
அதன்படி, யோகா கல்லூரியைத் திறந்து வைக்கிறது இந்திய அரசு. இந்தக் கல்லூரியானது யோகாவுக்கான சான்றிதழ் படிப்புகளை வழங்குகிறது. இதற்காக இரண்டு ஆசிரியர்களை இந்திய கலாச்சாரத்துறை (ஐ.சி.சி.ஆர்) சீனாவின் பல்கலைக்கழகத்திற்கு அனுப்புகிறது.
இந்தியாவிலிருந்து சீனா சென்றுள்ள 20 யோகா ஆசிரியர்களைக் கொண்டு நாளை முதல் வரும் 21-ஆம் தேதி வரை செங்டு நகரில் ஆயிரம் சீன மாணவர்களுக்கு 5 நாள் யோகா பயிற்சி முகாம் நடைபெற இருக்கிறது.
ஏற்கனவே, வரும் 21-ஆம் தேதி அனைத்துலக யோகா தினத்தன்று சீனாவின் அனைத்து நகரங்களிலும் சிறப்பு நிகழ்ச்சிகளை நடத்த எவ்வித நிபந்தனையும் இன்றி அந்நாட்டு அரசு அனுமதி அளித்திருப்பது குறிப்பிடத்தக்கது.