கோவை, ஜூன் 17 – நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்கான “செர்லாக்’ என்ற தானிய வகை உணவுப் பொருளில் வண்டுகள் கிடந்தது கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான “மேகி’ நூடுல்ஸ்களில் ரசாயனம் கலந்துள்ளதாக ஆய்வில் தெரியவந்ததையடுத்து, நாடு முழுவதும் தடை விதிக்கப்பட்டது.
இந்நிலையில், கோவையில் வாடிக்கையாளர் வாங்கிய நெஸ்லே நிறுவனத்தின் குழந்தைகளுக்குக்கான “செர்லாக்’ என்ற உணவுப் பொருளில் வண்டுகள் கிடந்துள்ளது தெரியவந்துள்ளது. கோவை, செல்வபுரம் பகுதியைச் சேர்ந்தவர் ஸ்ரீராம்.
இவர் இரு நாள்களுக்கு முன் பேரூரில் உள்ள மருந்துக்கடையில் தனது ஒரு வயது குழந்தைக்காக நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான அரிசி, கோதுமை, பழங்கள் கலவை கொண்ட “செர்லாக்-3′ என்ற தானிய வகை உணவுப் பொருளை வாங்கியுள்ளார்.
திங்கள்கிழமை குழந்தைக்குக் கொடுப்பதற்காக ஸ்ரீராமின் மனைவி ப்ரீத்தி அந்தப் பாக்கெட்டைத் திறந்தபோது, அதில் ஏராளமான வண்டுகள் இருப்பதைக் கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதையடுத்து, நெஸ்லே நிறுவனத்தை ஸ்ரீராம் தொடர்பு கொண்டபோது நிறுவனத் தரப்பில் உரிய பதில் கிடைக்கவில்லை என்று கூறப்படுகிறது.
இதுகுறித்து, ரேஸ்கோர்ஸில் உள்ள மாவட்ட உணவுப் பாதுகாப்பு அலுவலர் கதிரவனிடம் ஸ்ரீராம் புகார் அளித்தார். மேலும், வண்டுகள் கிடந்த உணவுப் பொருளையும் அவரிடம் ஒப்படைத்தார்.
தொடர்ந்து, நெஸ்லே நிறுவன முகவர்களிடம் உள்ள செர்லாக் உணவுப் பொருள்களின் மாதிரிகள் சேரிக்கப்படவுள்ளன. அவையும் பரிசோதனைக்கு உட்படுத்தப்பட உள்ளன. அதன் அடிப்படையில் மேற்கொண்டு நடவடிக்கை எடுக்கப்படும் என்றார்.
ஏற்கெனவே கடந்த சில நாள்களுக்கு முன் கோவை, குழந்தைக்கு நெஸ்லே நிறுவனத் தயாரிப்பான “நான்ப்ரோ 3′ என்ற பால் மாவில் வண்டுகள், புழுக்கள் இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து, தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புத் துறை நடவடிக்கை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது.