Home கலை உலகம் திரைவிமர்சனம்: எலி – மக்களைச் சிரிக்க, ரசிக்க வைக்கத் தவறியது!

திரைவிமர்சனம்: எலி – மக்களைச் சிரிக்க, ரசிக்க வைக்கத் தவறியது!

942
0
SHARE
Ad

eliஜூன் 19 – ‘தெனாலிராமன்’ படத்திற்குப் பிறகு இயக்குநர் யுவராஜ் தயாளன், வடிவேலு கூட்டணி மீண்டும் இணைந்திருக்கும் புதிய படம், ‘எலி’.

1960-ல் நடக்கும் சிகரெட் கடத்தல் தான் படத்தின் மையக்கரு. கதையில் மலையைக் குடையும் எலியாக வடிவேலு கதாப்பாத்திரம் சித்தரிக்கப்பட்டுள்ளது. அதாவது போலீஸ் எவ்வளவோ முயற்சி செய்தும் நெருங்க முடியாத ஒரு கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க சின்னச் சின்ன திருட்டு வேலைகளைச் செய்து வரும் எலிச்சாமியை (வடிவேலு) அனுப்புகிறார்கள். அவர் அக்கடத்தல் கும்பலைக் கண்டுபிடித்தாரா? இல்லையா? என்பது தான் மீதிக் கதை.

அடடா.. தனது தனித்துவமான உடல்மொழியாலும், நகைச்சுவை வசன உச்சரிப்பாலும் வடிவேலு சும்மாவே ஒரு கலக்கு கலக்குவார். இதில் இரகசிய உளவாளி வேறா? என்று எண்ணியவாறு திரையரங்கிற்குச் சென்று அமர்ந்தால் பெருத்த ஏமாற்றமே மிஞ்சியது.

#TamilSchoolmychoice

காரணம், படம் முழுக்க வருகிறார் வடிவேலு, ஆனால் மருந்துக்குக் கூட சிரிப்பு வரவில்லை.

தனது பட்டாளத்துடன் வீடு புகுந்து பூட்டை உடைத்துத் திருடுவது, பொதுமக்களிடம் அடிவாங்குவது என வடிவேலுவின் பழைய காமெடிக் காட்சிகளையெல்லாம் ஒன்றாக இணைத்து முழுப்படமாக தொகுத்தது போல் இருந்தது.

திரைக்கதை

Eli

1960-ல் சென்னையில் நடக்கும் கதையாம். படம் தொடங்கியது முதல் முடிவு வரை எங்கும் ஒரு விறுவிறுப்போ, திருப்பங்களோ இன்றி முழுக்க முழுக்க வடிவேலுவின் நகைச்சுவையை மட்டுமே நம்பி நகர்கிறது திரைக்கதை. ஆனால் வடிவேலுவால் அதற்கு ஈடுகொடுக்க முடியவில்லை என்றே தோன்றுகிறது.

அதோடு, 1960-ல் நடக்கும் கதை என்பதைக் காட்சிகளால் காண்பிக்க எடுக்கப்பட்ட முயற்சிகள் மிகவும் குறைவு. ஒளிப்பதிவும், வசனங்களும் கதைக்கு ஏற்ப சரியாகப் பொருந்தவில்லை. அதனால் கதையுடன் நம்மால் ஒன்ற முடியவில்லை.

எல்லோருக்கும் மீசையை ஒதுக்கிவிட்டு, கழுத்தில் ஸ்கார்ப் கட்டிவிட்டால் போதும் என்று நினைத்துவிட்டார்கள்.

கதைப்படி, இரகசிய உளவாளியாக நடித்திருக்கும் வடிவேலுவின் அறிவுத்திறமையைப் பற்றி ஆஹா ஓஹோ என்று புகழும் படியான வசனங்கள் தான் இருக்கின்றதே தவிர அழுத்தமான காட்சிகள் இல்லை.

கடத்தல் கும்பலைக் கண்டுபிடிக்க வடிவேலு பல புதிய யுத்திகளைக் கடைபிடிப்பது போலவும், திட்டமிடுவது போலவும் காட்சிகளை அமைத்து, அதையும் வடிவேலு பாணியிலே நகைச்சுவையுடன் காட்டியிருந்தால் படம் சிறப்பாக வந்திருக்கும்.

படத்தில் கஜினியில் வில்லனாக மிரட்டிய பிரதாப் ராவத், சதா, மகாநதி சங்கர், ஆதித்யா, சந்தான பாரதி, ராஜ்கபூர், முத்துக்காளை என மக்களுக்கு நன்கு பரீட்சயமான நடிகர்கள் இருந்தும் திக்கித் திணறுகிறது திரைக்கதை.

ஒளிப்பதிவு மற்றும் இசை

eli

பால் லிவிங்ஸ்டன் ஒளிப்பதிவில் காட்சிகள் அனைத்தும் பளிச்சென இருக்கின்றது. குறிப்பாக வடிவேலு, சதாவைப் பாடல்காட்சிகளில் மிக அழகாகக் காட்டியிருக்கிறார்.

ஆனால் படம் 1960-ல் நடக்கிறது என்பதை மக்களுக்கு அவ்வப்போது நினைவுறுத்தும் படியான காட்சிகள் படத்தில் மிகவும் குறைவு.

வித்யாசாகரின் இசையில் பின்னணி இசை சுமார், என்றாலும் வடிவேலு தன் குரலில் பாடிய அந்த ஒரு பாடலும், வரிகளும் மட்டும் கேட்பதற்கு இனிமை.

மொத்தத்தில் எலி –  மக்களைக் சிரிக்க, ரசிக்க வைக்கத் தவறியது!

– ஃபீனிக்ஸ்தாசன்