மதுரை, ஜூன் 19- நடிகர் சங்க விவகாரத்தில் இரு தரப்புக்கும் இடையே தூதுவராகச் செயல்பட்டு, பிரச்சனையைச் சுமூகமாக முடிக்கக் களமிறங்கி இருப்பதாக மதுரை ஆதீனம் கூறியுள்ளார்.
நடிகர் சங்கக் கட்டிடம் கட்டுவது தொடர்பாகப் பிரச்சனை எழுந்து, சங்கத் தலைவர் சரத்குமார் தலைமையில் ஓர் அணியாகவும், விஷால் தலைமையில் ஓர் அணியாகவும் சங்கம் இருவேறாகப் பிளவுபட்டுக் கிடக்கிறது.
வரும் நடிகர் சங்கத் தேர்தலில் சரத்குமாரை எதிர்த்துப் போட்டியிடுவதில் விஷால் தீவிரமாக இருக்கிறார்.
இந்நிலையில் சரத்குமார், மதுரை ஆதீனத்தைச் சந்தித்துப் பேசினார். இச்சந்திப்பு குறித்து மதுரை ஆதீனம் கூறியதாவது:
தமிழகத்தில் ஆன்மீகத்தையும் சினிமாவையும் அரசியலையும் என்றைக்கும் பிரித்துப் பார்க்க முடியாது. அதனால்தான் சந்நிதானமாக இருக்கும் நான், அரசியல் பற்றிப் பேச வேண்டியதாகிறது; சினிமா பற்றிப் பேச வேண்டியதாகிறது.
சினிமாத்துறையில் இருக்கும் அத்தனை பேரும் என் மீது அன்பு கொண்டவர்கள். நான் சொன்னால் கேட்பார்கள்.
நடிகர் சங்கத்திற்குள் குழப்பம் விளைவிக்க முயலும் சிலரைத் தடுக்க வேண்டும் என்று ராதாரவியும் சரத்குமாரும் என்னைச் சந்தித்துக் கேட்டுக் கொண்டனர். அவர்களுக்குள் இருக்கும் பிரச்சனை ஒரு நிமிடத்தில் தீரக் கூடியது.
நடிகர் சங்கம் பிளவுபடக் கூடாது என்பதுதான் என் எண்ணம். தேர்தல் நடக்காமல் ஒருமித்த கருத்து அடிப்படையில் சரத்குமார் மீண்டும் தலைவராகத் தேர்வு செய்யப்பட வேண்டும்.
இதற்காக எதிர்த் தரப்பிடம் பேசிச் சமாதானம் ஏற்படுத்தும் முயற்சியில் நான் இறங்கியிருக்கிறேன். நல்லபடியாகவே முடியும் என நினைக்கிறேன்.
இவ்வாறு அவர் கூறினார்.
விஷால் தரப்பு, ஆதீனத்தின் சமரசத்தை ஏற்றுக் கொள்ளுமா?
சந்நிதானம் சமாதானம் செய்வது பலிக்குமா? பார்க்கலாம்!