Home நாடு பழனி-சுப்ரா பலப்பரிட்சை – புத்ரா உலக வாணிப மையத்தில் சனியும் ஞாயிறும் போட்டிப் பேரணிகள்!

பழனி-சுப்ரா பலப்பரிட்சை – புத்ரா உலக வாணிப மையத்தில் சனியும் ஞாயிறும் போட்டிப் பேரணிகள்!

562
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 20 – மஇகா – சங்கப் பதிவகத்தின்  இடையிலான வழக்கின் தீர்ப்பு வெளியானது முதற்கொண்டு, பழனிவேல்-சுப்ரா இரு அணிகளும், கட்சியிலும், இந்தியச் சமுதாயத்திலும் தங்களின் ஆதரவு பலத்தை நிலைநிறுத்த முனைப்புடன் செயல்படத் தொடங்கியுள்ளன.

subra-and-palani

இந்த இரண்டு தரப்புகளும் போட்டி பேரணிகளை நடத்த முற்பட்டிருக்கும் வேளையில் அதனால் பயன்பெறப் போவது என்னவோ புத்ரா உலக வாணிப மையம்தான்!

#TamilSchoolmychoice

காரணம், இரண்டு பேரணிகளும் இன்றும் நாளையும் புத்ரா உலக வாணிப மையத்தில்தான் நடத்தப்படவிருக்கின்றன.

இன்று பழனிவேல் பேரணி

பழனிவேல் தரப்பினரின் பேரணி இன்று சனிக்கிழமை நண்பகல் 12 மணியளவில் புத்ரா உலக வாணிப மையத்தில் நடைபெறுகின்றது.

Palanivel-Feature---3கடந்த சில நாட்களாக மஇகா கிளைத் தலைவர்களுக்குச் செல்பேசி குறுஞ்செய்திகள் வாயிலாக அழைப்புகள் அனுப்பப்பட்டு வருகின்றன. அதே வேளையில், பழனிவேல் அமைச்சு அலுவலகத்திலிருந்து தொலைபேசி வழி மஇகா கிளைத் தலைவர்கள் அழைக்கப்பட்டு, பழனிவேல் நடத்தும் பேரணிக்கு வருமாறு வற்புறுத்தி அழைக்கப்பட்டுள்ளனர்.

ஆனால், இதுவரை கட்சியில் நடந்த எத்தனையோ பிரச்சனைகளுக்கு மத்தியில் மஇகா கிளைத் தலைவர்களுக்கு மரியாதை கொடுத்து அழைக்காமல் – எதையும் தெரிவிக்காமல் இருந்து வந்த பழனிவேலுவின் தலைமைத்துவம் –

இப்போது அவரது தலைமைப் பதவிக்கே ஆபத்து என்றவுடன், அக்கறையுடன் ஒவ்வொரு கிளைத் தலைவராக அழைத்து, அவரது அலுவலகப் பணியாளர்கள் இன்றைய கூட்டத்திற்கு அழைப்பு விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், பழனிவேல் மற்றும் மஇகா சார்பில் அரசாங்க நிதியுதவிகள், மானியங்கள் பெற்ற ஆலயங்கள், அரசு சாரா இயக்கங்களின் பிரதிநிதிகளையும் பழனிவேல் தரப்பினர் இந்த அரசியல் கூட்டத்திற்கு அழைத்திருப்பதாகப் போட்டித் தரப்பில் இருந்து சிலர் அறிக்கைகள் விட அது சர்ச்சையாகியுள்ளது.

நாளை சுப்ராவின் பேரணி

Datuk-Seri-Dr-S.Subramaniamநாளை நண்பகல் 12 மணிக்கு அதே புத்ரா உலக வாணிப மையத்தில் சுப்ரா தரப்பினரின் ஆதரவுப் பேரணி நடைபெறுகின்றது.

இதில் மஇகா கிளைத் தலைவர்கள், தொகுதித் தலைவர்கள் பெருவாரியான அளவில் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இன்றைய நிலைமையில் 3,700க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்களில் எந்தத் தரப்பு அவர்களை அதிக அளவில் ஈர்க்க முடியும் என்பதுதான் மஇகா ஆர்வலர்கள் ஆர்வத்துடன் எதிர்பார்த்துக் காத்திருக்கும் கேள்வியாக இருக்கின்றது. காரணம், தேசியத்தலைவர் பதவிக்குப் போட்டி நடந்தால் அதில் வாக்களிக்கப் போகின்றவர்கள் கிளைத் தலவைர்கள்தான்!

கட்சியில் எந்தத் தலைவருக்கு ஆதரவு அதிகம் என்பதை வைத்துத்தான் அரசியல் ரீதியாகத் தேசிய முன்னணியும் சில முடிவுகளை எடுக்க முன்வரும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

கலந்து கொள்பவர்களின் பட்டியலை அறிவிப்பார்களா?

எனவே, பழனிவேல்-சுப்ரா இரண்டு தரப்பினரும் இந்தியச் சமுதாயத்திற்காகவும், கட்சி நலனுக்காகவும் ஒரு சவாலை ஏற்க முன்வர வேண்டும்.

இந்த ஆதரவுப் பேரணிகள் நடைபெற்று முடிந்ததும், இந்தக் கூட்டத்தில் கலந்து கொண்ட கிளைத் தலைவர்கள் எத்தனை பேர் மற்றும் தொகுதித் தலைவர்கள் எத்தனை பேர் – அவர்கள் யார் யார் என்ற பட்டியலைப் புள்ளி விவரத்துடன் இரண்டு தரப்பினரும் துணிச்சலுடன் வெளியிட முன்வர வேண்டும்.

அப்போதுதான், கட்சி அளவில் யாருக்கு அதிகமான செல்வாக்கு இருக்கின்றது என்பது ஓர் உத்தேச அடையாளமாக – ஓரளவுக்கு மக்களுக்கும் தெரிய வரும்.

செய்வார்களா?

-இரா.முத்தரசன்