கோலாலம்பூர், ஜூன் 20 – உலகத் தொழில்நுட்பங்களின் தவிர்க்க முடியாத ஆளுமைகள் என்றவுடன் நம் நினைவிற்கு மைக்ரோசாப்ட்டின் பில்கேட்ஸும், ஆப்பிளின் ஸ்டீவ் ஜாப்ஸ் மற்றும் ஆரக்கல் நிறுவனத்தின் லாரி எலிசன் ஆகியோர் மட்டும் நினைவிற்கு வருவர். இவர்கள் மட்டுமல்லாமல் மேலும் பலர் தொழில்நுட்ப உலகில் பெரும் பங்காற்றி தவிர்க்க முடியாத சக்திகளாக வலம் வருகின்றனர்.
அவர்கள் பற்றிய தொகுப்பைக் கீழே காண்க:
எடுவார்டோ சவரின்
பிரேசில் நாட்டில் பிறந்து அமெரிக்காவில் பள்ளிப்படிப்பை முடித்த எடுவார்டோ சவரின், மார்க் சக்கர்பெர்க்குடன் சேர்ந்து பேஸ்புக்கை உருவாக்கியது முதல் இவரின் வெற்றிகள் ஆரம்பமாகின. பேஸ்புக்கில் மட்டும் 53 மில்லியன் பங்குகளை வைத்திருக்கும் எடுவார்டோ, கடந்த 2012-ம் ஆண்டு சிங்கபூருக்கு இடம்பெயர்ந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. இவரின் சொத்து மதிப்பு 5.1 பில்லியன் டாலர்கள் எனக் கணக்கிடப்பட்டுள்ளது.
காரெட் கேம்ப்
போக்குவரத்துச் சேவைகளில் முன்னிலை வகிக்கும் ‘உபெர்’ (Uber) நிறுவனத்தின் இணை நிறுவனரான காரெட் கேம்ப், கடந்த 2002-ம் ஆண்டு இணைய உள்ளடக்கத்தைப் பயனர்களுக்கு அளிக்கும் ‘ஸ்டம்பில்அப்பான்’ (Stumble Upon) பயன்பாட்டை உருவாக்கினார். இந்தப் பயன்பாட்டின் தனித்துவத்தை உணர்ந்த ஈபே நிறுவனம், கடந்த 2007-ம் ஆண்டு சுமார் 75 மில்லியன் டாலர்களுக்கு அதனை வாங்கியது. தற்போது இவரின் சொத்து மதிப்பு 5.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
ஜாக் மா
சீனாவில் இணைய வர்த்தகத்தை கலக்கிக் கொண்டிருக்கும் அலிபாபா நிறுவனத்தின் தலைவரான ஜாக் மா, இன்று அமெரிக்கா, இந்தியா போன்ற நாடுகளில் தனது நிறுவனத்தின் மூலம் கால்பதிக்கும் முயற்சிகளை எடுத்து வருகிறார். இவரின் நிகரச் சொத்து மதிப்புன் 25.3 பில்லியன் டாலர்கள் ஆகும்.
ஹாசோ பிளாட்டர்
ஜெர்மன் நிறுவனமான ‘சேப்’ (SAP)-ன் உருவாக்கத்தில் தவிர்க்க முடியாதவாரன ஹாசோ பிளாட்டர், கடந்த ஆண்டு தனது சொத்து மதிப்பான 9.5 மில்லியன் சொத்துகளில் பாதியைத் தொண்டு நிறுவனங்களுக்குக் கொடுப்பதாக அறிவித்தார்.
அசிம் பிரேம்ஜி
இந்தியாவின் மிக முக்கிய தொழில்நுட்ப நிறுவனமான விப்ரோவின் தலைவராக இருக்கும் அசிம் பிரேம்ஜி, இந்தியாவில் அதிக வருவாயை ஈட்டும் முக்கிய நிர்வாகியாகத் திகழ்கிறார். தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவராக மட்டுமல்லாமல் பிறர் நலனில் அக்கறை கொண்டவராகவும் பார்க்கப்படுகிறார். விப்ரோவில் 4.4 பில்லியன் டாலர்கள் பங்கு வைத்திருக்கும் இவரின் சொத்து மதிப்பு 16 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.
ஷால் ஷனி
இஸ்ரேல் நாட்டின் தொழில்நுட்ப வல்லுனரான ஷால் ஷனி , எப்போதும் பொது ஊடகங்களில் தன்னைப் பிரகடனப்படுத்திக் கொள்ள விரும்புவதில்லை. குளோபல் டெலிகாம் வில்லேஜின் நிறுவனரான இவரின் நிகரச் சொத்து மதிப்பு 3 பில்லியன் டாலர்கள் என்று கூறப்படுகிறது.