Home நாடு “பிரதமரும் சங்கப் பதிவகமும் மஇகாவுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” – பழனிவேல்

“பிரதமரும் சங்கப் பதிவகமும் மஇகாவுக்கு எதிராகச் செயல்படுகின்றனர்” – பழனிவேல்

470
0
SHARE
Ad

unnamed (5)கோலாலம்பூர், ஜூன் 20 – மஇகா தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தலைமையில், இன்று மதியம் தலைநகர் புத்ரா உலக வாணிப மையத்தில், ஏறக்குறைய 2,500 முதல் 3,000 பேர் பங்கேற்ற ஆதரவுப் பேரணிக் கூட்டம் நடைபெற்றது.

அக்கூட்டத்தில் நாடெங்கிலும் இருந்து பலர் கலந்து கொண்டுள்ளதாக அறிவிக்கப்பட்டாலும் அவர்களில் எவ்வளவு பேர் மஇகா கிளைத் தலைவர்கள், எத்தனை தொகுதித் தலைவர்கள் என்பது போன்ற விவரங்கள் தெரிவிக்கப்படவில்லை.

அக்கூட்டத்தில் பலத்த கைதட்டல்களுக்கு இடையே மேடையேறிய பழனிவேல், கட்சியின் இன்றைய நிலை குறித்தும், மஇகா தேர்தல்கள் குறித்தும், தனது அடுத்தக்கட்ட நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார்.

#TamilSchoolmychoice

அக்கூட்டத்தில் பழனிவேல் கூறியதாவது:-

“இது நீதிக்கும், அநீதிக்கும் இடையே நடக்கும் போராட்டம். கடந்த 70 ஆண்டுகளில் மஇகா எதிர்நோக்கியிருக்கும் மிகப் பெரிய சவால் இது. மஇகா தற்போது சுயநலவாதிகள் மற்றும் நயவஞ்சகர்களின் பிடியில் சிக்கியுள்ளது. அவர்கள் கட்சியைத் தங்களது சுயநலத்திற்காகப் பயன்படுத்திக் கொண்டு, பாதாளத்தில் தள்ளிவிட்டனர்.”

“கடந்த 2013-ம் ஆண்டு நடந்த கட்சித் தேர்தலில் நான் கட்சி உறுப்பினர்களின் ஆதரவோடு ஏகமனதாகத் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டேன். அதன் பின்பு உதவித் தலைவர்கள், மத்திய செயலவை மற்றும் கிளைத்தலைவர்களுக்கான தேர்தல் நடைபெற்றது. தேர்ந்தெடுக்கப்பட்ட மத்தியச் செயலவை, கடந்த 2014-ம் ஆண்டு, பிப்ரவரி மாதம் 6-ம் தேதி நடைபெற்ற கூட்டத்தில் கட்சி எடுத்த அனைத்து முடிவுகளையும் ஏற்றுக்கொண்டது.”

“ஆனால் தேர்தலில் தோல்வியுற்றவர்கள் முறைகேடுகள் நடந்ததாகக் கூறிக் குழப்பங்களை ஏற்படுத்தினார்கள். அப்போது ஆர்ஓஎஸ் (சங்கங்களின் பதிவிலாகா) தலையிடவில்லை. ஆனால் இப்போது ஆர்ஓஎஸ் தேவையில்லாமல் கட்சியில் தலையிடுகின்றது.”

“மஇகா தனது சட்டதிட்டங்களை ஒழுங்காகத் தான் பின்பற்றி வருகின்றது. ஆனால் ஆர்ஓஎஸ் வீணாகக் கட்சி விவகாரங்களில் தலையிட்டதால் தான் நீதிமன்றம் வரை போக வேண்டியதாகிவிட்டது. என்றாலும், அங்கு ஏதோ சில சதி வேலைகள் நடைபெற்று வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டு விட்டது. ஆனால் நாம் இதோடு விடப் போவதில்லை. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்கிறோம். மஇகா-வில் ஆர்ஓஎஸ் தலையிடக்கூடாது.”

“இங்கு கிட்டத்தட்ட 2500 கிளைத்தலைவர்கள் வந்திருக்கிறார்கள். இது மஇகா வரலாற்றில் மிக முக்கியமான கூட்டம். இந்தக் கூட்டத்தை நடத்த வேண்டாம் என்று பிரதமர் கூறினார். ஆனால் இங்கே வந்து பார்த்த போது தான் எவ்வளவு பேர் நமக்கு ஆதரவாக இருக்கிறார்கள் என்று தெரிகின்றது.தேசிய முன்னணி நமக்கு ஆதரவு தர மறுக்கிறது. பிரதமர் நஜிப் தான் மறுதேர்தலை நடத்தும் படி கூறுகின்றார்.”

unnamed (6)

“கட்சியில் சிலர் போக்கு சரியில்லை. துணைத்தலைவர் டாக்டர் சுப்ரமணியம் தன்னைப் புதிய தலைவர் என அறிவித்துக் கொள்கின்றார். சக்திவேல் பொதுச்செயலாளராம், விக்னேஸ்வரன் நிர்வாகச் செயலாளராம். வேள்பாரிக்கு என்ன பதவி என்று எனக்குத் தெரியாது. ”

“இவர்களைப் போன்ற சுயநலவாதிகளைக் கட்சியை விட்டு நீக்க வேண்டும். ஏற்கனவே இந்த 15 பேரை இடைநீக்கம் செய்திருக்கிறேன். நான் தான் கட்சியின் தேசியத் தலைவர். கட்சியில் முடிவுகளை எடுப்பதற்கு எனக்கு முழு அதிகாரம் உள்ளது.”

“எனக்குப் பிறகு சோதிநாதன், பாலகிருஷ்ணன் இருக்கிறார்கள். மஇகா-வின் சொத்துக்களை நிச்சயம் மீட்டெடுப்பேன். எய்ம்ஸ்ட் பல்கலைக்கழகம், எம்ஐஇடி போன்ற சொத்துக்களை மீட்டெடுத்து ஒப்படைத்துவிட்டுப் பதவி விலகிக் கொள்கிறேன். அதற்கு இன்னும் சில வருடங்கள் ஆகும். அதனால் எனக்கு இந்த முறை தேர்தலில் முழு ஆதரவு கொடுங்கள். கட்சிக்கு நல்ல எதிர்காலத்தை அமைப்போம்.”

“வரும் ஆகஸ்ட் மாதம் கிளைத்தேர்தல் நடைபெறும். தேசியத் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் எனக்கு 3000 கிளைகள் ஆதரவு வழங்க வேண்டும். அதன் பிறகு துணைத்தலைவர், உதவித்தலைவர்கள், மத்திய செயலவை உறுப்பினர்கள் ஆகியோரைத் தேர்ந்தெடுப்போம். சிந்தித்துச் செயல்படுங்கள். மஇகா-விற்கு நிச்சயமாக நல்ல எதிர்காலம் இருக்கின்றது”

இவ்வாறு பழனிவேல் தனது உரையில் தெரிவித்தார்.

செய்தி, படங்கள் – ஃபீனிக்ஸ்தாசன்