கோலாலம்பூர், ஜூன் 21 – இன்று கோலாலம்பூரில் உள்ள புத்ரா உலக வாணிப மையத்தில் கூடிய 2,758க்கும் மேற்பட்ட மஇகா கிளைத் தலைவர்களும், 95 தொகுதித் தலைவர்களும் இணைந்து நடத்திய மாபெரும் பேரணியில் அனைவரும் ஒருமனதாக டத்தோஸ்ரீ ஜி.பழனிவேலுவும், மற்ற நால்வரும் மஇகா சட்டவிதி 91இன் படி தங்களின் மஇகா கட்சி உறுப்பியத்தை இழந்துள்ளதைத் தீர்மானத்தின் வழி மறுஉறுதிப் படுத்தினர்.
மாநாட்டில் உரையாற்றும் மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டாக்டர் சுப்ரா
மஇகாவின் மொத்த மஇகா கிளைகள் ஏறத்தாழ 3,700 என்றும் மொத்த தொகுதிகள் ஏறத்தாழ 150 என்றும் மஇகா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் கட்சியின் பெரும்பான்மை கிளைகளும், தொகுதிகளும் டாக்டர் சுப்ரா பக்கம் அணி திரண்டுள்ளனர் என்பது இன்று உறுதியாகியுள்ளது.
மஇகா வரலாற்றில் முக முக்கியமான நாளாகப் பதிவு பெறும் இந்நாளில், கலந்து கொண்ட மஇகா தலைவர்கள் அனைவரும் கட்சியின் துணைத் தலைவரும், சுகாதார அமைச்சருமான டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியத்தைக் கட்சியின் இடைக்கால தேசியத் தலைவராக ஒருமனதாக அங்கீகரித்தனர்.
இந்தக் கூட்டத்தில் கட்சியின் முன்னாள் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ உத்தாமா ச.சாமிவேலுவும் மேலும் சில மூத்த கட்சி உறுப்பினர்களும் கலந்து கொண்டனர்.
இன்றைய மாநாட்டில் டத்தோ சரவணன் உரையைச் செவிமெடுக்கும் தலைவர்கள்…
கூட்டம் நடைபெற்ற மாநாட்டு மண்டபத்திற்குள் கிளைத் தலைவர்கள் தவிர வேறு யாரும் அனுமதிக்கப்படவில்லை. பத்திரிக்கையாளர்கள், ஒரு சில மூத்த உறுப்பினர்கள், அழைக்கப்பட்ட பிரமுகர்கள் சிலர் என ஒரு சிலர் மட்டுமே அனுமதிக்கப்பட்டனர்.
கிளைத் தலைவர்கள் முதலில் மண்டபத்திற்கு வெளியே தங்களைப் பதிவு செய்து கொண்டு, கிளைத் தலைவர் என உறுதிப் படுத்திக் கொண்ட பின்னரே அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கப்பட்டது. இந்தப் பதிவுகளைத் தனியார் கணக்காய்வுத் தணிக்கை நிறுவனம் ஒன்று மேற்கொண்டிருந்தது.
அவ்வாறு அடையாள அட்டைகளைப் பெற்ற கிளைத் தலைவர்கள் மட்டுமே மண்டபத்தினுள் பலத்த பரிசோதனைக்குப் பின்னர் அனுமதிக்கப்பட்டனர். மகளிர், இளைஞர் பகுதியினரும் அவ்வாறே பதிவுக்குப் பின்னரே – அடையாள அட்டை வழங்கப்பட்டு அனுமதிக்கப்பட்டனர்.
பதிவு செய்து அடையாள அட்டையுடன் திரளாகக் கலந்து கொண்ட மஇகா தலைவர்கள்
ஒவ்வொரு கிளைத் தலைவரும் தங்களின் பதிவையும் வரவையும் உறுதிப்படுத்தும் பச்சை நிற பாரத்தில் கையெழுத்திட்டனர்.
பின்னர் கூட்டம் தொடங்கியவுடன் இதுவரை தணிக்கை நிறுவனத்தின் கணக்குப்படி அதிகாரபூர்வமாக 2,758 கிளைத் தலைவர்கள் கலந்து கொண்டுள்ளனர் என்றும் மேலும் சிலர் இன்னும் பதியாமல் இருப்பதால் இந்த எண்ணிக்கை மேலும் கூடுதலாகும் என்றும் கூட்டத்தில் அறிவிக்கப்பட்டது.
95 தொகுதித் தலைவர்களும் நேரடியாக வருகை தந்து மாநாட்டு மண்டப மேடையில் அமர்ந்திருந்தனர்.