கோலாலம்பூர், ஜூன் 22 – கடந்த ஜூன் 15ஆம் தேதி கோலாலம்பூர் உயர் நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை எதிர்த்து டத்தோஸ்ரீ ஜி.பழனிவேல் தரப்பினர் மேல்முறையீட்டு நீதிமன்றத்திற்கு மேல்முறையீடு செய்துள்ளனர்.
நேற்று டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தை இடைக்காலத் தலைவராக அங்கீகரித்தும், பழனிவேல் உள்ளிட்ட 5 பேரும் மஇகா உறுப்பியத்தை இழந்து விட்டதை உறுதி செய்தும் 2,758க்கும் மேற்பட்ட கிளைத் தலைவர்கள் தீர்மானத்தின் வழி மறு உறுதி செய்துள்ளனர்.
கிளைத் தேர்தல்கள் ஜூலை 10இல் தொடங்கும்
இதற்கிடையில் கிளைகளுக்கான தேர்தல்கள் ஜூலை 10ஆம் தேதி முதற்கொண்டு தொடங்கும் என்றும் நேற்றைய மாநாட்டில் டாக்டர் சுப்ரா அறிவித்தார்.
அப்படி அவர்கள் இடைக்காலத் தடையை நாளை பெற முடியாவிட்டால், அவர்கள், அவசர விண்ணப்பம் ஒன்றை மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் சமர்ப்பித்து, அதன் மூலம் உயர்நீதிமன்ற தீர்ப்பின் மீது இடைக்காலத் தடையை மேல் முறையீட்டு நீதிமன்றத்தில் உடனடியாகப் பெற்றாக வேண்டும்.
அவ்வாறு அவர்கள் இடைக்காலத் தடையுத்தரவை, நாளை உயர்நீதிமன்றத்திலோ அல்லது பின்னர் மேல் முறையீட்டு நீதிமன்றத்திலோ பெற முடியாத சூழ்நிலை உருவாகுமானால், அதற்குள்ளாக, ஜூலை 10ஆம் தேதி கிளைகளுக்கான தேர்தல்கள் தொடங்கி விடும். அதன் பின்னர் பழனிவேல் தரப்பினரின் அரசியல் போராட்டம் ஒரு முடிவுக்கு வந்ததாகவே கருதப்படும்.
இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா?
எனவே, இப்போதுள்ள கேள்வி, இடைக்காலத் தடையுத்தரவு கிடைக்குமா என்பதுதான்.
இடைக்காலத் தடையுத்தரவு வழங்கக் கூடாது என சங்கப் பதிவகம் சார்பில் கடுமையான ஆட்சேபணைகள் நாளை எழுப்பப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
காரணம், நேற்று வழங்கப்பட்ட தீர்ப்பில் , பழனிவேல் முன் வைத்த திட்டங்களின் அடிப்படையில்தான் சங்கப் பதிவகம் முடிவு செய்தது என்றும், பழனிவேல் முன்வைத்த திட்டத்தைக் கொண்டிருக்கும் சங்கப் பதிவகக் கடிதத்தை அவரே இப்போது நீதிமன்றம் வந்து ரத்து செய்யச் சொல்வது எந்த வகையில் நியாயம் என்றும் நீதிபதி மிகத் தெளிவாக குறிப்பிட்டிருக்கின்றார்.
ஆனால், அதே வேளையில் இந்த வழக்கு மலேசிய சட்டத்துறை வரலாற்றில் பல முக்கிய அரசியல், சட்ட அம்சங்களை உள்ளடக்கிய ஒன்று என்பதாலும், கட்சியின் தேசியத் தலைவர் உள்ளிட்ட பல தலைவர்களின் அரசியல் வாழ்க்கை சம்பந்தப்பட்டது என்பதாலும், மேல்முறையீட்டு நீதிமன்றம் இறுதி முடிவு செய்யும்வரை தீர்ப்பைச் செயல்படுத்துவதில் இருந்து நிறுத்தி வைக்கும் இடைக்காலத் தடையுத்தரவை நீதிமன்றம் வழங்கக் கூடும்.
சட்டத்தின் முன் அனைவருக்கும் ஒரு வாய்ப்பு வழங்கப்பட வேண்டும் என்ற அடிப்படையிலும், கிளைத் தலைவர்களுக்கான தேர்தல்கள் நடந்து முடிந்து விட்டால், அதன் பின்னர் பழனிவேல் தரப்பினர் தேர்தல்களில் பங்கெடுக்க முடியாது என்ற அடிப்படையிலும், இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்படக் கூடும் என்ற ஒரு கருத்தும் வழக்கறிஞர்களிடையே நிலவுகின்றது.
அப்படியே, இடைக்காலத் தடை வழங்கப்பட்டாலும், கட்சித் தேர்தல்களை மேலும் இழுத்தடிக்க முடியாது என்ற அடிப்படையிலும் – கட்சியின் பதிவு ரத்தாகும் அபாயம் இருக்கின்றது என்ற சூழ்நிலையிலும் – மேல்முறையீட்டு நீதிமன்றம் அவசர விண்ணப்பமாக இந்த வழக்கை விசாரித்து உடனடியாகத் தீர்ப்பு வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் சங்கப் பதிவகம் சார்பாக முன் வைக்கப்படும் என்றும் எதிர்பார்க்கப்படுகின்றது.
பழனிவேல் உறுப்பியம் இழந்தது தனி விவகாரம்
நாளைய வழக்கின் தீர்ப்பு எப்படி இருப்பினும், மஇகா சட்டவிதி 91இன் படி பழனிவேலுவும் மேலும் நால்வரும் மஇகா உறுப்பியத்தை இழந்து விட்டார்கள் என்பது நாளை நடைபெறும் வழக்கிற்கு அப்பாற்பட்ட தனி விவகாரமாகும்.
மஇகா சட்டவிதி 91இன் படி பழனிவேல் உள்ளிட்ட ஐவர் தங்களின் உறுப்பியத்தை இழந்ததை நேற்று கூடிய 2,758 கிளைத் தலைவர்கள் மறு உறுதிப் படுத்தியுள்ளதால், அதனைத் தடுப்பதற்கும் பழனிவேல் தரப்பினரும் தனியாகச் சட்டப் போராட்டத்தில் ஈடுபட வேண்டிய நிலைமை ஏற்படலாம்.
-இரா.முத்தரசன்