கோலாலம்பூர், ஜூன் 22 – நேற்று நடைபெற்ற மஇகா கிளைத் தலைவர்கள், தொகுதித் தலைவர்களைக் கொண்ட ஆதரவுப் பேரணியில் மஇகா இடைக்கால தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், நீண்டதொரு விளக்க உரையாற்றினார்.
கட்சியில் எழுந்துள்ள பல்வேறு பிரச்சனைகள், எதிர்கால சவால்கள், கட்சிக்கும் சமுதாயத்திற்குமான தனது திட்டங்கள், பழனிவேலு நடத்தும் குழப்ப அரசியல் என பல்வேறு அம்சங்களை உள்ளடக்கியதாக டாக்டர் சுப்ராவின் உரை அமைந்திருந்தது.
ஏறத்தாழ ஒரு மணி நேரத்திற்கும் கூடுதலாக அவரது உரை நீண்டது. இருப்பினும், கட்சியின் முக்கியமான பிரச்சனைகளை உள்ளடக்கிய உரை என்பதால், பேராளர்கள் அனைவரும் பொறுமையுடன் அவரது உரையை செவிமெடுத்தனர்.
தனது உரையைத் தொடங்குவதற்கு முன்னால், கூட்டம் நடந்து கொண்டிருக்கும் நாள் தந்தையர் தினம் என்பதை நினைவுபடுத்திய சுப்ரா, தனது தந்தையை வணங்கி விட்டு தனது உரையைத் தொடங்குவதாகத் தெரிவித்தார்.
அவரது உரையின் சில முக்கிய அம்சங்கள் பின்வருமாறு:
காசு கொடுத்துக் கூட்டம் சேர்க்கவில்லை
“இந்தக் கூட்டத்திற்கு நாங்கள் யாரையும் பணம் கொடுத்து அழைத்து வரவில்லை. குறிப்பாக யாருக்கும் 50 வெள்ளி கொடுக்கவில்லை. கோலாலம்பூருக்கு பஸ் போகிறது வந்து ஏறிக் கொள்ளுங்கள் என யாரையும் அழைத்து வரவில்லை.”
“இந்தக்கூட்டத்தில் கிளைத் தலைவர்கள் மட்டுமே அதிக அளவில் கலந்து கொண்டார்கள் என்பதை அதிகாரபூர்வமாக உறுதிப்படுத்தும் விதத்தில், மண்டபத்திற்கு வெளியே தனியார் தணிக்கை நிறுவனம் ஒன்றின் மேற்பார்வையில் கிளைத் தலைவர்களின் பெயர், அவரது அடையாள அட்டை, அவரது கிளை விவரங்கள் சரிபார்க்கப்பட்டு அதன் பின்னரே அவருக்கு நுழைவு அடையாள அட்டை வழங்கப்பட்டது.”
“அதன்படி இன்று உள்ளே இருப்பவர்கள், 2,758 கிளைத் தலைவர்கள். மேடையிலே 95 தொகுதிக்காங்கிரஸ் தலைவர்கள் வீற்றிருக்கின்றார்கள். இவர்களைத் தவிர, இவர்களுக்கு அப்பால் என்ன மஇகா இருக்கின்றது? இங்கிருப்பவர்கள்தான் உண்மையான மஇகா.”
“அதே வேளையில் எல்லாவற்றையும் முறைப்படியும், சட்டத்திற்குட்பட்டும்தான் நாங்கள் செய்திருக்கின்றோம்.”
தேசியத் தலைவரே உறுப்பினர்களுக்கு எதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபட்டார்
“ஒரு தேசியத் தலைவர் என்பவர் ஒரு கட்சிக்கு தந்தை போன்றவர். அவர்தான் கட்சியில் உள்ள உறுப்பினர்களை அரவணைக்க வேண்டும். பாதுகாக்க வேண்டும். அதனால்தான் தேசியத் தலைவர் மீது நம்பிக்கை வைத்து அவரைத் தேர்ந்தெடுக்கின்றோம்.”
“ஆனால், நமது கட்சியில் தேசியத் தலைவரே உறுப்பினர்களுக்கு எதிராக கீழறுப்பு வேலைகளில் ஈடுபடுகின்றார். தேர்தல் முறைகேடுகளை முன்னின்று நடத்துகின்றார்.”
“2013 தேர்தலில் பல முறைகேடுகள் தேசியத் தலைவரின் பார்வையிலேயே அரங்கேறின.”
“நான் பலமுறை ஆலோசனை கூறியும், புகார் செய்தவர்களை அவர் இறுதிவரை அழைத்துப் பேசவேயில்லை. ஆர்ஓஎஸ் செல்லுங்கள் என தேசியத் தலைவரே கூறினார். புகார் கொடுத்தவர்களோ தேசியத் தலைவர் சொல்லுக்கு கட்டுப்பட்டவர்கள். அவர் சொன்னபடி போய்விட்டார்கள் (சிரிப்பு)
அவர்தான் ஆர்ஓஎஸ்-சுக்கு கடிதம் எழுதினார். பின்னர் அவர்தான் நீதிமன்றம் சென்றார்.
இப்போதோ நீதிமன்றம் ஒன்றரை மணி நேர தீர்ப்பை விரிவாக வழங்கியிருக்கின்றது.”
(தீர்ப்பின் முக்கிய அம்சங்கள் குறித்து டாக்டர் சுப்ரா விரிவாக தனதுரையில் விளக்கினார்)
தனிமனிதர்களாக நீதிமன்றம் சென்றார்கள்
இன்றைக்கு கட்சி இரண்டாக பிளவுபட்டு நிற்பதற்கு பழனிவேலுதான் காரணம். அவருடன் வழக்கு தொடுத்த நால்வரும் தனிமனிதர்களாக, கட்சியின் அனுமதியின்றி சென்றார்கள் என்பதை நீதிபதி தெளிவாகத் தனது தீர்ப்பில் குறிப்பிட்டிருக்கின்றார்.
அந்தத் தீர்ப்பு வந்தவுடன் நாங்கள் என்ன செய்தோம்? முறைப்படி நீதிமன்ற உத்தரவுப்படி மத்திய செயலவையைக் கூட்டினோம். அந்தக் கூட்டத்தைக் கூட்டியது 2009 மத்திய செயலவையின் தலைமைச் செயலாளர் சக்திவேல்தான். கட்சியிலிருந்து நீக்க வேண்டுமென்றால் அவரை பழனிவேல் நீக்கியிருக்கலாம்.
ஆனால், வாட்ஸ்எப் செய்தியின் வாயிலாக பழனிவேல் தெரிவித்தார் “மத்திய செயலவைக் கூட்டம் சட்டவிரோதமானது. அதில் கலந்து கொண்டால் கலந்து கொள்பவர்களை கட்சியிலிருந்து நீக்கி விடுவேன்” என்று!
கூட்டத்தை நாங்கள் கூட்டவிருந்தது மதியம் 1.30 மணிக்கு. ஆனால், காலை 11 மணிக்கே எங்களையெல்லாம் நீக்கி விட்டதாக கடிதம் எழுதிவிட்டதாக அறிவிக்கின்றார். அதுவும் அந்தக் கடிதத்தை நேற்றே கையெழுத்திட்டு விட்டதாகவும் அறிவிக்கின்றார்.
நினைத்துப் பாருங்கள். கூட்டத்தில் நாங்கள் கலந்து கொள்ளும் முன்பே, அப்படியே அது தவறு என்றாலும், அந்தத் தவறைச் செய்வதற்கு முன்பே எங்களை நீக்கி விட்டதாக அறிவிக்கின்றார். அதுவும் எப்படி?
எந்த மத்திய செயலவையை ஆர்ஓஎஸ் அங்கீகரிக்கின்றதோ, எந்த மத்திய செயலவையை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டதோ, அந்த மத்திய செயலவையின் 15 உறுப்பினர்களை இவர் கட்சியிலிருந்தே நீக்குகின்றார்.
இப்படி எல்லை மீறிப் போன இவரது சர்வாதிகாரத்தைக் கண்டுதான் இனிமேல் இவருடன் ஒத்துழைப்பதிலோ, இவரை தேசியத் தலைவராக இன்னும் ஏற்றுக் கொள்வதிலோ அர்த்தம் இல்லை என்ற முடிவுக்கு வந்தோம்.
சட்டவிதி 91இன்படி உறுப்பினர் இல்லை
பழனிவேலுவும் மற்றவர்களும் மத்திய செயலவையின் முன் அனுமதியின்றியும், ஏற்கனவே மத்திய செயலவை செய்த முடிவுக்கு எதிராகவும் நீதிமன்றம் சென்றிருப்பதால், அவர்கள் இனியும் மஇகா சட்டவிதி 91இன்படி உறுப்பினர்களாக நீடிக்க முடியுமா என்ற சட்ட ஆலோசனையை இரண்டு வழக்கறிஞர்கள் நிறுவனத்திடம் கேட்டோம்.
அந்த இரண்டு வழக்கறிஞர்கள் நிறுவனங்களுமே அவர்கள் தாங்களாகவே தங்களின் உறுப்பியத்தை இழந்து விட்டார்கள் என சட்ட ஆலோசனை வழங்கினார்கள்.
அதைத்தான் நாங்களும் அறிவித்தோம்.
இது ஒரு கசப்பான விஷயம்தான். இதுபோல செய்வது எனக்கும் பிடிக்கவில்லைதான். இது எனது இயல்பும் இல்லை. ஆனால் என்ன செய்வது சில சமயங்களில் கசப்பையும் விழுங்கித்தானே ஆக வேண்டும்?
கட்சியில் முன்னேற்றங்களை – மாற்றங்களைக் கொண்டு வருவேன்
எனது தலைமைத்துவத்தின் கீழ் கட்சியை எப்படி முன்னோக்கிச் செலுத்துவது என்பது குறித்து விரிவான திட்டங்களை வரைந்துள்ளேன்.
முதல் கட்டமாக கட்சியில் தேசியத் தலைவருக்கு அளவுக்கதிகமான அதிகாரங்கள் சர்வாதிகாரத்தனமாக குவிக்கப்பட்டிருக்கின்றன. இந்தப் பாழாய்ப் போன சட்ட அதிகாரங்கள்தான் பிரச்சனைகளுக்குக் காரணம். முதலில் அதனை ஒழிப்பதற்காக ஒரு சட்டவிதித் திருத்தக் குழுவை அமைத்து, அதிகாரங்களைக் கிளைத் தலைவர்கள் கொண்டிருக்கும் வண்ணம் மாற்றியமைப்பேன்.
அடுத்ததாக, சமூக இயக்கங்களை ஒன்று திரட்டி, அவர்களை ஒருமுகப்படுத்துவோம். மஇகாவோடு இணைந்து செயலாற்ற வைப்போம்.
மஇகா கிளைத் தலைவர்களுக்கு முறையான மான்யங்கள் கிடைக்க வேண்டும். அதற்காக ஒரு திட்டத்தை வைத்திருக்கின்றேன். எல்லாம் சரியாக வந்தால் இன்னும் மூன்று மாதங்களில் அந்தத் திட்டத்தை அறிமுகப்படுத்தி அதன் மூலம், கிளைத் தலைவர்களும் தொகுதித் தலைவர்களும் நன்கு செயலாற்ற பொருளுதவி கிடைக்கும்.
கட்சியில் ஒற்றுமையைக் கொண்டு வருவேன் – ஜாதி அரசியலுக்கு இனி சாவுமணி
எனது நோக்கமெல்லாம் கட்சியில் ஒற்றுமையைக்கொண்டு வருவதுதான். இனிமேல் ஜாதி அரசியலை நமது கட்சியில் ஒழிப்பேன். சின்ன சங்கம், பெரிய சங்கம், மேல் சங்கம், கீழ் சங்கம் என பல சங்கங்களாகப் பிரிந்து நமக்குள் அரசியல் நடத்துவதை விட்டு விட்டு அனைவரும் ஒரே சங்கமாக செயல்படுவோம்.
எனது தலைமைத்துவத்தில் அனைவருக்கும் அவரவர்களின் தகுதியின் அடிப்படையில் பொறுப்புகளும், பதவிகளும் வழங்கப்படும். நான் அனைவரும் ஒரே கட்சியாக ஒற்றுமையாக ஒன்றுபட்டு செயல்படுவதுதான் நமது கட்சியின் மதிப்பையும், வலிமையையும் மீட்டெடுப்பதற்கான ஒரே வழி”
– இவ்வாறு டாக்டர் சுப்ரா தனது உரையில் தெரிவித்தார்.