Home நாடு “செடிக்” 100 மில்லியன் கைமாறிப்போனது நாம் பிரதமரின் நம்பிக்கையை இழந்ததால்தான் – சுப்ரா விளக்கம்

“செடிக்” 100 மில்லியன் கைமாறிப்போனது நாம் பிரதமரின் நம்பிக்கையை இழந்ததால்தான் – சுப்ரா விளக்கம்

563
0
SHARE
Ad

கோலாலம்பூர், ஜூன் 22 – நேற்றைய மஇகா கிளைத் தலைவர்களின் சிறப்புப் பேரவையில் உரையாற்றிய மஇகா இடைக்காலத் தேசியத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம், சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் செடிக் (SEDIC-Socio-Economic Development of Indian Community) அமைப்பின் 100 மில்லியன் இந்திய சமுதாயத்திற்கான திட்டத்தைப் பற்றியும் விளக்கமளித்தார்.

Subra speaking-PWTC-June 21-

செடிக் என்பது இந்தியச்ப் சமுதாயத்திற்கான மான்யங்களை வழங்குவதற்காகப் பிரதமர் துறையால் ஒருங்கிணைக்கப்பட்டுள்ள ஓர் அரசாங்க மையமாகும். இதற்கென 100 மில்லியன் ரிங்கிட் ஒதுக்கப்பட்டு அதனை நிர்வகிப்பதற்கு டத்தோ என்.எஸ்.ராஜேந்திரன் நியமிக்கப்பட்டுள்ளது இந்தியச் சமூக இயக்கங்களிடையேயும், இந்தியர் அரசியல் கட்சிகளுக்கிடையேயும் பலத்த கண்டனங்களைத் தோற்றுவித்திருந்தது.

#TamilSchoolmychoice

இவ்வளவு பெரிய தொகை ஒதுக்கீடு செய்யப்பட்டும் அதனைப் பெறுவதற்குத் தேசிய முன்னணி அரசாங்கத்தில் அங்கம் வகிக்கும் மஇகா மூலமாகச் செல்ல வேண்டும் என்றில்லாமல், ஓர் அரசு ஊழியர் வசம் இந்த நிதியின் நிர்வாகம் ஒப்படைக்கப்பட்டிருப்பது இந்தியச் சமுதாயத்தில் அதிருப்திகளைத் தோற்றுவித்தது.

இது குறித்துத் தனது உரையில் கருத்துரைத்த டாக்டர் சுப்ரா “இதற்காக நாம் ராஜேந்திரனைக் குறை சொல்வதில் அர்த்தமில்லை. அவர் ஓர் அரசாங்க ஊழியர் என்ற முறையில் தனக்கு இடப்பட்ட பணியைச் செய்கின்றார். அவ்வளவுதான். ஆனால், மஇகாவின் தலைமைத்துவம் பிரதமரின் நம்பிக்கையைப் பெறுவதில் தோல்வி கண்டு விட்டது. பழனிவேல் தலைமைத்துவம் இந்த 100 மில்லியன் மான்ய ஒதுக்கீடுகளை முறையாக நிர்வாகம் செய்ய முடியும் என்ற நம்பிக்கை பிரதமருக்கும் அரசாங்கத்திற்கும் இல்லாத காரணத்தால்தான், நமது கட்சியின் பலவீனத்தால்தான் ஓர் அரசாங்க ஊழியர் வசம் இந்த நிதி ஒப்படைக்கப்பட்டுள்ளது” என்று விளக்கமளித்தார்.

“ஆனால், இனி அவ்வாறு நடந்து கொள்ளாமல் நாம் பார்த்துக் கொள்வோம். பிரதமருக்கு நம்பிக்கை ஏற்படுத்தும் வகையில் எனது தலைமைத்துத்தில் நான் நிரூபிப்பேன். அநாகரிக அரசியல் நடத்த மாட்டேன்” என்ற உறுதி மொழியையும் சுப்ரா வழங்கினார்.

“ஒன்றைத் தெரிந்து கொள்ளுங்கள். சாமியார்கள் போன்று தோற்றமளிப்பவர்கள் உண்மையிலேயே சாமியார்கள் அல்ல” என்று சுப்ரா தொடர்ந்து கூறியபோது அரங்கமே சிரிப்பால் அதிர்ந்தது.