கோலாலம்பூர், ஜூன் 23- மஇகா தலைமைத்துவத்தின் பலவீனம் குறித்து முதலில் சுய ஆத்ம பரிசோதனை செய்ய வேண்டும் என டத்தோஸ்ரீ பழனிவேலுக்கு, அம்னோ இளைஞர் பிரிவு அறிவுறுத்தி உள்ளது.
மஇகாவில் நிலவும் உட்கட்சி நெருக்கடிகளைத் தீர்ப்பதற்கு இத்தகைய பரிசோதனை அவசியம் என்றும், மாறாக மஇகா விவகாரங்களுக்காகப் பிரதமர் மீது பழிபோடக் கூடாது என்றும் அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவரான கைரி ஜமாலுடின் கூறியுள்ளார்.
“மஇகா தலைமைத்துவத்தின் பலவீனங்கள் குறித்து சுய ஆத்ம பரிசோதனை செய்யுங்கள் எனப் பழனிவேலை அம்னோ இளைஞர் பிரிவும் நானும் வலியுறுத்துகிறோம். மஇகாவில் தலைமைத்துவம் தொடர்பான பிரச்சினை நிலவுகிறது. அதனால்தான் இத்தகைய நிலை ஏற்பட்டுள்ளது. இதற்குப் பிரதமர் காரணமல்ல,” என்றார் கைரி.
தேசிய முன்னணியின் உறுப்புக் கட்சியில் நிலவும் பிரச்சினைகளுக்கு விரைவாகத் தீர்வு காணப்பட வேண்டும் என்று மட்டுமே பிரதமர் விரும்பியதாகக் குறிப்பிட்ட அவர், இதன் மூலம் இந்தியச் சமுதாயத்தின் ஆதரவு தேசிய முன்னணிக்குக் குறைந்துவிடக் கூடாது எனப் பிரதமர் கருதியதாகத் தெரிவித்தார்.
“கடந்த பொதுத்தேர்தலில் தேசிய முன்னணிக்கு இந்தியச் சமுதாயத்திடம் இருந்து நல்ல ஆதரவு கிடைத்தது. அடுத்த தேர்தலில் இந்த ஆதரவு மேலும் அதிகரிக்கும் என நம்புகிறேன்,” என்று கைரி மேலும் தெரிவித்தார்.