சிந்து மாகாணம், ஜூன் 23 – பாகிஸ்தான் நாட்டில் வெயிலின் தாக்கம் அதிகமாக இருப்பதால் இதுவரை 260 பேர் உயிரிழந்துள்ளனர் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் தென் பகுதியில் கடந்த 10 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு வெயிலின் தாக்கம் கடுமையாக உள்ளது. குறிப்பாக சிந்து மாகாணத்தில் ரம்ஜான் மாத தொடக்கத்தில் இருந்தே வெயில் சுட்டெரிக்கத் தொடங்கியது.
45 டிகிரி வரை கொளுத்தும் வெயிலைத் தாக்குப் பிடிக்க முடியாமல் முதியவர்கள் சாலையில் வசிப்பவர்கள் உட்பட பலர் பலியாகி வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், இதுவரை சிந்து மாகாணத்தில் 260 பேர் பலியாகி உள்ளதாகத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தலைநகர் கராச்சியில் மட்டும் சுமார் 150 பேர் வரை இறந்துள்ளதாகவும்,
மேலும் பலர் வெயில் காரணமாக ஏற்படும் காய்ச்சல், உடல் வறட்சி மற்றும் குறைந்த ரத்த அழுத்தம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் தீவிர சிகிச்சைப் பிரிவுகளில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால், பொதுமக்கள் தேவையின்றி வீடுகளை விட்டு வெளியில் வர வேண்டாம் எனவும், வெயிலினால் பாதிக்கப்பட்டவர்கள் மருத்துவமனைகளை அணுகவும் பாகிஸ்தான் அரசு அறிவுறுத்தியுள்ளது.