புதுடெல்லி, ஜூன் 23- ரூபாய் நோட்டின் பயன்பாட்டைக் குறைப்பதற்காக மத்திய அரசு புதிய திட்டம் ஒன்றைக் கொண்டு வந்துள்ளது. அதாவது, பற்று அட்டை(credit card) மற்றும் கடன் அட்டை ( debit card) மூலம் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.
பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலமான பரிவர்த்தனையை ( பண்டமாற்றுகையை) ஊக்கப்படுத்தவும், ரூபாய் நோட்டுப் பரிவர்த்தனையைக் குறைக்கவும் மத்திய அரசு விரைவில் புதிய நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தும் என்று மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லி தனது வரவு- செலவுத் திட்ட( budget) உரையில் கூறி இருந்தார்.
அதன்படி, ரூபாய் நோட்டின் பயன்பாட்டைக் குறைப்பதற்காகத் திட்டமிடப்பட்டுள்ள புதிய நடவடிக்கைகளை மத்திய அரசு அறிவித்துள்ளது.
இதுபற்றிய திட்ட வரைவை வெளியிட்டுள்ள மத்திய அரசு, அதுகுறித்து வருகிற 29–ந் தேதிக்குள் பொதுமக்கள் கருத்துத் தெரிவிக்கலாம் என்று கூறியுள்ளது.
இந்தத் திட்ட வரைவின்படி, பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலம் குறிப்பிட்ட அளவுக்குப் பணம் செலுத்துபவர்களுக்கு வருமான வரிச்சலுகை அளிக்கப்படும்.
பெட்ரோல் நிலையம், சமையல் எரிவாயு செயலாண்மையகம்(gas agency) ஆகியவற்றில் பணம் செலுத்த பற்று அட்டை மற்றும் கடன் அட்டை பயன்படுத்துபவர்களுக்கும், தொடர்வண்டி பயணச்சீட்டு எடுக்க இந்த அட்டைகளைப் பயன்படுத்துபவர்களுக்கும் பரிவர்த்தனைக் கட்டணம் கிடையாது.
ஒரு லட்ச ரூபாய்க்கு மேற்பட்ட பரிவர்த்தனைகள் அனைத்தும் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலம் மேற்கொள்வது கட்டாயம் ஆக்கப்படும்.
மேலும், வாடிக்கையாளர்களிடம் பற்று அட்டை மற்றும் கடன் அட்டையை ஏற்றுக்கொண்டு பொருட்கள் வழங்கும் வியாபாரிகள் மற்றும் கடைக்காரர்களுக்கு வரிச் சலுகை அளிக்கப்படும்.
பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலம் பணம் செலுத்துபவர்களிடம் பல்வேறு நிறுவனங்கள் சேவைக் கட்டணம் வசூலிக்கின்றன. அதை விலக்கிக் கொள்வது பற்றிப் பரிசீலிக்கப்படும்.
அரசுத்துறைகள் தங்களது வரி, அபராதம் மற்றும் கட்டண வசூலுக்குப் பற்று அட்டை மற்றும் கடன் அட்டை மூலம் பணம் செலுத்துவதை ஏற்கும் வசதியை உருவாக்க வேண்டும்.
ரூபாய் நோட்டுப் பயன்பாட்டைக் குறைப்பதற்கு மட்டுமின்றி, வரி ஏய்ப்பைக் குறைக்கவும், கள்ள நோட்டுப் புழக்கத்தைக் கட்டுப்படுத்தவும் மேற்கண்ட நடவடிக்கைகள் எடுக்கத் திட்டமிடப்பட்டுள்ளது.