சியோல், ஜூன் 24 – “தென் கொரியாவில் மெர்ஸ் அதிவேகமாகப் பரவி வரும் நிலையில், இந்நோய் பரவலைக் கட்டுப்படுத்த எங்களது மருத்துவமனை தவறிவிட்டது. தற்போது தென் கொரியாவில் ஏற்பட்டிருக்கும் இந்த மோசமான நிலைக்கு எங்கள் மருத்துவமனையும் ஒரு காரணம்” என சாம்சுங் தலைவர் லீ ஜே யோங் தெரிவித்துள்ளார். மேலும், இதற்காகத் தான் மக்களிடம் பகிரங்க மன்னிப்புக் கோருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
தென் கொரியாவில் இதுவரை மெர்ஸ் நோயின் தாக்கத்தால் 27 பேர் பலியாகியுள்ளனர், 179 பேர் இந்நோய் பரவலால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் பாதிக்கப்பட்டவர்களில் பெரும்பாலானோர் வேறு வேறு நோய்களுக்காகச் சாம்சங் நிறுவனத்தின் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. முதன் முதலில் இந்நோய் சாம்சங் மருத்துவமனையில் பணியாற்றிய ஊழியருக்கு தான் தாக்கியதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன. அவர் அதனைப் பொருட்படுத்தாது அம்மருத்துவமனையில் தனது பணிகளைத் தொடர்ந்துள்ளார். இதன் காரணமாக அவரிடமிருந்து இந்நோய் பலருக்குப் பரவி உள்ளது.
இது குறித்துத் தகவல் அறிந்த தென் கொரிய மக்கள், சாம்சுங் நிர்வாகத்தைக் கடுமையாக விமர்சித்தனர். இதனைத் தொடர்ந்து புதிதாக நோயாளிகளை அனுமதிக்க வேண்டாம் என்று மருத்துவமனை நிர்வாகம் கடந்த வாரம் அறிவுறுத்தியது.
இந்நிலையில், சாம்சங் நிறுவனத்தின் புதிய தலைவரான லீ ஜே யோங் நேற்று முன்தினம் தனியார் தொலைகாட்சியின் நேரடி ஒளிபரப்பில் கலந்துகொண்டு தங்கள் நிர்வாகத்தின் தவறு பற்றி வெளிப்படையாகப் பேசினார். அப்போது அவர், “எங்களது மருத்துவமனையால் நோய்ப் பாதிப்பைத் தடுக்க முடியவில்லை. மெர்ஸ் பரவுவதற்கு எங்கள் மருத்துவமனையும் ஒரு காரணமாகவிட்டது. இது எத்தகைய வலி என்பதை என்னால் உணர முடிகிறது. இதற்காக நான் எனது சிரம் தாழ்ந்து மன்னிப்பை மக்களிடம் கேட்டுக் கொள்கிறேன்” என்று கூறியுள்ளார்.
தென் கொரியாவின் மிகப் பெரிய நிறுவனமான சாம்சங், அங்கு தொழில்நுட்பம் மட்டுமல்லாது மருத்துவம் உள்ளிட்ட சேவைப் பிரிவுகளிலும் பணியாற்றி வருகிறது. இந்நிலையில், மெர்ஸ் விவகாரம் அந்நிறுவனத்தின் மீதான நன்மதிப்பைப் பெரிய அளவில் பாதித்துள்ளது.