Home அவசியம் படிக்க வேண்டியவை போபி ஜிண்டால் அமெரிக்க அதிபருக்கு போட்டி! முதல் இந்திய அமெரிக்க அதிபர் ஆவாரா?

போபி ஜிண்டால் அமெரிக்க அதிபருக்கு போட்டி! முதல் இந்திய அமெரிக்க அதிபர் ஆவாரா?

760
0
SHARE
Ad

வாஷிங்டன், ஜூன் 25 – மந்தமாகப் போய்க் கொண்டிருந்த அமெரிக்க அதிபருக்கான வேட்பாளர் தேர்வு தற்போது எதிர்பாராத விதமாகத் திடீரெனப்  பரபரப்பான, விறுவிறுப்பான கட்டத்தை எட்டியுள்ளது.

அமெரிக்காவின் லூயிசியானா ஆளுநரான (கவர்னர்) போபி ஜிண்டால் (படம்) அமெரிக்க அதிபர் தேர்தலில் குதிப்பதாக நேற்று டுவிட்டர் வழி அறிவித்ததைத் தொடர்ந்து அமெரிக்க அதிபருக்கான தேர்தல் சூடுபிடித்துள்ளது.

Bobby Jindal Louisiana Governer

#TamilSchoolmychoice

இதன்மூலம் அமெரிக்க அதிபர் தேர்தலில் களமிறங்கும் முதல் இந்திய வம்சாவளி அமெரிக்கராகப் போபி ஜிண்டால் திகழ்கின்றார். இவரது பெற்றோர் இந்தியாவின் பஞ்சாப் மாநிலத்தில் இருந்து அமெரிக்காவுக்குக் குடியேறியவர்களாவர்.

ரிபப்ளிக் எனப்படும் குடியரசுக் கட்சியைச் சேர்ந்த போபி ஜிண்டால் 2008ஆம் ஆண்டில் லூயிசியானா மாநிலத்தின் ஆளுநராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, முதல் அமெரிக்க இந்திய வம்சாவளி ஆளுநராக வரலாற்றில் இடம் பிடித்தார்.

இதனைத் தொடர்ந்து தற்போது இவர் அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடுவதாக அறிவித்துள்ளதால், கடந்த தேர்தல்களில் முதல் கறுப்பின அதிபராக ஒபாமா வெற்றி கண்டு, புதிய வரலாறு எழுதியது போல், முதல் இந்திய வம்சாவளி அதிபராக போபி வெல்ல முடியுமா என்ற ஆர்வமும், பரபரப்பும் அமெரிக்கர்களிடையே எழுந்துள்ளது.

ஜெப் புஷ்ஷை முதலில் வெல்ல வேண்டும்

தனது முயற்சியின் முதல் போராட்டமாக, குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக முதலில் போபி ஜிண்டால் வென்று காட்ட வேண்டும்.

Clinton-Bush

ஹிலாரி கிளிண்டன் -ஜெப் புஷ் 

தற்போது குடியரசுக் கட்சியின் பலம் வாய்ந்த வேட்பாளராகப் பார்க்கப்படுபவர் முன்னாள் அதிபர் ஜார்ஜ் புஷ்ஷின் தம்பியான ஜெப் புஷ் ஆவார். குடியரசுக் கட்சியின் சார்பில் பலர் போட்டியில் நிற்கும் வேளையில், இனி கடுமையான போட்டி போபி ஜிண்டால், ஜெப் புஷ் இருவருக்கும் இடையில் நிகழும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

குடியரசுக் கட்சியின் முழுமையான ஆதரவைப் பெற்றுவிட்டால் – ஜெப் புஷ்ஷையும் வென்று விட்டால் – போபி ஜிண்டால் அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ அதிபராக அறிவிக்கப்படுவார்.

ஜனநாயகக் கட்சியின் சார்பில் போட்டியில் குதித்திருக்கும் முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் மனைவி ஹிலாரி கிளிண்டன்தான் அநேகமாக ஜனநாயகக் கட்சியின் அதிபர் வேட்பாளராகத் தேர்ந்தெடுக்கப்படுவார் என எதிர்பார்க்கப்படுகின்றது.

எனவே, குடியரசுக் கட்சியின் அதிகாரப்பூர்வ வேட்பாளராக வெற்றிபெறும் தடையைத் தாண்டிவிட்டால் அடுத்து போபி ஜிண்டால் அமெரிக்க அதிபருக்கான தேர்தலில் ஹிலாரி கிளிண்டனைச் சந்திக்க வேண்டியிருக்கும்.

இவை எல்லாவற்றையும் தாண்டி போபி ஜிண்டால் – ஒபாமாவைப் போல் இன்னொரு வரலாற்றைப் படைப்பாரா – என்ற கேள்வி எழுந்துள்ளதால்தான் – அமெரிக்க அதிபர் தேர்தல் எதிர்பாராத விதமாகச் சூடு பிடித்துள்ளது.

-இரா.முத்தரசன்