Home One Line P2 அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

அமெரிக்க அதிபர் எப்படித் தேர்ந்தெடுக்கப்படுகிறார்?

1191
0
SHARE
Ad

(அமெரிக்க அதிபர் தேர்தல் நடைபெற்று முடிந்து முடிவுகள் வந்து கொண்டிருக்கும் வேளையில், அமெரிக்க அதிபர் ஒருவர் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்படுகிறார் என்பது குறித்த நடைமுறைகளைப் பகிர்ந்து கொள்கிறார் செல்லியல் நிருவாக ஆசிரியர் இரா.முத்தரசன்)

மேலோட்டமாகப் பார்க்கும்போது அமெரிக்க அதிபர் தேர்தலில் பொதுமக்கள் நேரடியாக வாக்களித்து அதில் பெரும்பான்மை வாக்குகள் பெறுபவர்தான் அதிபராக வெற்றி பெறுகிறார் என்பதுபோல் தெரியும்.

ஆனால் உண்மை அதுவல்ல!

#TamilSchoolmychoice

பொதுமக்கள் வாக்களித்தாலும் இறுதியில் அதிபராக வெல்லப் போவது யார் என்பதை இறுதியில் அவர்களின் வாக்குகள் மட்டும் நிர்ணயிக்கப் போவதில்லை. மாறாக, ஒரு சிக்கலான நடைமுறையின் கீழ் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுகின்றார்.

எப்படி என்று பார்ப்போம்!

மாநிலம் வாரியாக தேர்தல் வாக்குகள் பிரிக்கப்படுகின்றன

அமெரிக்காவின் மொத்த மாநிலங்கள் 50. அந்த 50 மாநிலங்களுக்கும் அந்தந்த மாநிலங்களின் மக்கள் தொகையைப் பொறுத்து தேர்தல் வாக்கு தொகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. எலெக்டோரல் காலேஜ் (Electoral College) என அழைக்கப்படும் இந்த வாக்குகளின் மொத்த எண்ணிக்கை 538 ஆகும். 2012, 2016 அதிபர் தேர்தல்களில் இந்த எண்ணிக்கைதான் பின்பற்றப்பட்டது. இந்த 2020 தேர்தலிலும் இதே எண்ணிக்கைதான் பின்பற்றப்படுகிறது.

மாநில வாரியாகத் தேர்தல் வாக்கு தொகுப்பு எண்ணிக்கையைக் காட்டும் வரைபடம்

இந்த 538 தேர்தல் வாக்கு தொகுப்புகளில் யார் பெரும்பான்மையைப் பெறுகிறாரோ அவரே அதிபராக வெற்றி பெற்றதாக அறிவிக்கப்படுவார்.

இந்த 538 வாக்கு தொகுப்புகள் எப்படிப் பிரிக்கப்படுகின்றன?

அமெரிக்க நாடாளுமன்றம் செனட், காங்கிரஸ் என இரண்டு அவைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது.

அமெரிக்க காங்கிரஸ் அவையில் 435 உறுப்பினர்கள் இருப்பார்கள். அமெரிக்க நாடாளுமன்ற மேலவையில் செனட்டர்கள் 100 பேர் இருப்பார்கள். பெரிய மாநிலமோ, சிறிய மாநிலமோ ஒவ்வொரு மாநிலத்திற்கும் இரண்டு செனட்டர்கள் மட்டுமே பிரதிநிதிப்பார்கள்.

ஆக இந்த இரண்டு எண்ணிக்கையையும் இணைத்தால் (435 + 100) 535 தொகுப்புகள் அல்லது இடங்கள் வரும்.

வாஷிங்டன் டி.சி வட்டாரத்திற்கு மூன்று தேர்தல் வாக்கு தொகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன. ஆக மொத்தம் 538 (535 +3).

வாஷிங்டன் டி.சி. என்பது (Washington, D.C., formally the District of Columbia) அமெரிக்க அதிபர் தங்கும் வெள்ளை மாளிகை, அமெரிக்க  நாடாளுமன்றம் ஆகியவற்றை உள்ளடக்கிய அமெரிக்கத் தலைநகர் ஆகும். இது தனிப் பிரதேசமாக அமெரிக்க அரசாங்கத்தின் நேரடி ஆளுகையின் கீழ் நிருவகிக்கப்படுகிறது.

உதாரணத்திற்கு நமது மலேசியத் தலைநகரான கோலாலம்பூர், அரசாங்க அலுவலகங்கள் இயங்கும் புத்ரா ஜெயா போல!

எனவே, வாஷிங்டன் எந்த மாநிலத்திலும் சேர்ந்திருக்கவில்லை. தனிப் பிரதேசமாக இயங்குவதால் அதன் மக்கள் தொகைக்கு ஏற்ப அந்த வட்டாரத்திற்கு 3 தேர்தல் வாக்கு தொகுப்புகள் ஒதுக்கப்படுகின்றன.

ஆக மொத்தம் 538 (435 + 100 + 3 = 538) தேர்தல் தொகுப்பு வாக்குகளை அமெரிக்கா முழுவதும் மாநிலம் வாரியாக, அந்தந்த மாநிலங்களின் மக்கள்  தொகைக்கு ஏற்ப பிரித்திருக்கிறார்கள்.

கலிபோர்னியா மாநிலத்திற்கு ஏன் அதிக வாக்குகள்?

உதாரணமாக கலிபோர்னியா மாநிலத்தை எடுத்துக் கொண்டால் அதற்கு 55 தேர்தல் வாக்குத் தொகுப்புகள் வழங்கப்பட்டிருக்கின்றன. அதிக மக்கள் தொகை கொண்ட மாநிலம் என்பதால் இந்த மாநிலத்திற்கே மிக அதிகமாக தேர்தல் தொகுப்பு வாக்குகள் வழங்கப்பட்டிருக்கின்றன.

ஆகக் குறைந்த தேர்தல் வாக்குகள் தொகுப்பு 3 ஆகும். சில சிறிய மாநிலங்கள் 3 தேர்தல் வாக்குகள் தொகுப்புகளை மட்டுமே கொண்டிருக்கின்றன.

கமலா ஹாரிஸ் – ஜோ பைடனின் துணையதிபர் வேட்பாளரான இவர் கலிபோர்னியா மாநிலத்தைச் சேர்ந்தவர்

அதிபர் தேர்தலில் வாக்காளர்களின் வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்படும்போது அந்த மாநிலத்தில் எந்த வேட்பாளருக்கு பெரும்பான்மை வாக்குகள் கிடைக்கிறதோ அந்த வேட்பாளருக்கு அந்த மாநிலத்தின் அனைத்து தேர்தல் வாக்கு தொகுப்புகளும் மொத்தமாக வழங்கப்படும்.

உதாரணமாக, இந்தத் தேர்தலில் கலிபோர்னியா மாநிலத்தில் டொனால்ட் டிரம்புக்கு 51 சதவீத வாக்குகள் கிடைத்து, 49 சதவீத வாக்குகள் ஜோ பைடனுக்கு கிடைக்கிறது என்று வைத்துக் கொள்வோம்.

அப்போது அந்த மாநிலத்தின் 55 தேர்தல் வாக்கு தொகுப்புகளும் மொத்தமாக டிரம்புக்கு சென்று விடும். விகிதாச்சாரப்படி பிரிக்கப்படாது.

எனவே, ஒரு மாநிலத்தில் வெல்லும் ஒரு வேட்பாளர் மற்றொரு மாநிலத்தில் தோல்வியடையக் கூடும். அதே வேளையில் ஒரு வேட்பாளர் அதிக தேர்தல் வாக்கு தொகுப்புகள் கொண்ட மாநிலத்தை வெல்ல வேண்டும். அப்போதுதான் அவருக்கான வெற்றி வாய்ப்பு அதிகரிக்கும்.

உதாரணமாக டிரம்ப் மூன்று அல்லது நான்கு தேர்தல் வாக்கு தொகுப்புகளைக் கொண்ட பல மாநிலங்களை வெல்லலாம். அதனால் அவரது வெற்றி சாத்தியமாகாது. கலிபோர்னியா போன்ற பெரிய மாநிலங்களில் எந்த வேட்பாளர் வெற்றி பெறுகின்றார் என்பதை வைத்துத்தான் ஒருவரின் வெற்றி நிர்ணயிக்கப்படும்.

அதிபராக வெற்றியடைய 270-க்கு கூடுதலான தேர்தல் வாக்கு தொகுப்புகளைப் பெற வேண்டும்

ஆக, இப்படியாக மாநிலங்களின் மொத்த தேர்தல் வாக்கு தொகுப்புகளின் எண்ணிக்கையான 538-இல், எந்த வேட்பாளர் 270-க்கும் கூடுதலான தேர்தல் வாக்கு தொகுப்புகளைப் பெறுகின்றாரோ அவரே அதிபராக வெற்றி பெற்றவராக அறிவிக்கப்படுவார்.

ஹிலாரி கிளிண்டன்

2016 அதிபர் தேர்தலில் மொத்த வாக்குகளில் ஹிலாரி கிளிண்டன் டொனால்ட் டிரம்பை விட 3 மில்லியன் வாக்குகள் கூடுதலாகப் பெற்றார். ஆனால், இறுதியில் தேர்தல் வாக்கு தொகுப்புகள் என்று வரும்போது, 538 தொகுப்புகளில் டிரம்ப் 304 வாக்குகளையும் ஹிலாரி கிளிண்டன் 227 வாக்குகளையும் மட்டுமே பெற முடிந்தது.

எனவே, எந்த வேட்பாளர் 270-க்கும் கூடுதலான தேர்தல் வாக்கு தொகுப்புகளைப் பெறுகிறாரோ அவரே வெற்றியாளர். பொது மக்களின் வாக்குகள் இதற்கு மறைமுகமாக உதவினாலும், நேரடியாக பொதுமக்களின் வாக்குகள் மூலம் அமெரிக்க அதிபர் தேர்ந்தெடுக்கப்படுவதில்லை.

தேர்தல் தொகுப்பு வாக்குகள் அடிப்படையில் நாடாளுமன்ற – செனட் இடங்கள் ஒதுக்கீடு

இதில் கவனிக்கத்தக்க மற்றொரு அம்சம் என்னவென்றால் ஒரு மாநிலத்தில் எத்தனை தேர்தல் வாக்கு தொகுப்புகள் இருக்கின்றனவோ, அதே எண்ணிக்கையில் அமெரிக்க மக்களவைக்கான இடங்களும் (காங்கிரஸ்) ஒதுக்கப்படுகின்றன.

உதாரணமாக, கலிபோர்னியா மாநிலத்திற்கு 55 தேர்தல் வாக்குகள் ஒதுக்கப்பட்டுள்ளன என்பதை ஏற்கனவே பார்த்தோம்.

செனட் அவைக்கு கலிபோர்னியா மாநிலம் 2 உறுப்பினர்களை மட்டுமே தேர்ந்தெடுத்து அனுப்ப முடியும்.

அமெரிக்க நாடாளுமன்றக் கட்டடம்

ஆக 55-இல் 2 போக எஞ்சிய 53 என்ற எண்ணிக்கையில் அமெரிக்க நாடாளுமன்ற காங்கிரஸ் அவைக்கு கலிபோர்னியா மாநிலம் 53 காங்கிரஸ் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுத்து அனுப்பும்.

அதாவது 55 தேர்தல் வாக்கு தொகுப்புகளைக் கொண்ட கலிபோர்னியா மாநிலம் செனட் சபைக்கு 2 செனட்டர்களையும், காங்கிரஸ் அவைக்கு 53 உறுப்பினர்களையும் ஆக மொத்தம் 55 பிரதிநிதிகளை அமெரிக்க நாடாளுமன்றத்திற்கு அனுப்பும்.

அமெரிக்க துணையதிபருக்கு வாக்களிப்பு உண்டா?

அமெரிக்க அதிபர் தேர்தலின் இன்னொரு சுவாரசியம் என்னவென்றால், பொதுமக்கள் யாரும் துணையதிபருக்கென வாக்களிப்பதில்லை. அதிபருக்கு மட்டுமே வாக்களிப்பார்கள்.

தேர்தல் முடிவில் அதிபராக யார் தேர்ந்தெடுக்கப்படுகிறாரோ அவர் பரிந்துரைக்கும் துணையதிபர் வேட்பாளர் இயல்பாகவே துணையதிபராகத் தேர்வாகி நியமனம் பெறுவார்.

அமெரிக்க துணையதிபர் வேட்பாளர்கள் கமலா ஹாரிஸ் – மைக் பென்ஸ்

அதன்படி ஜனநாயகக் கட்சியின் சார்பில் ஜோ பைடன் வெற்றி பெற்றால் இயல்பாகவே அவரது துணையதிபர் வேட்பாளரான கமலா ஹாரிஸ் துணையதிபராகத் தேர்வாகி விடுவார்.

அதேபோல, டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றால், அவரின் துணையதிபர் வேட்பாளராக மைக் பென்ஸ் துணையதிபராக மீண்டும் தேர்வு பெறுவார்.

அமெரிக்காவின் செனட் அவையும், காங்கிரஸ் அவையும்

அமெரிக்க அதிபர் தேர்தலோடு, செனட் அவைக்கும், காங்கிரஸ் அவைக்கும் தேர்தல்கள் நடத்தப்படுவதால் அவை குறித்த சில விவரங்களையும் தெரிந்து கொள்வது பொருத்தமாக இருக்கும்.

அமெரிக்க நாடாளுமன்றம் செனட், காங்கிரஸ் என இரண்டு அவைகளாகப் பிரிக்கப்பட்டிருக்கின்றது. அமெரிக்காவின் நாடாளுமன்ற மேலவை செனட் அவை என அழைக்கப்படுகின்றது. ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் இரண்டு செனட்டர்கள் தேர்வு செய்யப்படுவார்கள்.

அந்த வகையில் அமெரிக்க செனட் அவையில் 100 செனட்டர்கள் இருப்பார்கள். ஒவ்வொரு செனட்டரும் ஒருமுறை தேர்ந்தெடுக்கப்பட்டால் தலா 6 ஆண்டுகாலத்திற்குப் பதவி வகிப்பார்.

ஆனால், அனைத்து 100 செனட்டர்களும் ஒரேயடியாகத் தேர்வு செய்யப்படுவதில்லை. மொத்த செனட்டர்கள் மூன்று பிரிவாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு ஈராண்டுக்கும் தேர்தல் நடைபெறும்.

ஆக இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை செனட் அவைக்கான தேர்தல் நடத்தப்பட்டு மூன்றில் ஒரு பிரிவினர் தேர்ந்தெடுக்கப்படுவர்.

ஒருவர் எத்தனை தவணைகளுக்கு செனட்டராக இருக்க முடியும் என்ற கட்டுப்பாடு இல்லை எனவே, ஒருவர் எத்தனை தவணைகளுக்கு வேண்டுமானாலும் செனட்டராக பதவியில் நீடிக்க முடியும்.

செனட் அவையின் தலைவராக அமெரிக்கத் துணையதிபராகத் தேர்ந்தெடுக்கப்படுபவர் செயல்படுவார்.

செனட் அவையில் வாக்களிப்பின்போது, இரு தரப்புகளிலும் சரிசமமான வாக்குகள் அளிக்கப்பட்டால் செனட் அவையின் தலைவராகச் செயல்படும் துணையதிபர் நிர்ணய வாக்கை (Deciding vote) அளிக்க முடியும்.

காங்கிரஸ் அவைக்கு 435 உறுப்பினர்கள்

ஏற்கனவே குறிப்பிட்டபடி காங்கிரஸ் அவைக்கு எல்லா மாநிலங்களில் இருந்தும் மொத்தம் 435 உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்படுவார்கள். இவர்களுக்கான தேர்தல் 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை நடைபெறும்.

இரட்டைப் படை எண்ணில் வரும் ஆண்டுகளில் காங்கிரஸ் அவை உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெறும். அதன்படி இந்த ஆண்டு அதிபர் தேர்தலோடு 2020-இல் காங்கிரஸ் உறுப்பினர்களுக்கான தேர்தல் நடத்தப்படுகிறது.

அடுத்த தேர்தல் 2022-இல் நடத்தப்படும். அதற்கடுத்த தேர்தல் 2024-இல் அடுத்த அமெரிக்க அதிபர் தேர்தலோடு நடத்தப்படும்.

அமெரிக்காவின் 46-வது அதிபர் யார்?

இவ்வாறாக, பல்வேறு வித்தியாசமான தேர்தல் நடைமுறைகளோடு தேர்ந்தெடுக்கப்படுகிறார் அமெரிக்க அதிபர்!

மீண்டும் டிரம்ப் தேர்ந்தெடுக்கப்பட்டால் அவர் 45-வது அமெரிக்க அதிபராகப் பதவியில் தொடர்வார்.

ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டால் அமெரிக்காவின் 46-வது அதிபராக வரலாற்றில் இடம் பெறுவார்.

4 ஆண்டுகளுக்கு ஒருமுறை நவம்பர் மாதத்தின் முதல் செவ்வாய்க்கிழமையன்று அமெரிக்க அதிபர் தேர்தல் நடத்தப்பட வேண்டும். அதன்படிதான் நேற்று செவ்வாய்க்கிழமை நவம்பர் 3-ஆம் தேதி தேர்தல் நடத்தப்பட்டது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் யார் வெற்றி பெற்றாலும், அடுத்து வரும் ஆண்டில் ஜனவரி 20-ஆம் தேதிதான் அதிபராக அதிகாரபூர்வமாகப் பதவியேற்க முடியும் என்பது அமெரிக்க அதிபர் தேர்தல் நடைமுறையின் மற்றொரு சுவாரசிய அம்சமாகும்.

அதன்படி புதிய அதிபர் 20 ஜனவரி 2021-இல் பதவியேற்பார்.

-இரா.முத்தரசன்

தொடர்புடைய செல்லியல் காணொலிகள் :