திருவனந்தபுரம், ஜூன் 25- கேரளாவிற்கு வரும் பால், எண்ணெய், குடிநீர் மற்றும் பால் பொருட்கள் உள்ளிட்ட உணவுப் பொருட்களின் தரத்தைப் பரிசோதனை செய்வதற்காக நாட்டிலேயே முதல் முறையாகக் கேரளச் சோதனைச்சாவடிகளில் நடமாடும் ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன.
இதன்மூலம், வெளிமாநிலங்களிலிருந்து வரும் பொருட்களை ஆய்வு செய்ய கேரள அரசு அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது.
இந்த ஆய்வுக்கூடங்களை அமைக்கும் நிறுவனத்தைத் தேர்வு செய்யும் பொறுப்பு, கேரள மாநில மருத்துவப்பணிகள் கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது.
இந்த நடமாடும் ஆய்வுக்கூடங்களில் பரிசோதனை செய்யும் உணவு மாதிரிகளில் அதிகப்படியான மாசுக்கள் கலந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டால், அடுத்தகட்ட பரிசோதனைக்காகப் பின்னர் அவை, அருகில் உள்ள உணவுப் பாதுகாப்பு ஆய்வுக்கூடங்களுக்கு அனுப்பி வைக்கப்படும்.
இதுகுறித்துக் கேரள மாநில உணவுப் பாதுகாப்பு இணை ஆணையர் அனில் குமார், “நாட்டிலேயே முதல் முறையாகக் கேரளாவில் தான் இந்த நடமாடும் உணவு ஆய்வுக்கூடங்கள் அமைக்கப்படுகின்றன. அந்த வகையில் உணவுப் பாதுகாப்பு விசயத்தில் பிற மாநிலங்களுக்கு ஒரு முன்மாதிரியாகக் கேரளா திகழ்கிறது” எனத் தெரிவித்தார்.