சிங்கப்பூரின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஃபி யூ கோக், கடந்த 1979-ம் ஆண்டு எழுந்த ஊழல் புகார் காரணமாக அந்நாட்டில் இருந்து வெளியேறினார். அவர் மீதான வழக்கு இன்றும் முடிவிற்கு வராமல் உள்ளது. இந்நிலையில் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேங்காக்கில் உள்ள சிங்கப்பூர் தூதரகத்தில் சரணடைந்தார். சிங்கப்பூர் கொண்டுவரப்பட்ட அவர் மீது விசாரணை தொடங்க உள்ளது.
இது தொடர்பாக லீ சியான் லூங் தனது பேஸ்புக் பக்கத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சிங்கப்பூரில் ஊழலுக்கு எதிரான ஆட்சியைக் கடந்த 50 வருடங்களுக்கும் மேலாக நாங்கள் உருவாக்கி உள்ளோம். ஏனெனில், எந்தவொரு சூழலிலும் ஊழலுடன் நாங்கள் சமரசம் செய்து கொள்ளத் தயாராக இல்லை. எங்கள் அரசுக்கு அவமானகரமான சூழலோ, தர்மசங்கடமான நிலையோ ஏற்பட்டாலும் எங்கள் நிலைப்பாடு என்றும் மாறாது. ஃபி யூ கோக் விவகாரத்திலும் நாங்கள் இதையே கடைப்பிடிப்போம்” என்று அவர் தெரிவித்துள்ளார்.