ஐதராபாத்,ஜூன்26- ஆந்திரா மற்றும் தெலுங்கானா மாநிலங்களின் பொதுத் தலைநகராக ஐதராபாத் விளங்கி வருகிறது. இந்த இரு மாநிலங்களுக்கும் பொதுவான ஆளுநராக இ.எஸ்.எல்.நரசிம்மன் செயல்பட்டு வருகிறார்.
ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்புச் சட்டம் பிரிவு 8–ன்படி, இந்த நகரில் சட்டம், ஒழுங்கு உள்ளிட்ட பிரச்சினைகளில் ஆளுநருக்கே அதிகாரம் என மத்திய அரசு அறிவித்தது.
அரசியல் தலைவர்கள் பலரும் இதற்குக் கடுங்கண்டனம் தெரிவித்தனர்.
தெலுங்கானா முதலமைச்சர் சந்திரசேகர் ராவோ ஒருபடி மேலே சென்று, “தெலுங்கானா மாநில சட்டம்–ஒழுங்கு அதிகாரத்தைத் தங்களிடமிருந்து பறித்தால்,சாகும் வரை உண்ணாவிரதம் இருப்பேன்” என்று மிரட்டல் விடுத்தார்.
இந்த நிலையில் ஆளுநர் இ.எஸ்.எல்.நரசிம்மனை டெல்லி வருமாறு நேற்று மத்திய அரசு திடீரென அழைப்பு விடுத்தது. அதன்படி அவரும் மாலையில் டெல்லி புறப்பட்டுச் சென்றார்.
அங்கு உள்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங்குடன் அவர், இன்று காலையில் இப்பிரச்சனை தொடர்பாக ஆலோசனை நடத்துகிறார்.
இந்தச் சந்திப்பின் போது மாநில அதிகாரம் தொடர்பான முக்கியமான முடிவுகள் எடுக்கப்படும் எனத் தெரிகிறது.