Home கலை உலகம் திரைவிமர்சனம்: யாகாவாராயினும் நாகாக்க – தேவையான கருத்து!

திரைவிமர்சனம்: யாகாவாராயினும் நாகாக்க – தேவையான கருத்து!

995
0
SHARE
Ad

maxresdefaultஜூன் 26 – மனிதர்கள் மிகவும் உணர்ச்சிவசப்பட்ட சமயங்களில் வெளிப்படுத்தும் வார்த்தைகள் கத்தியை விடக் கூர்மையானதாக இருக்கும். எனவே அந்த மாதிரியான நேரங்களில் நாவை அடக்காவிட்டால், ஒரு சிறிய பிரச்சனை கூட பூதாகரமாக வெடிக்கும் இது தான் ‘யாகாவாராயினும் நாகாக்க’ படத்தின் மையக்கரு.

படத்தின் தலைப்பை வைத்தே இது தான் கதை என ஒரு முடிவுக்கு வந்தாலும், புத்திசாலித்தனமான திரைக்கதை அமைப்பின் மூலம் ரசிகர்கள் அடுத்து என்ன என்று கணிக்க முடியாத அளவிற்குப் படத்தை இறுதிவரை விறுவிறுப்பாக்கி இருக்கிறார் இயக்குநர் சத்யபிரபாஸ் பினிஷெட்டி.

ப்ரசன் ப்ரவீன் ஷ்யாமின் பின்னணி இசையும் காட்சிகளுக்கு உயிர்கொடுக்க, ‘யாகாவாராயினும் நாகாக்க’ ரசிகர்களை இறுதிவரை இருக்கையில் கட்டிப்போட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கதைச்சுருக்கம்

imageகல்லூரியில் மூன்று பணக்காரவீட்டுப் பையன்களுடன் உயிருக்கு உயிரான நட்பைக் கொண்டிருக்கும் சகா (ஆதி), அவர்களைப் பிரிய மனமின்றி இறுதி ஆண்டில் பரீட்சையைக் கூட எழுதாமல் தியாகம் செய்கிறார். நான்கு பேரும் ஒரு 6 மாதங்கள் சந்தோஷமாக ஜாலியாக ஊர் சுற்றிவிட்டு பின்னர் அவரவர் வேலையைப் பார்த்துக் கொள்ளலாம் என்று முடிவெடுக்கிறார்கள்.

சரியாக 2014 டிசம்பர் 31-ம் தேதி இரவு, நண்பர்களில் இரண்டு பேர் குடித்துவிட்டு முக்கியப் புள்ளி ஒருவரின் மகளிடம் (ரிச்சா) வம்பிழுக்க அந்தப் பிரச்சனை பூதாகரமாக வெடித்து அவர்கள் 4 பேரின் வாழ்க்கையைப் புரட்டிப் போடுகின்றது. அந்தப் பிரச்சனையில் இருந்து அவர்கள் எப்படி வெளியே வருகிறார்கள் என்பது தான் கதை.

நடிப்பு

வீட்டில் அப்பாவுக்குப் பயந்த பிள்ளையாக, நண்பர்களுக்காகத் தனது வாழ்க்கையையே தியாகம் செய்யும் அப்பாவியாக, அக்காவிடம் குறும்பு செய்யும் தம்பியாக, காதலியைக் கண்டு மிரளும் நல்ல பையனாக, எதிரிகளைத் துவம்சம் செய்யும் வீரனாக ஆதிக்குக் கனமான கதாபாத்திரம்.

அப்பாவுக்குப் பயப்படுவது, அம்மாவிடம் செல்லம் கொஞ்சுவது, அக்காவை அரட்டி உருட்டுவது என எல்லாவற்றையும் இயல்பாகச் செய்துள்ள ஆதி, காதலியைக் கண்டு மிரண்டு ஓடும் நல்ல பையனாக நடித்திருப்பதில் சறுக்கியிருக்கிறார். செயற்கையாக நடித்திருப்பதால் அவருக்கு அது சரியாகப் பொருந்தவில்லை. திரைக்கதை அந்தக் காட்சிகளில் தொய்வைச் சந்தித்ததற்கு அக்காட்சிகளின் நீளமும், நாயகியை ஒரு நாகரீகப் பெண்ணாகக் காட்ட இயக்குநர் கையாண்ட விதமும் இன்னொரு காரணம்.

நிக்கி கல்ராணி அறிமுகமே தடாலடியாக இருந்தது என்றாலும் கதையின் இரண்டாம் பாதியில் எங்கே சென்றார் என்றே தெரியவில்லை. புல்லட்டில் தில்லாக வலம் வருவது, ஆதியை விரட்டி விரட்டிக் காதலிப்பது, மதுக்கடையில் பீரும், பெட்டிக்கடையில் ஆணுறையும் வாங்கிக் கடைசியில் ஆதியை ஏமாற்றுவது என நாகரீக மங்கையாக நடித்திருக்கிறார். அவ்வளவு தான். ஆனால் கதாப்பாத்திரத்தின் மீது நமக்கு ஏனோ பெரிய ஈர்ப்பு வரவில்லை.

வழக்கம் போல் மகனைத் தண்டச்சோறு என்று திட்டிக்கொண்டிருக்கும் கதாப்பாத்திரத்தில் நரேன் நடித்திருக்கிறார்.

கதையில் சிறிது நேரம் வந்தாலும் ரிச்சா பெல்லோட்டும், லஷ்மிப் பிரியா சந்திரமௌலியும் மிரட்டியிருக்கிறார்கள். ரிச்சாவின் கண்களே காட்சிகளுக்கு உயிர் கொடுக்கிறது. “டேய் யாருகிட்ட பிரச்சனை பண்ணியிருக்குறீங்க தெரியுமா? நாளைக்குக் காலையில நீங்க யாரும் உயிரோட இருக்கமாட்டீங்க.” என்று மிரட்டுவதும், “இப்ப தொடுறா பார்ப்போம்” என்று போலீஸ் இன்ஸ்பெக்டரைக் கன்னத்தில் பளார் பளார் என அறைவதுமாக ரிச்சா நடிப்பில் ஆச்சர்யமூட்டியிருக்கிறார்.

அடுத்ததாக, படத்தின் இரண்டாம் பாதி முழுவதையும் தனது தனித்துவமான நடிப்பால் மிரட்டியிருக்கிறார் மிதுன் சக்ரவர்த்தி (முதலியார்) தமிழுக்கே வரப்போவதில்லை என்று சொல்லிக்கொண்டிருந்தவரை எப்படியோ தமிழ்ப் படத்தில் நடிக்க வைத்துவிட்டார்கள். முகபாவனைகளால் பெரிதும் ஈர்க்கிறார். “ஒருத்தரக் காப்பாத்த இன்னொருத்தன் உயிரைக் கொடுக்க நினைக்கற நீங்க கண்டிப்பா இதை செஞ்சிருக்க மாட்டீங்க” என மிதுன் சக்கரவர்த்தி பேசும் ஒவ்வொரு வசனங்களிலும் அந்தக் கதாப்பாத்திரத்திற்கே உரிய ஆளுமையும், அனுபவமும் தெரிகின்றது.

திரைக்கதை

Aadhis-Yagavarayinum-Naa-Kaakka-gets-ready-to-hit-the-screens

தொடக்கத்தில் படம் எதோ சைக்கோத்தனமாக தொடங்கி, ஆதி துப்பாக்கி வாங்கச் செல்வது, மும்பையில் முதலியாரைத் தேடி அலைவது, அவரது நண்பர்கள் தலைமறைவாக இருப்பது என பல முடிச்சுகள் போடப்படுகின்றது. பிறகு ஒவ்வொன்றாக ஆதி சொல்லச் சொல்ல வேக மெடுக்கும் திரைக்கதை, நிக்கி கல்ராணி அறிமுகத்திற்குப் பிறகு ஏற்குறைய அரை மணி நேரத்திற்குத் தொய்வடைகின்றது.

ஆனால், முதலியார் அறிமுகத்திற்குப் பிறகு மீண்டும் வேகமெடுக்கும் திரைக்கதை, பல திருப்பங்களுடன் விறுவிறுப்பாக நகர்ந்து, இறுதியில் இனிமையாக முடிகின்றது. காதல் காட்சிகளில் கூடுதல் கவனமும், காட்சிகளின் நீளத்தையும் குறைத்திருந்தால் நன்றாக இருந்திருக்கும்.

அதே நேரத்தில், சொல்ல வந்த கருத்தை நேரடியாகச் சொல்லியிருக்கலாம். தேவையில்லாமல் கதைக்குள் சூர்யா – லஷ்மிப் பிரியா காதலைக் கொண்டு வந்து முடிச்சுகளைப் போட்டிருப்பது கதையை வேறு கோணத்தில் திருப்பிவிட்டது.

ஒளிப்பதிவு, இசை

ஒளிப்பதிவு மிகவும் ரசிக்க வைத்தது. குறிப்பாக ஆந்திராவில் விடியலும், மும்பை இருட்டும், பாடல் காட்சிகளில் ஹைடெக் வாழ்க்கையையும் அழகாகப் படம் பிடித்திருக்கிறார் சண்முகசுந்தரம்.

யாகாவாராயினும் நாகாக்க பாடல், விதை விதை, சோக்கான பாடல்கள் கேட்கும் ரகம். சோக்கான பாடலை ஆதியே பாடியிருக்கிறார்.

மொத்தத்தில் யாகாவாராயினும் நாகாக்க – தேவையான கருத்து!

 – ஃபீனிக்ஸ்தாசன்