Home நாடு இனி கட்சித் தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்துவோம்: டாக்டர் சுப்ரா

இனி கட்சித் தேர்தலை நடத்துவதில் கவனம் செலுத்துவோம்: டாக்டர் சுப்ரா

709
0
SHARE
Ad

ஜோகூர்பாரு, ஜூன் 28 – மஇகாவில் எழுந்திருக்கும் புதிய அரசியல் சூழல்கள், பழனிவேல் அமைச்சர் பதவியை இழக்கக் கூடிய அபாயம் ஆகியவற்றுக்கு இடையில், அமைச்சர் பதவிகள் குறித்து தற்போது யோசிக்கவில்லை என மஇகா இடைக்காலத் தலைவர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியம் தெரிவித்துள்ளார்.

தற்போது கட்சித் தேர்தலை நடத்துவதிலேயே முழுக் கவனம் செலுத்தி வருவதாகவும் ஜோகூர்பாருவில் செய்தியாளர்களிடம் பேசிய அவர் கூறினார்.

subra-health-dentists-1“சங்கப் பதிவக உத்தரவுக்கேற்ப மஇகாவில் உட்கட்சித் தேர்தல்களை நடத்துவதுதான் தற்போது எங்கள் முன் உள்ள முக்கிய சவால்,” என்று டாக்டர் சுப்ரா குறிப்பிட்டார்.

#TamilSchoolmychoice

மஇகா உறுப்பியத்தை டத்தோஸ்ரீ பழனிவேல் இழந்துவிட்டதாக சங்கப் பதிவகம் அறிவித்துள்ள நிலையில், அமைச்சரவையில் பழனிவேல் நீடிப்பது குறித்து விரைவில் முடிவெடுக்கப்படும் என பிரதமர் நஜிப் கூறியுள்ளார்.

இதுகுறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, “அமைச்சரவை குறித்து தீர்மானிப்பது பிரதமரின் தனி உரிமை,” என்றார் சுப்ரா.

தற்போது மத்திய அமைச்சரவையில் மஇகா சார்பில் பழனிவேல் (இயற்கை வளம் மற்றும் சுற்றுச்சூழல் அமைச்சு) மற்றும் டாக்டர் சுப்ரமணியம் (சுகாதார அமைச்சு) ஆகிய இருவரும் முழு அமைச்சர்களாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், சங்கப் பதிவகத்தின் கடிதத்தில் உள்ள சாராம்சங்களை டாக்டர் சுப்ரா தரப்பினர் திரித்துக் கூறுவதாக டத்தோ சோதிநாதன் எழுப்பியுள்ள குற்றச்சாட்டை டாக்டர் சுப்ரா திட்டவட்டமாக மறுத்துள்ளார்.

“சங்கப்பதிவகம் என்பதும் அரசாங்க அமைப்பு (நிறுவனம்). அதற்கெனத் தனிச் சட்டங்கள் மற்றும் சட்டத்துறை உள்ளன. எனவே எத்தகைய முடிவையும் எடுப்பதற்கு முன்னர் உரிய சட்டப்பூர்வ நடைமுறைகளைச் சங்கப்பதிவகம் பின்பற்றும்,” என்று டாக்டர் சுப்ரா மேலும் தெரிவித்தார்.