கோலாலம்பூர், ஜூன் 28 – குடியிருப்பு மற்றும் புறநகர்ப் பகுதிகளில் உள்ள 24 மணி நேர உணவகங்களுக்கு அரசு தடை விதிக்காது எனப் பிரதமர் நஜிப் அறிவித்துள்ளார்.
தற்போதுள்ள விதிமுறைகள் மாற்றப்படாது என்று குறிப்பிட்டுள்ள அவர், அந்த உணவகங்கள் 24 மணி நேரம் இயங்குவது தொடர்பில் எந்தவிதப் பிரச்சினையும் இல்லை என்றார்.
“அந்த உணவகங்கள் இயங்கும் நேரமானது பலருக்கு வசதியாகவும், உதவியாகவும் உள்ளது. சொந்தமாகத் தொழில் செய்வோர் இதன் மூலம் வருமானம் பெறுவர். அதேசமயம் உணவகங்கள் திறந்திருக்கும் நேரத்துக்குக் கட்டுப்பாடுகளை விதித்தால், அது பலருக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தும்,” என்று செய்தியாளர்களிடம் பேசிய நஜிப் கூறினார்.
நாடு முழுவதும் சமூகச் சீர்கேடுகள் அதிகரிக்க 24 மணி நேர உணவகங்களே முக்கியக் காரணம் எனப் புகார்கள் எழுந்திருப்பதாகவும், எனவே அந்த உணவகங்கள் இயங்கும் நேரம் தொடர்பில் சில கட்டுப்பாடுகளை விதிப்பது குறித்த பரிந்துரை இருப்பதாகவும் பிரதமர் துறை அமைச்சர் டத்தோஸ்ரீ ஷாஹிடான் காசிம் வியாழக்கிழமை தெரிவித்திருந்தார்.
துணைப் பிரதமர் தலைமையிலான தேசிய சமூக மன்றத்திடம் இது தொடர்பான அறிக்கையும், பரிந்துரையும் அளிக்கப்படும் என்றும் அவர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.