கோலாலம்பூர், ஜூன் 27 – மஇகா விவகாரங்கள் தொடர்பில் சங்கப் பதிவகம் பிறப்பித்துள்ள உத்தரவுகளை அனைத்துத் தரப்பினரும் ஏற்க வேண்டும் எனப் பிரதமர் துறையின் முன்னாள் துணை அமைச்சர் டத்தோ டி.முருகையா கேட்டுக் கொண்டுள்ளார்.
இது தொடர்பாக இன்று வெளியிட்ட அறிக்கை ஒன்றில், டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்திற்குப் பிளவுபடாத ஆதரவை வழங்குவதன் மூலமே மஇகாவும் இந்தியச் சமுதாயமும் வளர்ச்சி காணும் என்றும் அவர் மேலும் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
“கடந்த பல மாதங்களாக மஇகாவில் நீடித்து வந்த பல்வேறு குழப்பங்களுக்கும் நிலையற்றத் தன்மைக்கும் சங்கப் பதிவகத்தின் உத்தரவுகள் முற்றுப்புள்ளி வைத்துள்ளன. அந்தப் புள்ளியில் இருந்து நல்ல தொடக்கம் ஏற்பட வாய்ப்பு உருவாகி உள்ளது. அந்த நல்ல தொடக்கமாக டத்தோஸ்ரீ டாக்டர் சுப்ரமணியத்தின் தலைமைத்துவம் அமையும் என இந்தியச் சமுதாயம் உறுதியாக நம்புகின்றது” என்றும் முருகையா கூறியுள்ளார்.
“இருள் சூழும் போதுதான் வெளிச்சத்தின் அருமை, முக்கியத்துவம் தெரியவரும். அந்த வகையில் மஇகாவை சூழ்ந்த இருள் விலகிப் புதிய தலைமைத்துவம் எனும் வெளிச்சம் ஏற்பட்டிருக்கிறது. டத்தோஸ்ரீ சுப்ரமணியம் தலைமைப் பண்புகளும் நிர்வாகத் திறனும் கொண்டவர். அவரது வழிகாட்டுதலில் இந்திய சமுதாயத்திற்கு மஇகா ஆற்ற வேண்டிய கடமைகள் அணிவகுத்து நிற்கின்றன. தற்போதுள்ள சூழ்நிலையில் அவரது தலைமைக்கு மஇகாவினர், அவர்கள் எத்தரப்பைச் சேர்ந்தவர்களாக இருப்பினும் பிளவுபடாத ஆதரவை வழங்க வேண்டியது காலத்தின் கட்டாயம்,” என்று புக்கிட் கந்தாங் தொகுதியின் மஇகா கிளைத் தலைவர்களில் ஒருவருமான டத்தோ முருகையா தெரிவித்துள்ளார்.
கடந்த காலங்களில் மஇகாவில் ஏற்பட்ட குழப்பங்கள் காரணமாக இந்தியச் சமுதாயத்திற்குக் கிடைக்க வேண்டிய பலன்கள் தேங்கிக் கிடப்பதாகக் குறிப்பிட்டுள்ள அவர், அத்தகைய நிலை மாறி சமுதாயம் மேன்மை அடைவதற்கான வழிமுறைகளை மஇகா உடனடியாகக் கண்டறிய வேண்டியது அவசியம் என்று கூறியுள்ளார்.
இதற்கு டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தின் தலைமைத்துவம் நிச்சயம் உரிய வழியைக் காட்டும் என நம்ப முடிகிறது என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
“நல்ல தொடக்கம் என்பது வெற்றியை நோக்கி எடுத்து வைக்கும் முதல் அடி என்பது அனுபவ வாக்கு. அந்த வகையில் டத்தோஸ்ரீ சுப்ரமணியத்தின் தலைமைத்துவத்துக்குச் சுமார் 2800 கிளைத்தலைவர்களும் 95க்கும் மேற்பட்ட தொகுதித் தலைவர்களும் ஆதரவளித்துள்ளனர். வெற்றியை நோக்கிய இந்தப் பயணம் பீடுநடை போட வேண்டும். இதற்கு மேலும் கட்சிக்குள் புதிய அணிகளை உருவாக்காமல், அனைவரும் டாக்டர் சுப்ரமணியத்தின் தலைமைத்துவம் எனும் குடையின் கீழ் நின்று இந்தியச் சமுதாயத்தின் மேன்மைக்குப் பாடுபட வேண்டும்,” என டத்தோ முருகையா மேலும் வலியுறுத்தி உள்ளார்.