புதுடில்லி, ஜூன்27- புனித கங்கை நதியைச் சுத்தப்படுத்துவதைக் கனவுக் கொள்கையாகக் கொண்டுள்ள, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு, நதிக்கரையோரம் அமைந்துள்ள தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஓட்டல்கள் மற்றும் ஆசிரமங்களின் கழிவுகள், நதியில் கலக்காமல் தடுக்கும் வகையில், தர நிர்ணயக் குறியீடு மற்றும் நிதியுதவி வழங்க முடிவு செய்துள்ளது.
கங்கை நதி பாயும் உத்தரகாண்ட், உத்தரப் பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் மற்றும் மேற்கு வங்க மாநிலங்களில், நதிக்கரையோரம் ஆயிரக்கணக்கான பெரிய தொழிற்சாலைகள் உள்ளன.
தொழிற்சாலைக் கழிவுகளை நதியில் கலக்கக் கூடாது என மத்திய அரசு உத்தரவிட்டும், காலங்காலமாகக் கழிவுகளைக் கங்கை நதியில் கலந்து பழகிப் போன தொழிற்சாலைகள், நிறுவனங்கள், ஆசிரமங்கள் போன்றவை கழிவுகளை வெளியேற்றுவதைத் தடுக்க முன்வரவில்லை.
எனவே,தொழிற்சாலைகளுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் விதத்திலும், இனிமேலும் மாசுகளை நதியில் கலக்க விடாமல் தடுக்கும் நோக்கிலும் ஸ்டார் ரேட்டிங் எனப்படும் நட்சத்திரக் குறியீடு வழங்கமுடிவு செய்துள்ளது.
மின்னணுப் பொருட்களின் மின் பயன்பாட்டுத் திறனுக்கேற்றபடி, நட்சத்திரக் குறியீடு வழங்கப்படுவது போல், தொழிற்சாலைகளின் கழிவுகள் ஆற்றில் கலப்பதற்கு ஏற்றபடி நட்சத்திரக் குறியீடு வழங்கவும், அதிக நட்சத்திரக் குறியீடு பெற்ற நிறுவனங்களுக்கு, நிதியுதவி, கடனுதவி போன்ற சலுகைகள் வழங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
‘நிர்மல் கங்கைத் தர நிர்ணயம்’ என்ற இந்தத் திட்டத்தைக் கங்கை நதி துாய்மைப்படுத்துதல் துறை அமைச்சர் உமா பாரதி விரைவில் வெளியிட உள்ளார்.
நட்சத்திரக் குறியீடு வழங்கும் முறை:
மாசுகளை நேரடியாகக் கங்கை நதியில் கலக்காமல், பிற வழிகளில் நதியை மாசுபடுத்தும் நிறுவனங்களுக்கு 1 நட்சத்திரம் *
கழிவுகளை மறுசுழற்சி செய்து, அவற்றை நதியில் விடாமல் பிற வழிகளில் மேலாண்மை செய்யும் நிறுவனங்களுக்கு 2 நட்சத்திரம் **
கங்கை நதிக்கரையோரம் இருந்த போதிலும், மாசுகளை நதியில் கலக்காமல் இருக்கும் நிறுவனங்களுக்கு 3 நட்சத்திரம்***
நட்சத்திரக் குறியீடு எண்ணிக்கை அதிகமாகும் போது, அந்த நிறுவனம், கங்கை நதியை மாசுபடுத்தாத, நதியைப் பாதுகாக்கும் நிறுவனம் என்பது புலனாகும்.
இதற்காக, வித்தியாசமான நட்சத்திரக் குறியீடு வடிவமைக்கப்பட உள்ளது.